வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. பலாப்பழத்துடன் கிளம்பிய மன்சூர் அலிகான்! – ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்?
மக்களவை தேர்தலில் வேலூரில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் கிலோக்கணக்கில் பலாப்பழத்துடன் பிரச்சாரத்திற்கு புறப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தலில் பல்வேறு பெரிய கட்சிகளும் போட்டியிடும் நிலையில் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த கட்சி பதிவு வேலைகள் நிலுவையில் இருந்தாலும் சுயேட்சையாக மக்களவை தேர்தலில் களம் இறங்கியுள்ளார் மன்சூர் அலிகான்.
வேலூர் தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த், பாஜகவின் ஏசி சண்முகம் உள்ளிட்டோரை எதிர்த்து களம் இறங்கியுள்ள மன்சூர் அலிகானுக்கு அவர் கேட்ட பலாப்பழம் சின்னத்தையே வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். அதுபோல ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டதுமே பிரச்சாரத்தில் இறங்கியுள்ள மன்சூர் அலிகான் நிறைய பலாப்பழங்களை வாங்கி சென்று வெட்டி எடுத்து சுளைகளை மக்களுக்கு கொடுத்து தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
இதுகுறித்து பேசிய அவர் “பலாப்பழம் சின்னத்தை முதலில் கேட்டது நான்தான். எனக்கு அது கிடைத்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ், டிபிஎஸ் யாருக்கு சின்னம் ஒதுக்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லை. விறகு வாங்கலையோ விறகு என கூவி விற்பது போல பலாப்பழத்தை தலையில் வைத்துக் கொண்டு தொகுதி முழுவதும் சுற்றி வந்து பிரச்சாரம் செய்வேன். நான் வெல்வது உறுதி” என பேசியுள்ளார்.
மேலும் ஓபிஎஸ் குறித்து பேசியபோது, ஜெயலலிதா இறந்தபோது ஓபிஎஸ்தான் முதல்வராக இருந்தார், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அதை விசாரணை செய்ய வேண்டும் என பலமுறை நான் கூறியிருக்கிறேன். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்க்க நான் பலமுறை முயன்றபோதும் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K