1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (17:25 IST)

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..! இன்று வெளியாக வாய்ப்பு..!!

modi amithsha
மக்களவைத் தேர்தலுக்கான 100 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்றே வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஒருபுறம் பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், மறுபுறம் இந்தியா கூட்டணியும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டில்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத்தலைவர்கள் இன்று நள்ளிரவில் உயர்மட்டக் கூட்டத்தில் ஈடுபடுகின்றனர். 
 
அப்போது 550 வேட்பாளர்களுக்கான பட்டியல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் மன்சுக் மாண்டவியா, புஷ்கர் சிங் தாமி, பூபேந்திர யாதவ், யோகி ஆதித்யநாத், ஜோதிராதித்ய சிந்தியா, கேசவ் மவுரியா ஆகியோர் பாஜக தலைமையகத்தில் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அப்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

 
தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் தொடர்பாக இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படமாட்டாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே, 100 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.