1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (11:37 IST)

கண் அசைவே போதும்.. மொத்தமா கண்ட்ரோல் பண்ணலாம்! – அசர வைக்கும் Apple Vision Pro!

Apple vision pro glass
பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால திட்டமான Apple Vision Pro தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் பலரையும் அசர வைத்துள்ளது.



தொழில்நுட்ப உலகில் மற்ற நிறுவனங்களை விடவும் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பங்களை சந்தையில் இறக்கி அசரடிக்கும் நிறுவனம் ஆப்பிள். புதிய புதிய தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தி வரும் ஆப்பிள் தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் WWDC 2023 தொழில்நுட்ப மாநாட்டில் புதிய ஆப்பிள் உபகரணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் தொழில்நுட்ப அப்டேட் கொண்ட பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான Apple Vision Pro வை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். நம்மிடம் மொபைல் போன், ஹெட்செட், லேப்டாப், டிவி, ஹோம் தியேட்டர் என எல்லாம் தனித்தனி உபகரணங்களாக இருக்கிறது, இவையெல்லாம் ஒரே சாதனமாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படியான ஒன்றுதான் ஆப்பிள் வெளியிட்டுள்ள Apple Vision Pro.

Apple vision pro


பார்க்க கண்ணாடி போல இருக்கும் இதில் காதுகளுக்கு அருகே ஹெட்போனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த Apple Vision Pro சாதனமானது Spatial Computing method ல் செயல்படுகிறது. இந்த கண்ணாடி VR Glass போல அணிந்து கொண்டவுடன் எதிரே இருப்பவற்றை மறைத்து விடாது. எதிரே உள்ள சாதாரண காட்சியின் மீதே விஷன் ப்ரோ திரை விரியும்.

நாம் கண்ணை நகர்த்துவதை கொண்டும் சிமிட்டுவதை கொண்டும் அதில் உள்ள அப்ளிகேஷன்களை க்ளிக் செய்யவும், ஸ்க்ரோல் செய்யவும் முடியும். புத்தகங்கள் படித்தல், படம் பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது என சகலத்தையும் இதில் கண்களை வைத்தே செய்து விட முடியும். அதுபோல படம் பார்க்கும் போது 100 ft வரை திரையை பெரிதாக்கி ஒரு தியேட்டரில் படம் பார்க்கும் உணர்வை கொண்டு வர முடியும். தேவையென்றால் திரையை சிறிதாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.

Apple vision pro


அதுபோல ஆப்பிள் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதை இந்த Apple Vision Pro அணிந்ததும் அதற்கு மாற்றிக் கொண்டு தொடர்ந்து பணியாற்ற முடியும். ஒரே சமயத்தில் பல டேப்களை பயன்படுத்த முடியும். அயர்ன் மேன் படத்தில் வருவது போல காற்றிலேயே கையை அசைத்து நம்மை சுற்றி 360 ஆங்கிளுக்கு எந்த இடத்திலும் எந்த அப்ளிகேசன்களையும் சுற்றி வைத்துக் கொண்டு சுற்றி சுற்றி வேலை செய்யலாம். கையசைவிலேயே ஒரு டாக்குமெண்ட்டை, படத்தை எடுத்து மற்றொரு இடத்தில் எளிதாக பேஸ்ட் செய்யவும், எடிட் செய்யவும் முடியும்.

Apple vision pro


நாம் எடுத்த புகைப்படங்கள் மற்றும் கேலரிகளை 3டி வடிவில் கன்வெர்ட் செய்து பார்க்க முடியும். சாதாரண படங்களாக இருப்பவற்றை Panorama View உடன் கூடிய 3டி வடிவில் மாற்றி பிரம்மாண்டமாக காட்டுகிறது இந்த Apple Vision Pro . வீடியோ கால், வாய்ஸ் கால்களை இதை அணிந்து கொண்டே பார்த்து பேச முடியும். இந்த Apple Vision Pro கண்ணாடியை அணிந்திருக்கும்போது யாராவது முன்னால் வந்தாலும் அவர்களை பார்த்து பேசவும் முடியும்.

Apple vision pro


இவ்வாறு இன்னும் ஏராளமான பயன்பாடுகள், அனைத்து சௌகரியங்களையும் கொண்ட இந்த அதிசய கேட்ஜெட் தொழில்நுட்ப உலகில் ஒரு பெரும் புயலை ஏற்படுத்த உள்ளது.

இவ்வளவு அம்சங்கள் கொண்ட இந்த Apple Vision Pro கேட்ஜெட்டின் விலை 3,499 டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ.2,88,742. விலை அதிகமாக இருந்தாலும் காசுக்கு ஏற்ற தோசைதான் இந்த Apple Vision Pro.