மும்பை அணிக்கு பதிலடி தருமா கொல்கத்தா? ஈடன் கார்டனில் இன்று மோதல்
ஐபிஎல் டி20தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.
ஐபில் தொடரின் 41-வது ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளுக்கும் இது 11-வது போட்டியாகும், கொல்கத்தா அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 5 போட்டியில் தோற்றுள்ளது. மும்பை அணி 10 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வென்று, 6 போட்டியில் தோற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கடுமையாக போராடும், அதேபோல் கொல்கத்தா அணி முந்தைய லீக் போட்டியில் மும்பை அணியிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.