1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By Sasikala

தமிழர் திருநாளன்று கதிரவன் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்...?

தமிழர் திருநாளான பொங்கல் அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை இடித்து முறத்தால் புடைத்து பொங்கல் வைப்பதற்கு தேவையான சத்துள்ள பச்சரிசியை அவர்கள் தயார் செய்வார்கள். 

பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மெழுகுவார்கள். 
 
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். 
 
வீட்டின் முற்றத்தில் அடுப்பு வைத்து, அடுப்பைச் சுற்றி, மூன்று கரும்புகளை முக்கோண வடிவத்தில் வைத்து, அதனுடன் இஞ்சி, மஞ்சள் செடியினையும் நட்டு நிறுத்தியிருப்பார். இவை எல்லாமே மாக்கோலத்தின் மேல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
 
மண் பானையை சுத்தமாகக் கழுவி அதைச் சுற்றிலும் அழகாக கோலமிட்டு மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம்  ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பார்கள்.
 
எரிப்பதற்குக் காய்ந்த ஓலைகளையும், குச்சிகளையும் மட்டுமே பயன்படுத்துவார்கள். அதன் பின்னர் பச்சரிசியை களைந்து அதனை, குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டே பானையில் போடுவார்கள். பிறகு எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்துகொண்டே இருக்கும். பொங்கும் நேரத்தில் வலம்புரிச்  சங்கெடுத்து ஊதுவார்கள். அதனையடுத்து வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை எழுப்புவார்கள். அதனையடுத்து பொங்கலோ பொங்கல் என்று அனைவரும்  ஆர்பரித்து கூறுவார்கள்.
 
பொங்கலை குலதெய்வத்திற்கும், கதிரவனுக்கும் படைத்த பின்பு அனைவரும் அமர்ந்து ஒன்றாக சாப்பிடுவார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்தது தமிழக கிராமத்து பொங்கல் பண்டிகையாகும்.