கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரமோற்சவ திருவிழா.. தேரோட்டம் தேதி அறிவிப்பு..!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி சுவாமி கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. "பூலோக வைகுண்டம்" என்று போற்றப்படும் இந்தத் திவ்யதலம், மற்ற கோவில்களுக்கு மாறாக தனிச் சிறப்பாக 'சொர்க்க வாசல்' இல்லாமல் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம் மற்றும் சித்திரை பெருவிழா ஆகியவை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம் இன்று அதாவது டிசம்பர் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக, உற்சவர் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயார்களுடன் கொடிமர முன்பு எழுந்தருளி, விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் பாடி, நாதஸ்வர மேளதாளத்தின் முழக்கத்துடன் கொடிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர், கருடாழ்வாரின் உருவம் உள்ள கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமி சிறப்பு அலங்கார வாகனங்களில் வீதிஉலா செல்வது வழக்கம்.
முக்கிய நிகழ்வுகளில், வரும் 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் மற்றும் 14-ந்தேதி தைப்பொங்கல் நாளில் தேரோட்டம் இடம்பெறும் என்று கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
Edited by Mahendran