டெஸ்ட் போட்டிகளில் கில் அப்படி விளையாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்… சுனில் கவாஸ்கர் அறிவுரை!
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.
இந்திய அணி சார்பில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் சில வீரர்களில் ஷுப்மன் கில்லும் ஒருவர். ஆனால் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் அளவுக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் தன்னுடைய ஃபார்மை கண்டுபிடிக்கவில்லை. இதன் காரணமாக அவரின் பேட்டிங் ஆர்டரை மாற்ற இந்திய அணியில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கில் பற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் “டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒருநாள் போட்டிகளுக்கும் வித்தியாசம் உள்ளது. சிவப்பு பந்து விலகிச் செல்லும், அதிகம் பவுன்ஸ் ஆகும். அதனால் அவர் ஒருநாள் போட்டிகள் போல ஆக்ரோஷமாக விளையாடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.