40 வயதில் உலகக்கோப்பையில் விளையாடுவேன் - தடை விதிக்கப்பட்ட வீரர் நம்பிக்கை!
2023 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் உலகக்கோப்பையில் தன்னால் பங்கேற்க முடியும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய இரு தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.
அதன் பின் சட்ட ரீதியாக பல போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகாலமாக அதை குறைத்தார். இப்போது அவரது தண்டனைக் காலம் செப்டம்பர் மாதத்தோடு முடியும் நிலையில் உடல்தகுதியை நிரூபித்தால் அவர் கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
இந்நிலையில் தடை நீக்கம் குறித்து பேசும் போது ‘2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தன்னால் விளையாட முடியும்’ என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இப்போது 37 வயதாகும் ஸ்ரீசாந்துக்கு 2023 ஆம் ஆண்டு 40 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.