பயிற்சியாளர் கைது இல்லை.. கபடி வீராங்கனைகள் தமிழகம் திரும்ப ஏற்பாடு: தமிழக அரசு விளக்கம்..!
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வந்த கபடி போட்டியின் போது, தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, தமிழக அரசு அதிரடி விளக்கம் வழங்கியுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழக வீராங்கனைகள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் தமிழகம் திரும்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இயக்குனர் பஞ்சாப் மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், தமிழக கபடி அணி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டது உண்மை இல்லை என்றும், அவரிடம் சில விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva