திடீரென்று வந்த ஐபிஎல் வாய்ப்பு… திருமணத்தைத் தள்ளிவைத்த ரஜத் படிதார் குடும்பம்
RCB அணியின் இளம் வீரர் ரஜத் படிதார் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்துக் கலக்கினார்.
ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் முடிந்து தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் குவாலிபயரில் வெற்றி பெற்ற குஜராத் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டது. இதையடுத்து மற்றொரு எலிமினேட்டர் போட்டியில் RCB அணியும் லக்னோ அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார்.
ஆனால் இந்த சீசனில் அவர் முதலில் RCB அணியால் எடுக்கப்படவில்லை. ஆனால் அணியில் உள்ள வீரர் ஒருவர் காயத்தால் வெளியேற, மாற்று வீரராக அணிக்குள் இணைந்தார் படிதார். ஆனாலும் முதலில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இறுதிப் போட்டிகளில் மட்டுமே அணிக்குள் இடம் கிடைத்தது. இப்படி போராடி வாய்ப்பை பெற்ற அவர் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
இந்நிலையில் படிதாரின் தந்தை மனோகர் படிதார் “எங்கள் மகனுக்கு மே 9 ஆம் தேதி திருமணம் செய்யலாம் என நிச்சயித்திருந்தோம். மிகவும் எளிமையாக ஹோட்டலில் நடத்த திட்டமிட்டோம். ஆனால் திடீரென்று அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு வந்ததை அடுத்து திருமணத்தை தள்ளிவைத்தோம்” எனக் கூறியுள்ளார்.