வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:39 IST)

அப்ரிடி இல்லாதது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியா… செம்மயான பதில் கொடுத்த இர்பான் பதான்!

நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிடி விலகியுள்ளார்.

தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி இந்த போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயமடைந்த அப்ரிடி 5 வாரங்கள் ஓய்வு பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளதால் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ், அப்ரிடி இல்லாதது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதி அளிக்கும். ஆனால் ஆசிய கோப்பையில் அப்ரிடி விளையாட முடியாமல் போனது வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து இந்திய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வக்கார் யூனிஸுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட்டர் இர்பான் பதான் “இந்திய அணியில் பூம்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் இடம்பெறாதது மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கு நிம்மதியாக இருக்கும்” என பதிலளித்துள்ளார். இதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த டி20 உலகக்கோப்பை பொட்டியில் இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அப்ரிடி. ஆனால் அதே ஆசியக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸி அணியின் மேத்யூ வேட் அப்ரிடி ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசினார். அந்த போட்டியின் தோல்விக்கு அப்ரிடியின் பந்துவீச்சும் காரணமாக அமைந்தது.