வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (18:58 IST)

வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைப்பு: மீண்டும் களம் காண்கிறார் ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடை குறைக்கப்பட்டதால் மீண்டும் இந்திய அணியில் விளையாட இருக்கிறார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். 2007ம் ஆண்டு இந்தியா வெற்றிபெற்ற டி20 உலக கோப்பை போட்டியிலும், 2011ல் இந்தியா சரித்திர வெற்றிப்பெற்ற 50 ஓவர் உலக கோப்பையிலும் இந்திய அணியில் பங்கேற்றவர்.
கடந்த 2013ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஸ்ரீசாந்த் “ஸ்பாட் பிக்சிங்” சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார்.

அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விளையாடுவதற்கு ஆயுட்கால தடையை விதித்தது. இந்த முடிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார் ஸ்ரீசாந்த். இதை கடந்த மார்ச் மாதம் விசாரித்த நீதிமன்றம் “ஆயுட்கால தடை என்பது கடினமான தண்டனையாகும். அதை எல்லா வழக்குகளிலும் பயன்படுத்தக்கூடாது. அவரது ஆயுட்கால தடை ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஸ்ரீசாந்திடம் மூன்று மாத காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு அவரது தண்டனை குறித்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.

இதுகுறித்து தற்போது செய்தி வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி ஜெயின் ”ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள்கால தடை குறைக்கப்பட்டு 7 ஆண்டு தடையாக மாற்றப்பட்டுள்ளது. அவரது 7 ஆண்டு தண்டனை காலம் ஆகஸ்டு 2020ல் முடிவடைகிறது. அதற்கு பிறகு அவரால் இந்திய அணியில் விளையாட முடியும்” என தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த வருடம் ஆகஸ்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை இந்திய அணியில் பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.