உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இவருக்குதான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்கணும்… கம்பீர் கருத்து!
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இவர் முக்கியமானக் கட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த இன்னிங்ஸ் இன்றளவும் சிறப்பாக பேசப்படுகிறது. ஆனால் அன்றைய போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காமல் தோனிக்குக் கொடுக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.
இந்நிலையில் இப்போது கம்பீர் அன்றைய போட்டியில் ஜாகீர் கானுக்குதான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “அன்று ஜாகீர் கான் மட்டும் சிறப்பாக பந்துவீசவில்லை என்றால் இலங்கை அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்து இருக்கும். அவருடைய பந்துவீச்சை யாரும் பாராட்டுவதில்லை. என்னுடைய பேட்டிங் மற்றும் தோனியின் சிக்ஸ் பற்றியே அனைவரும் பேசுகின்றனர்” எனக் கூறியுள்ளார்.