அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை- கே.சி. பழனிசாமி
அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
இக்கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகியது.
இந்த நிலையில், தேர்தலின் போதோ, தேர்தலுக்குப் பின்னரோ அவர் பாஜகவை எதிர்த்து நிற்பார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்படவில்லை என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாஜக உடனிருந்து எடப்பாடி பழனிசாமி பிரிந்து வந்தாலும், சில இஸ்லாமிய தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தாலும் அவரது செல்வாக்கு மேம்படுத்தவில்லை.தேர்தலின் போதோ, தேர்தலுக்குப் பின்னரோ அவர் பாஜகவை எதிர்த்து நிற்பார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்படவில்லை.
ஒன்றுபட்ட அதிமுக உருவாகும்வரை மக்கள் இதை ஒரு பிளவாகவே பார்க்கிறார்கள், எடப்பாடி பழனிசாமியிடம் சின்னம் இருக்கிறது என்று அவர் முயற்சி செய்தாலும் தனிப்பட்ட முறையில் அவருக்கு செல்வாக்கும்,மக்கள் அங்கீகாரமும் இல்லை, அவரிடம் ஏமாற்றும் தந்திரம் மட்டுமே உள்ளது.
அவரது விடாப்பிடியான அணுகுமுறையால் ஒரு பெரிய அரசியல் கட்சி பின்னடைவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.எனவே மாற்றி சிந்தித்து கணிசமான வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் பெற முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.