திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (16:43 IST)

கங்குலியை விமர்சித்து கோலியை கொண்டாடும் கிரிக்கெட் ரசிகர்கள்.. களேபரம் ஆகும் ட்விட்டர்!

கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன. மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தெரிவித்துள்ள கருத்துகள் கிரிக்கெட் உலகில் பூகம்பத்தையே உருவாக்கியுள்ளன. அதில் அவர்  “பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி, கோலியுடன் இணக்கமாக இருந்ததில்லை. அவர் ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் ஆக்குவதையும் விரும்பவில்லை” எனக் கூறி இருந்தார்.

இந்த வீடியோ வெளியானதை அடுத்து ட்விட்டரில் விராட் கோலி என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகி முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் பிசிசிஐ குழுவைக் கடுமையாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்கிய கங்குலி பிசிசிஐ தலைவரானதற்குப் பின்னர் பல குளறுபடிகளை செய்து கடுமையான விமர்சனங்களை பெற்று வந்தார். இந்நிலையில் இன்றும் பலரும் கங்குலியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.