இத்தன வருஷத்துல ஒரு முன்னேற்றமும் இல்ல.. என் அம்மாவைத் தவிர யாராலயும் இப்படி யோசிக்க முடியாது- அஸ்வின் பகிர்ந்த ஜாலி சம்பவம்!
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. சமீபத்தில் அவர் தனது 500 ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் இந்த சாதனையைப் படைத்தார்.
இதையடுத்து தரம்சாலாவில் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது ஒரு மதிப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் 9 விக்கெட்களை வீழ்த்தி 128 ரன்கள் சேர்த்தார்.
அவர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலும் இதே போல 9 விக்கெட்களை வீழ்த்தி 128 ரன்களைக் கொடுத்திருந்தார். இதை இரண்டையும் ஒப்பிட்டு அஸ்வினின் அம்மா “இத்தனை வருடத்தில் உன்னிடம் எந்த முன்னேற்றமும் இல்லை” என தன்னை நக்கல் அடித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் “உலகத்திலேயே அம்மாவைத் தவிர வேறு யாராலும் இப்படி யோசிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.