வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (08:17 IST)

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்… 1983 உலகக் கோப்பை வென்ற அணிவீரர்கள் ஆதரவு!

பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார்களை குற்றம்சாட்டி ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது மல்யுத்த வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். புகார் சுமத்தப்பட்ட பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக நேற்று அறிவித்தனர்.

முதலில் வீராங்கனைகள் போராட்டத்துக்கு எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில் இப்போது சக விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் இப்போது 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் “நமது சாம்பியன்கள் மரியாதையற்ற முறையில் நடத்தப்படுவது மனவேதனை அளிக்கிறது. அவர்கள் பதக்கங்களை கங்கையில் எறியபோவதை அறிந்து துயருற்றோம். வீராங்கனைகள் அவசரப்பட்டு அந்த முடிவை எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அவர்களின் பிரச்சனை விரைவில் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளனர்.