அரசின் மௌனம் வெட்கக் கேடானது… மல்யுத்த வீரர்கள் போராட்டத்துக்கு பா ரஞ்சித் ஆதரவுக் குரல்!
பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார்களை குற்றம்சாட்டி ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது மல்யுத்த வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். புகார் சுமத்தப்பட்ட பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் "உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை நெஞ்சில் ஏந்திய சாம்பியன்கள் எந்தவிதமான கண்ணியமும் மரியாதையும் இன்றி நடத்தப்பட்டுள்ளனர். சாம்பியன்கள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசப் போகும் முடிவுக்கோ அல்லது அவர்களது போராட்டத்திற்கோ அரசு பதிலளிக்காமல் மவுனம் காப்பது வெட்கக்கேடானது. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு குரல் கொடுத்து, எம்பி பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை உடனடியாக நீக்கவும், அவருக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் நான் கோரிக்கை விடுக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.