1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (21:28 IST)

டெல்லியில் பத்திரிகையாளர் வீடுகளில் திடீர் சோதனை ஏன்? என்ன நடக்கிறது?

News Click
இன்று காலை முதல் நியூஸ்க்ளிக் என்ற செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பல பத்திரிகையாளர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
பத்திரிகையாளர்களிடம் நடத்திய சோதனைக்கு பிறகு அவர்களிடமிருந்து தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
 
நியூஸ்க்ளிக் ஊடகத்தின் மீது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது.
 
நியூஸ்க்ளிக்குடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, “பத்திரிகையாளர்கள் மற்றும் நியூஸ்க்ளிக் உடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. இந்த விஷயத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாங்கள் பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து நின்று, இந்த சோதனை குறித்து தெளிவான விவரங்களை அளிக்குமாறு அரசை வலியுறுத்துகிறோம்," எனத் தெரிவித்துள்ளது.
 
சில நாட்களுக்கு முன்பு, இந்த செய்தி இணையதளம் சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது என்பதுடன் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
 
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. இந்நிலையில், டெல்லி காவல்துறையின் பதிலுக்காக காத்திருப்பதாக பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
 
பத்திரிகையாளர் அபிசார் ஷர்மா தனது எக்ஸ் பதிவில், "டெல்லி போலீசார் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். எனது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 
பத்திரிக்கையாளர் பாஷா சிங், "இந்த போனில் இருந்து எனது கடைசி ட்வீட் இது தான். டெல்லி போலீசார் எனது போனை பறிமுதல் செய்துள்ளனர்," என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
பெண்களுக்கான பத்திரிகை அமைப்பான NWMI அமைப்பும், டெல்லி காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.
 
அதேபோல டெல்லி பத்திரிகையாளர் சங்கமும் நியூஸ்க்ளிக் நிறுவனத்தின் நடக்கும் சோதனை குறித்தும், பத்திரிகையாளர்களின் பொருட்கள் கைப்பற்றப்பட்டதும் குறித்தும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது
 
நியூஸ்க்ளிக் செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பத்திரிக்கையாளர்கள் வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.
 
 
நியூஸ்க்ளிக் நிறுவனத்தில் காவல்துறை நடத்திய சோதனைக்கு எதிராக தனது கண்டனத்தை இந்தியா கூட்டணி பதிவு செய்திருந்தது.
 
அந்த கூட்டணியின் சார்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், ஊடக நிறுவனத்தின் மீதான பாஜக அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறோம். இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள பத்திரிகை சுதந்திரத்திற்கும், பேச்சுரிமைக்கும் ஆதரவாக நாங்கள் இருப்போம் என குறிப்பட்டிருந்தது.
 
"கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக அரசு பல்வேறு வழிகளில் ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உதாரணமாக பிபிசி, நியூஸ் லாண்டரி, டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், காஷ்மீர்வாலா, தி வயர் உள்ளிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது."
 
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, "காந்தி ஜெயந்தி முடிந்தவுடனே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. டெல்லி காவல்துறையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க பயன்படுத்துகிறது," என்று கூறியுள்ளார்.
 
ஜம்மு, காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியும் இந்த நடவடிக்கைக்கு எதிராக தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
 
ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா தான் என்று இந்திய அரசு அண்டை நாடுகளில் கூறுகிறது. ஆனால் மறுபுறம் மீதமிருக்கும் சுயாதீன ஊடகங்களின் மீது தனது அதிகாரத்தின் கீழ் செயல்படும் விசாரணை அமைப்புகள் மூலமாக அதிகாரத்தை செலுத்துகிறது.
 
சட்டவிரோத கைது நடவடிக்கையும், பொய் வழக்குகள் பதிவு செய்வதும் தொடர் கதையாக இருப்பது கவலையளிக்கிறது என்று தனது எக்ஸ் சமூக ஊடக பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த செய்தி இணையதளம் ஆகஸ்ட் மாதத்தில் கூட ஒரு பேசுபொருளானது. இந்த இணையதளத்தை மேற்கோள் காட்டி, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தியை குறிவைக்கத் தொடங்கினார்.
 
அப்போது பேசிய அனுராக் தாக்கூர், "2021 ஆம் ஆண்டிலேயே, நியூஸ்க்ளிக் இணையதளம் வெளிநாட்டவர்களின் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. அதை அப்போதே நாங்கள் வெளிப்படுத்தினோம்," என்று கூறியிருந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நியூஸ்க்ளிக் இணையதளத்துக்கு ஆதரவாக களமிறங்கியதாகவும் அவர் கூறியிருந்தார்.
 
அமெரிக்க தொழில் அதிபரான நெவில் ராய் சிங்காம் மூலம் சீன நிறுவனங்கள் நியூஸ்க்ளிக்கிற்கு நிதியுதவி செய்கின்றன என்றும், ஆனால் அந்த நிறுவனத்தின் ஆதரவாளர்கள் இந்தியர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் அந்த செய்தி இணையதளத்திற்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்தபோது, ​​அதற்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டதாகவும் அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.
 
முன்னதாக ஆகஸ்ட் 22 ஆம் தேதி, டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப் பிரிவினர் நியூஸ்க்ளிக் இணையதளத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை அகற்றக் கோரி போலீசார் மனு அளித்ததைத் தொடர்ந்து நியூஸ்க்ளிக் இணையதளத்தின் தலைமைச் செய்தி ஆசிரியர் அதிகாரி ப்ரபீர் பர்க்கயஸ்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 
அவரை போலீசார் கைது செய்யக்கூடாது என்றும், அவர் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஜுலை 7 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
ப்ரபீர் பர்க்கயஸ்தாவுக்கு எதிராக பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 406 மற்றும் 420-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்திருந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.