வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (21:33 IST)

குழந்தையின் ஆண்குறியை கிள்ளிய சீனரை நியூசிலாந்து விடுதலை செய்தது ஏன்?

நீச்சல் குளம் ஒன்றில் உடை மாற்றும் அறையில் குழந்தையின் ஆண்குறியை கிள்ளிய 79 வயது சீனர் கடந்த வாரம் நியூசிலாந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தான் செய்ததை ஒப்புக்கொண்ட பின்னரும், அவரது நடத்தை சீனாவில் அன்பு காட்டும் பாரம்பரியமானதொரு அடையாளம் என்று வாதிட்டதை நீதிபதி ஏற்றுகொண்டதால் இந்த சீனர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
இது எந்த அளவுக்கு உண்மை? இதற்கு சீனா எவ்வாறு பதிலளித்துள்ளது?
 
நடந்த சம்பவம் என்ன?
 
கடந்த ஆகஸ்ட் மாதம், கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள மனமகிழ் மன்றம் ஒன்றில் ஆடை மாற்றும் அறையில், சீனரான ரென் ச்சாங்ஃபூ, அவருக்கு தெரியாத குழந்தை ஒன்று அவனது தந்தையோடு உடைமாற்றி கொண்டிருப்பதை பார்த்தார்.
 
அவர்களோடு பேசுவதற்கு சென்ற ரென், அந்த குழந்தையின் ஆண்குறியை கிள்ளியதோடு சிரித்துவிட்டு மீண்டும் ஆண்குறியை தொட்டார் என்று நியூசிலாந்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
 
அவ்வாறு செய்வதை நிறுத்த சொன்ன அந்த குழந்தையின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
 
2009ஆம் ஆண்டு நியூசிலாந்தில் குடியேறிய இந்த சீனர், தான் இவ்வாறு நடந்து கொண்டது குற்றமென தனக்கு தெரியாது என்றும், பேரனின் பிரிவால் மிகவும் துன்பப்படும் அவருக்கு இந்த குழந்தை அந்த பேரனை நினைவூட்டினார் என்றும் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
 
குற்றம் என்ன?
 
குழந்தையின் ஆண்குறியை கிள்ளி விடுவது அன்பை வெளிக்காட்டும் ஒரு வழிமுறை என்று ரென்னின் மகள் தயாரித்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
குற்றம் செய்தவரை நியாயப்படுத்திய இந்த வாதத்தை கிரைஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அலிஸ்டேயர் கார்லாண்ட் ஏற்றுகொண்டதோடு, ரென்னின் நடத்தையின் பின்னால் பாலியல் நோக்கம் எதுவும் இல்லை என்று முடிவு செய்து தீர்ப்பளித்துள்ளார்.
 
இந்த குழந்தையின் குடும்பத்தை ரென் வருத்தமடைய செய்துள்ளார் என்றும், அதனை சரி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்ய ரென் தயாராக இருப்பதாக தெரிவித்த இந்த நீதிபதி, ரென்னின் கலாசார பின்னணியில் அவரது நடத்தை புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
ரென் தெரிவித்த மன்னிப்பையும், ஆயிரம் நியூசிலாந்து டாலர் இழப்பீட்டையும் இந்த குழந்தையின் பெற்றோர் ஏற்றுகொண்டுள்ளனர்.
 
சீனாவின் பதில் என்ன?
 
கடந்த ஒரு வாரமாக இந்த செய்தி சீனாவில் பேசுபொருளாகிவிட்டது. சமூக விதிமுறைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
 
"வெய்போ" என்கிற சமூக ஊடகத்தளத்தில், சீனாவின் செய்தி நிறுவனமான சோஹூ இந்த செய்தியை மீள்பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
சீன பாரம்பரியத்தில் ஆண் குழந்தைகள் மிகவும் விரும்பப்படுகின்றனர்
மொத்தம் பதிவிடப்பட்ட ஆயிரத்து 200 பதிவுகளில், இந்த செயலை சீன கலாசாரத்தின் ஒரு பகுதியாக ஒருபோதும் கருதியதில்லை என்று 300 பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பல பத்தாண்டுகளுக்கு முன்னால் கிராமபுறங்களில் வயதானோரால் இவ்வாறு செய்யப்படுவதை பார்த்துள்ளதாகவும் அல்லது கேட்டுள்ளதாகவும் 200 பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் மோசமாக பார்க்கப்பட்ட இந்த செயல் ஒழிந்து வருவதாகவும் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிற பதிவுகள் அனைத்தும் இந்த செய்தி பற்றிய கேள்வியை எழுப்பியிருந்தன அல்லது கோபத்தை அல்லது சந்தேகத்தை வெளிப்படுத்தும் எமோஜிகளை பதிவிட்டிருந்தன.
 
79 வயதான சீனரான ரென், அவரது தலைமுறை பல்வேறு காரணங்களுக்காக செய்து வந்த தனது நடத்தையை நியாயப்படுத்தியிருக்கலாம்.
 
பல சீன குடும்பங்களில் மகளைவிட மகனே அதிகமாக விரும்பப்படுகிறார். ஆண்குறியை தொடுவது என்பது குடும்பத்தின் பெருமையை மேம்படுத்தும் ஒரு வழியாக இருந்துள்ளது. பெண்குறியை ஒருபோதும் இவ்வாறு யாரும் தொடுவதில்லை.
 
குழந்தைகள் அணிய டயபர் வருவதற்கு முன்னால், ஆண்குறி வெளியே தெரியுமாறு திறந்திருக்கும் வகையில் தைக்கப்பட்ட கால்சட்டையையே சிறுவர்கள் அணிவர்.
 
ஆனால், முதிய உறவினர்கள் அல்லது குழந்தையின் பெற்றோரின் நெருங்கிய நண்பர்களின் வட்டத்தில் மட்டுமே சிறுவர்களோடு இத்தகைய நடத்தைகள் நடைபெறும்.
 
வயதுவந்த இளைஞர்கள் இவ்வாறு செய்தால், சீனாவில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
 
இது போன்று சீனாவில் நிகழ்ந்த சம்பவங்கள்
 
கடந்த மார்ச் மாதம் பொது குளியலறையில் இருந்தபோது, அறியாத சிறுவனின் ஆண்குறியை தொட்டதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார். நகைச்சுவைக்காக இவ்வாறு செய்ததாக அந்த மனிதர் கூறினார். கடைசியில் அவர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் யுவான் (சீன நாணயம்) இழப்பீடாக செலுத்த வேண்டியதாயிற்று.
2015ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்ற பெண்ணொருவரும் அவரது 3 வயது பேரனும் வெளியே நடந்து கொண்டிருந்தபோது, முதல் முறையாக சந்தித்த முதியவர், அந்த சிறுவன் அழகாக இருப்பதாக கூறி அவனது அண்குறியை தொட்டார். இதனை சிறுவனின் பாட்டி உடனடியாக தடுத்துவிட்டார் என்று சீன அரசு ஊடகமான "பீப்பீள்ஸ் டெய்லி" வெளியிட்டது.
இவ்வாறு சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றால், பெற்றோர் காவல்துறையினரை அழைக்க வேண்டுமென வழக்கறிஞர் சுயே யுஹாயை மேற்கோள்காட்டி "பீப்பீள்ஸ் டெய்லி" அறிவுறுத்தியுள்ளது.
 
குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை எவ்வாறு கற்றுக்கொடுப்பது என்பதில் நிபுணரான பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியு வென்லி இது பற்றி குறிப்பிடுகையில், "வயதுக்குவந்தோர் குழந்தைகளுக்கு மரியாதை கொடுப்பது பற்றி அறியாதவர்கள் என்பதை பிரதிபலிக்கும் ஒழிந்துபோன கலாசார பழக்கம்தான் சிறுவர்களின் ஆண்குறியை தொடுதல்" என்கிறார்.
 
ஆனால், தங்களை பாதுகாத்து கொள்வதில் குழந்தைகள் அதிக விழிப்புணர்வோடு இன்று உள்ளனர். குறிப்பாக, நகரங்களில் இதுபோன்ற செயல்களை பெற்றோர் சகித்து கொள்வதில்லை என்று பேராசிரியர் லியு தெரிவிக்கிறார்.
 
குழந்தையின் ஆண்குறியை தொடுகின்ற பழக்கம், இவ்வாறு செய்வது இயல்பானதே என்ற உணர்வை அந்த குழந்தைக்கு வழங்கி, தன்னை பாதுகாத்து கொள்வதிலும், ஒருவருக்கொருவர் தொடர்பாடலிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
 
குளிக்கும்போது பெற்றோராலும், மருத்துவ பரிசோதனையின்போது மருத்துவராலும் மட்டுமே ஆண்குறி அல்லது பெண்குறி தொடப்படலாம் என்பதை பெற்றோர் குழந்தைகளிடம் எடுத்து சொல்லி கற்பிக்க வேண்டும் என்று பேராசிரியர் லியு பரிந்துரைத்துள்ளார்.