1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (18:30 IST)

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் உலகளாவிய ஒப்பந்தங்களின் நிலை இனி என்னவாகும்?

காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான அரசியல் சட்டத்தின் 370வது மற்றும் 35 ஏ பிரிவுகளில் இந்தியாவின் ஆளும் பாஜக அரசு மாற்றம் கொண்டுவந்துள்ள நிலையில், நிறைய சட்டபூர்வ கேள்விகள் எழுந்துள்ளன.

காஷ்மீரின் பகுதியளவு தன்னாட்சி அந்தஸ்தை ரத்து செய்வதாக திங்கள்கிழமை இந்திய அரசு அறிவித்தது. காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் அரசியல் ரீதியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், ஜம்மு காஷ்மீரின் இப்போதைய சட்டபூர்வ அந்தஸ்து இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

காஷ்மீரில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையில் மேலும் சட்ட சிக்கலை உருவாக்குவதாக இந்த நடவடிக்கை இருக்கும் என்று பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இறையாண்மை என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது என்றும், இப்போது அது ரத்து செய்யப்பட்டிருப்பதால் 1947ல் இருந்த அதே நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

``காஷ்மீர் இன்னும் சர்ச்சைக்குரியது தான்''

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்காக போரிட்டுக் கொண்டன - ஐக்கிய நாடுகள் சபை சமரசம் செய்தது. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, 1948ல் இரண்டு தீர்மானங்கள் உருவாக்கப்பட்டன. காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது என்றும், மக்கள் கருத்துக் கணிப்புக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுடைய படைகளை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது தீர்மானத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கேட்டுக் கொண்டது. ஐ.நா. மேற்பார்வையில் நடக்கும் பொது வாக்கெடுப்பின் மூலமாக, சர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் எல்லை யாருக்குச் சொந்தம் என்று முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கை குறித்து பிபிசிக்குப் பேட்டியளித்த சர்வதேச சட்ட வல்லுநர் அஹமர் பிலால் சூபி, சர்வதேச சட்டத்தில் காஷ்மீர் இன்னும் விவாதத்துக்குரிய பொருளாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.

``அரசியல் சட்டம் 370 என்பது அனைத்து வகைகளிலும் இந்தியாவைச் சார்ந்ததாக இருப்பதால், ஐ.நா. தீர்மானங்களை இந்தியா புறக்கணித்துள்ளது.

இது பாதுகாப்புக் கவுன்சில் சார்பில் முன்வைக்கப்பட்ட ஏற்பாடு. களத்தில் நிலவும் உண்மைகளின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத வரையில், இந்த சிறப்பு அந்தஸ்து என்பது அமலில் இருக்கும்.''
``இந்தப் பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இப்போதும் கருதப்படாது.

அப்படித்தான் இது செயல்படுகிறது. அதை மாற்றுவது என்பது பாதுகாப்புக் கவுன்சிலில் அல்லது ஐ.நா. விவகாரங்களில் தலையிடுவதாக அர்த்தமாகும்'' என்று அவர் கூறினார்.

காஷ்மீர் மக்களின் விருப்பங்களைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை என்பதை இந்திய மூத்த வழக்கறிஞர் எம்.எம். அன்சாரியும் ஒப்புக்கொள்வதைப் போலத் தெரிகிறது.

``இருதரப்பப் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஒருதலைபட்சமாக தீர்வு காண இந்தியா முயற்சி செய்திருக்கிறது. இந்த முடிவில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காஷ்மீர் மக்களே கூட கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரியவில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் இன்னும் விவாதத்துக்குரிய பொருளாக உள்ளது என்று அஹமர் பிலால் சூபி கூறிய கருத்தை எம்.எம். அன்சாரியும் ஒப்புக் கொள்கிறார். புதிய நடவடிக்கையால் சர்வதேச அரங்கில் அதன் அந்தஸ்து மாறிவிவில்லை என்று குறிப்பிடுகிறார்.

``பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதாக சிம்லா ஒப்பந்தத்தில் இந்தியா தானாகவே முடிவு செய்தது. ஆனால் இப்போது இந்தியா அதற்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இப்போது காஷ்மீர் பகுதி முஸ்லிம்கள் பெரும்பான்மையான பகுதியாக இருக்காது. இது காஷ்மீர் மக்களிடையே மேலும் அதிக குழப்பத்தை ஏற்படுத்தும்'' என்று அன்சாரி கூறியுள்ளார்.

``காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவுடன் இணைந்திருக்க காஷ்மீர் முடிவு செய்தது. அதற்கான ஒப்பந்தத்தின் விளைவாக, காஷ்மீர் மாநிலத்திற்கு ஜவஹர்லால் நேருவும், ஷேக் அப்துல்லாவும் சில காலம் பிரதமர்களாக இருந்தனர்.''

``மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல், காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது கிடையாது. ஆனால் இப்போது நாம் 70 ஆண்டுகளுக்கு முந்தை நிலைமைக்குச் சென்றிருக்கிறோம்.''
 

`370வது பிரிவு தடையாக இருந்தது'


 
பிரதமர் மோதியின் இந்த முடிவு இந்தியாவிலும் காஷ்மீரிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எம்.எம். அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகள் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை பாஜகவும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பும் இன்று நிறைவேற்றியுள்ளன என்கிறார் அவர்.

அஹமர் பிலால் சூபி கருத்தின்படி 370வது பிரிவு ஒரு தடைக்கல்லாக இருந்து வந்தது. ``அரசியல் சாசனத்துக்கு முரண்பட்ட விருப்பங்களை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கொண்டிருந்தன. அதனால் அரசியல் சாசனத்தை மாற்றிவிட்டார்கள்'' என்கிறார் அவர்.

இந்தியா மற்றும் காஷ்மீர் தலைமைகளுக்கு இடையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இந்தச் சட்டப் பிரிவு அரசியல்சாசனத்தில் சேர்க்கப்பட்டது என்று எம்.எம். அன்சாரி தெரிவித்துள்ளார். அதன்படி வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தவிர்த்த விஷயங்களில் காஷ்மீரின் இறையாண்மை அப்படியே தொடரும் என கூறப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

``இப்போது இந்தச் சட்டப் பிரிவு ரத்து செய்யப் படுவதற்கு முன்னதாக - இந்தியாவிலோ அல்லது - இவ்வளவு காலமும் இந்தியாவை ஆதரித்து வந்த - காஷ்மீர் தலைவர்கள் மத்தியிலோ ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை'' என்று அன்சாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் விருப்பத் தெரிவுகள் என்னவாக இருக்கும்?

இந்த முடிவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ளக் கூடிய பல விதமான விருப்பத் தெரிவுகள் உள்ளன என்று அஹமர் பிலால் சூபி கூறியுள்ளார்.

அந்தப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் `ராணுவ உறவு' அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரலாம். ஐ.நா. கவனத்தை ஈர்ப்பதுடன் இதையும் செய்யலாம்.
``சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இது அமையும் என்றும் கூறலாம்.''

இரு தரப்பாரையும் அழைத்துப் பேசி, அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்து, இந்த விதிமீறல்ளைத் தீர்க்க வேண்டியது பாதுகாப்புக் கவுன்சிலின் கடமை என்று அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் எப்படி முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

``இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் விவகாரம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு உள்ளது.''
உலக அரங்கில் இந்தப் பிரச்சினையை எழுப்பி, தனது வாதங்களை முன்வைப்பது பாகிஸ்தானுக்கு உள்ள இரண்டாவது விருப்பத் தெரிவாக இருக்கும் என்று அஹமர் பிலால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளிக்கக் கூடாது. உலக நாடுகளின் தலைநகரங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை பாகிஸ்தான் முன்வைக்க வேண்டும். ஏனெனில் பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் பிற நாடுகள், எந்தவொரு அரசியல் நிலைப்பாடு எடுப்பதற்கு முன்பும், எந்தத் தரப்பு அதிக நியாயமானது என்பதை முடிவு செய்வதற்கு தங்களுடைய சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு ஆதரவாக இந்த நாடுகள் இப்படித் தான் ஒரு நிலைப்பாட்டை முடிவு செய்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.

பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று அஹமர் பிலால் நம்புகிறார். காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு, இந்த விஷயங்களில் தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் முன்வைக்க வேண்டியது முக்கியம் என்கிறார் அவர்.