1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (16:28 IST)

வடகொரியா மீதான அழுத்தம் தொடரும்: டிரம்ப் அதிரடி!

வெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்றுள்ள உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை வழங்குவதைத் தொடரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
 
அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பத்தில் கொரியர்கள் எல்லாரும் ஒன்றாக வாழும் ஒரு நாள் வரும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வரக்கூடிய வாரங்களில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னோடு நடைபெறும் சந்திப்பில் சாத்தியப்படுமானால், ஒப்பந்தம் ஒன்றை எட்டக்கூடிய பொறுப்பு தனக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்கள் இல்லாமல் ஆக்கவும், கொரியப் போரை முறையான முடிவுக்கு கொண்டுவரவும் பணியாற்ற வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் ஆகியோர் இசைந்துள்ளனர்.
 
ஆனால், வட கொரியா இந்த விடயத்தில் ஆர்வம் கொண்டிருப்பதாக தோன்றுவது பற்றி ஆய்வாளர்கள் சந்தேகமான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.
 
வட மற்றும் தென் கொரிய ஊடகங்களின் பார்வை:
 
கொரிய தீபகற்பத்தில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கான புதிய மைல்கல் என்று வெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்ற உச்சி மாநாட்டை வட கொரிய செய்தி நிறுவனம் புகழ்ந்துள்ளது.
 
இதனை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்று கூறியுள்ள வட கொரிய அரசின் செய்தி ஊடகம், தங்கள் நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் மக்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும், சுயநிர்ணயத்திற்கான விருப்பத்தையும் இந்த சந்திப்பு காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
 
அதேவேளையில், இந்த உச்சி மாநாட்டுக்கு வரவேற்று தெரிவித்திருக்கும் தென் கொரிய ஊடகங்கள், தன்னுடைய அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு வட கொரியாவிடம் இருந்து உறுதி எதுவும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன.
 
வட கொரியாவுக்கு அதிகபட்ச அழுத்தங்களை தொடர்ந்து வழங்கப்போவதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றை பிரதிபலிக்கும் வகையில், தடைகள் இன்னும் தொடர்ந்து தேவைப்படுவதாக அவை கருத்து தெரிவித்திருக்கின்றன.
 
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்கள் இல்லாமல் ஆக்கவும், கொரியா போரை முறையான முடிவுக்கு கொண்டுவரவும் பணியாற்ற வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும், தென் கொரிய அதிபர் முன் ஜே-இன்னும் இசைந்துள்ளனர்.