செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (11:12 IST)

திருவாடானை வறட்சி: அன்று நெல் களஞ்சியம், இன்று வறண்ட பூமி - தீவனமாகும் வாடிய பயிர்கள்

தமிழ்நாட்டின் திருவாடானை பகுதியில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயிகள் நெல் விவசாயம் செய்த நிலையில் நெற்பயிர்கள் கதிராகும் நேரத்தில் வட கிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் சாவியான (நெல் ஊக்கம் இல்லாமல் கருகிப் போதல்) நெற்கதிர்களை விவசாயிகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். "இப்படியொரு கஷ்டம் வேறு எங்கும் வரக்கூடாது," என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா டி.கிளியூரை சேர்ந்த விவசாயி ஜெகநாதன். இவர் கடந்த 1980களில் இருந்து அவருக்குச் சொந்தமான சுமார் 18 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.
 
கடந்த மூன்று ஆண்டுகளாகப் பருவம் தவறிப் பெய்த மழையால் வயல்வெளிகளில் நீர் தேங்கிப் பெரும் நஷ்டத்தை சந்தித்த விவசாயி ஜெகநாதன், இந்த ஆண்டு பருவ மழையை நம்பி விவசாயம் செய்தார்.
 
வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டு பொய்த்துப் போனதால் வங்கிகளில் கடன் பெற்று ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து கதிர் வெளிவரும் நேரத்தில் மழை இல்லாமல் போய்விட்டதால் விவசாயி ஜெகநாதனுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் வங்கிக்கு கடன் செலுத்த முடியாமல் அடுத்த ஆண்டு விவசாயம் செய்ய விதை நெல்கூட இல்லாமல் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்.
 
மனிதர்களுக்கு உணவாக வேண்டிய நெற்பயிர்கள் மழையின்றி சாவியானதால் (நெல் ஊக்கம் இல்லாமல் கருகி போதல்) நெற்பயிர்கள் உள்ள வயலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டார்.
 
அன்று நெற்களஞ்சியம், இன்று வறண்ட பூமி
 
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என திருவாடானை தாலுகா அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு நெல் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் யூனியன் கண்மாய்கள் உள்ளன. ஆனால் காலப்போக்கில் கண்மாய்கள் சரி வர தூர்வாரபடாமல் மேடாகியதால் பருவ மழை நேரங்களில் மழை நீரை சேமித்து வைத்து கொள்ள முடியவில்லை.
 
திருவாடானை தாலுகாவில் அதிகமான கண்மாய்கள் இருந்தாலும் வானம் பார்த்த பூமி என்பதால் வடகிழக்கு பருவ மழையை நம்பி திருவாடானை, ஆர்எஸ் மங்கலம் ஒன்றியங்களில் விவசாயிகள் விவசாய பணிகளை செய்கின்றனர்.
 
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ந்தேதி தொடங்கியது. இந்த ஆண்டு பருவ மழையை நம்பி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1.34 லட்சம் ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டிருந்தது.
 
அதில் திருவாடானை தாலுகாவில் 46ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பருவ மழை தொடக்கத்தில் இருந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அடுத்தது உருவாக்கியதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாமல் பொய்த்து போனது.இதனால் இப்பகுதியில் உள்ள பல கண்மாய்கள் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டது.
 
84 ஹெக்டேர் அடியோடு பாதிப்பு
 
திருவாடானை தாலுகாவில் தொண்டி, டி.கிளியூர், ஓரியூர், மங்கலகுடி, புல்லூர் உள்ளிட்ட நூற்றுகணக்கான கிராமங்களில் அவ்வப்போது பெய்த சிறு மழையை கொண்டு விவசாயம் செய்து கதிர் வெளிவரும் சமயத்தில் போதிய மழை பெய்யாததால் அனைத்தும் சாவி (நெல் ஊக்கம் இல்லாமல் போதல்) ஆகிவிட்டது.
 
இதனால் இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 84 ஆயிரம் ஹெக்டர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூடுதலாக ஆர். ஏஸ் மங்கலம் மற்றும் திருவாடானை தாலுகாவில் 25 ஆயிரம் ஹெக்டர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
 
திருவாடானை மற்றும் ஆர் எஸ் மங்கலம் பகுதிகளில் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டு அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து விவசாயிகள் வாழ்வாதாரம் செய்து வந்தனர்.
 
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்கள் மழை பெய்த நிலையில் கதிர் வெளி வரும் சமயத்தில் மழை பெய்யாததால் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்கதிர்கள் கருகியது. இதனால் ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
 
 
வயல் வெளியில் மேயும் கால்நடைகள்
 
பல கிராமங்களில் கருகிய பயிர்களை மாடுகளை விட்டு மேய விட்டு கால்நடைகளுக்கு தீவனம் மாக்கி வருகின்றனர்.
 
எனவே மாவட்ட வேளாண் அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு இழப்பீடு கிடைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு விவசாயிகளால் விவசாய பணிகளை செய்ய முடியும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
காவிரி டெல்டா பகுதிகளில் பருவம் தவறிப் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நேரத்தில் தஞ்சைக்கு நிகரான நெற்களஞ்சியமான திருவாடானை பகுதியில் பருவ மழை பொய்த்து போனதால் நெற்கதிர்கள் கருகி கால் நடைகளுக்கு தீவனம் ஆகியுள்ளதால் விவசாயத்தை மட்டுமே நம்பி நகைகளை வங்கியில் அடகு வைத்து, வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி உள்ளது.
 
முறையாக தூர்வாரப்படாத கண்மாய்கள்
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருவாடானை, ஆர்எஸ் மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர், 'ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை உடனடியாக தூர்வாரி பருவமழை காலங்களில் மழை நீரை சேகரித்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
 
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி, கால்வாய்களை சீர் செய்தால் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மீண்டும் நெற்களஞ்சியமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை' என்கிறார் கவாஸ்கர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விவசாயி ஜெகநாதன் 'கூலி வேலை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து இந்த ஆண்டு பருவமழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் மட்டுமே கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் பருவம் தவறி பெய்த மழையால் நஷ்டம் அடைந்த இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு உரிய நேரத்தில் பருவமழை பெய்யாமல் பொய்த்து போனதால் மீண்டும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையை அரசு வழங்க வேண்டும்' என விவசாயி ஜெகநாதன் கோரிக்கை அரசுக்கு வைத்தார்.
 
 
மாவட்ட ஆட்சியர் உறுதி
 
விவசாயிகள் நிவாரண தொகை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்க்கீஸ், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து போனதால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கடந்த ஒரு மாதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் உதவி ஆட்சியர் தலைமையில் கணக்கீடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
 
தற்போது வரை 84 ஆயிரம் ஹெக்டர் பாதிப்படைந்துள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டது. எஞ்சிய பகுதிகளில் தொடர்ந்து கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து முழுமையான தகவல் அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ் நாடு அரசால் விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தெரிவித்தார்.