செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:52 IST)

பருவம் தப்பிய மழையால் நெற்பயிர்கள் சேதம் - அரசின் நிவாரணம் போதுமானதா?

இந்த மாதத் துவக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தப்பிப்பெய்த மழையின் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இழப்பீடு அறிவித்திருந்தாலும் அது போதாது என்கிறார்கள் விவசாயிகள்.
 
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பதைபதைப்பில் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையால் தாளடி பயிரில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரும் சம்பா பயிரில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அறுவடைக்காக காத்திருந்த நெற்கதிர்கள் தற்போது நிலத்தில் சாய்ந்து, முளைவிட ஆரம்பித்திருக்கின்றன.
 
"ஏற்கெனவே நிலம் ஈரமாக இருந்த நிலையில், மழை பெய்ய ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கடுமையான மழை. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிரெல்லாம் படுத்துவிட்டன. இப்போதைக்கு இந்த நெல்லை அறுக்கவே முடியாது. கொஞ்சமாவது நிலம் காய்ந்தால்தான் அறுக்கும் மிஷினை நிலத்தில் இறக்கவே முடியும். அப்படியானால் 20ஆம் தேதிவாக்கில்தான் நிலத்தில் இறங்க முடியும். ஆனால், அதற்குள் படுத்த நெற்கதிர்கள் ஈரத்தில் முளைக்க ஆரம்பித்துவிடும். என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்கிறார் திருவாரூர் மாவட்டம் மேலத்திருப்பாலக்குடியைச் சேர்ந்த சிறு விவசாயியான வீரமணி.
 
வீரமணிக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. கதிர்கள் ஈரமாகிவிட்டதால், ஒன்றேகால் மணி நேரத்தில் அறுக்க வேண்டிய பயிருக்கு இரண்டரை மணி நேரம் ஆகும்; ஆட்களை வைத்தெல்லாம் அறுக்கவே முடியாது என்கிறார் வீரமணி.
 
முப்பது மூட்டை கிடைக்கும் இடத்தில் இந்த முறை 15 முதல் 20 மூட்டை கிடைத்தாலே அதிகம் என்கிறார் வீரமணி. "அரசு கொள்முதல் செய்யும்போது ஈரப்பதம் 18 சதவீதத்திற்கு மேல் இருந்தால் வாங்கமாட்டார்கள். அதை 22 சதவீதம் என அதிகரிக்க வேண்டும்" என்கிறார் வீரமணி.
 
திருவாரூரில் பல இடங்களில் சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மானாவாரிப் பயிறாக உளுந்தும் விதைத்துவிட்டார்கள். ஆனால், விதைக்கப்பட்ட உளுந்து இந்த மழையில் அழுக ஆரம்பித்திருப்பது விவசாயிகளுக்கு மேலும் ஒரு அடியாக வந்திருக்கிறது.
வங்கக் கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் ஜனவரி 29ஆம் தேதியன்று ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது அடுத்த நாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக மழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் கன மழையும் பதிவானது.
 
தமிழ்நாட்டில் பொதுவாக இந்த காலகட்டம், பெரிய அளவில் நெல் அறுவடை நடக்கும் காலகட்டம். பல இடங்களில் நெல் அறுவடை விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தபோது, ஜனவரி 30, பிப்ரவரி 1, 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்தது. இதனால், அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருந்த பயிர்களும் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களும் சேதமடைந்தன. பல வயல்களில் தேங்கிய மழை நீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
 
 
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் குறித்து திங்கட்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு சில நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி, கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, 33 சதவிகித்திற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகளை வழங்கவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நெல் அறுவடையை உடனடியாக மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
 
ஆனால், இந்த நிவாரணம் சுத்தமாகப் போதாது என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள். "தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 3.49 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஏக்கருக்கான செலவே 40 ஆயிரம் ரூபாய் ஆகிறது. ஆனால், அரசு ஒரு ஹெக்டேருக்கு, அதாவது இரண்டரை ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொல்கிறது. அப்படியானால், ஒரு ஏக்கருக்கு 7,500-8,000 ரூபாய்தான் கிடைக்கும். இது எப்படிப் போதுமானதாக இருக்கும்? ஒரு ஏக்கருக்கு குறைந்தது 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடாகத் தர வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கண்ணன்.
தவிர, வேறு சில பிரச்சனைகளையும் அவர் முன்வைக்கிறார். தற்போது உளுந்து விதைத்து, சேதமடைந்திருப்பவர்களுக்கு மட்டும் இழப்பீடும், மானியத்தில் உளுந்து விதைகளும் தருவதாக அறிவித்திருக்கும் அரசு, பிற தானியங்களைக் கணக்கில் எடுக்கவில்லை என்கிறார். "நிறையப் பேர் நிலக்கடலை விதைத்திருந்தார்கள். அவர்களுக்கும் இழப்பீடு தர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வுசெய்யும்போது, அதை முழுமையாகச் செய்ய வேண்டும்.
 
இதுபோன்ற தருணங்களில் அதிகாரிகள் ஒழுங்காகக் கணக்கெடுப்பைச் செய்வதில்லை. இந்த முறையாவது அம்மாதிரி செய்யாமல், கணக்கெடுப்பை ஒழுங்காகச் செய்து, இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மேலும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, காப்பீட்டு நிறுவனங்கள் ஒழுங்காக காப்பீட்டுத் தொகையைத் தருவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். பல நேரங்களில் ஏதாவது காரணத்தைச் சொல்லி தட்டிக்கழிக்கிறார்கள். அப்படி நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் கண்ணன்.
 
 
ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தங்கள் பகுதிகளில் மழை பாதிப்பு குறித்து கணக்கெடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்பதில்லை என்கிறார்கள் இந்தப் பகுதி விவசாயிகள். இதனால், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வருவாய்துறை அதிகாரிகளை கண்டித்து திங்கட்கிழமை காலையில் ஊரணிபுரம் கடைத்தெரு சாலையில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
"ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பது எப்படிப் போதுமானதாக இருக்கும். குறைந்தது ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபாய் தர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை" என்கிறார் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தைச் சேர்ந்த வி.கே. சின்னதுரை.
 
மழையால் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை தவிர, வேறு சில பிரச்னைகளையும் விவசாயிகள் முன்வைக்கிறார்கள். "நெல்லைக் கொள்முதல் செய்யும்போது, ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச விலை போக, கூடுதலாக அரசு 80 ரூபாய் தருகிறது. ஆனால், ஒரு குவிண்டால் நெல்லை கொள்முதல் செய்ய 100 ரூபாய் லஞ்சம் தர வேண்டியிருக்கிறது. கொள்முதலில் ஆரம்பித்து, பணம் வங்கிக்கு வரும்வரை பல மட்டங்களிலும் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கிறது. இந்த முறை ஏற்பட்டிருக்கும் அழிவை மனதில் வைத்தாவது அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் கொள்முதல் செய்ய வேண்டும். நிவாரண உதவிகளையும் தர வேண்டும்" என்கிறார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒரு விவசாயி.
 
தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல்லைக் கொள்முதல் செய்யும்போது, 18 சதவீதத்திற்குக் கீழ் ஈரப்பதம் உள்ள நெல்லையே கொள்முதல் செய்யும். தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக, இந்த ஈரப்பதத்தின் அளவு அதிகரித்திருக்கும் நிலையில், 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்தவும், சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை தளர்த்தவும்கோரி பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் குறுவைப் பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டேரிலும் சம்பா பருவத்தில் 16.43 ஹெக்டேரிலும் நெற்பயிர்கள் விதைக்கப்பட்டன.