திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (14:37 IST)

காற்று மாசுபாடு எனும் சத்தமில்லா கொலையாளி- உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

pollution

நம்மை கொல்லும் ஒரு ஆபத்து சத்தமில்லாமல் தெருக்களில் உலாவிக்கொண்டிருக்கிறது. அதை நம்மால் பிடிக்க முடியாது. அதிலிருந்து நாம் ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை.

 

 

ஒவ்வொரு ஆண்டும் நாற்பது லட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் மற்றும் உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதத்தினரை பாதிக்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

மாசுபடுத்திகளால் அதிக தூரம் பயணிக்க முடியும். எனவே அவை அசல் மூலங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளையும் பாதிக்கிறது.

 

தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு தாக்கத்தையே ஏற்படுத்தமுடியும். இந்தச்சிக்கலை உண்மையிலேயே சமாளிக்க, அரசுகள் மற்றும் பெருவணிகங்களின் நடவடிக்கை தேவைப்படுகிறது.

 

இந்த சவாலை எதிர்கொண்டு சமாளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2020-ஆம் ஆண்டில் ஐநா பேரவை, செப்டம்பர் 7-ஆம் தேதியை ’நீல வானத்துக்கான தூய காற்றின் சர்வதேச தினமாக’ (International Day of Clean Air for Blue Skies) அறிவித்தது.

 

இப்போது சிக்கலின் அளவு என்ன என்பதையும், இதை சமாளிக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

 

பிரச்னை எவ்வளவு பெரியது?

 

Delhi mist
 

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (யுஎன்இபி) காற்று மாசுபாட்டை, "உலக அளவில் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்" என்று அழைக்கிறது. இது உலகம் முழுவதும் எழுபது லட்சம் அகால மரணங்களுக்கு காரணமாக உள்ளது என்று அது கணக்கிட்டுள்ளது.

 

இதன் காரணமாக மனித உயிர்கள் மட்டுமே பறிபோவதில்லை. 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் காற்று மாசுபாட்டின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்கான மருத்துவ செலவு 8.1 டிரில்லியன் டாலர்கள் என்று உலக வங்கி கணக்கிடுகிறது. இது உலக நாடுகளின் மொத்த உற்பத்தியில் 6.1% க்கு சமம்.

 

"காற்று மாசுபாடு உலகளாவிய பிரச்னையாக இருந்தாலும், அது வளரும் நாடுகளில் வாழ்பவர்களை குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கிறது" என்று யுஎன்இபி தெரிவித்துள்ளது.

 

அரசுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ன?
 

"காற்று மாசுபாடு என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இயற்கையானது மற்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்படுவது என்று இதில் பல வகைகள் உள்ளன. அவை இதன் மேலாண்மையை சிக்கலானதாக ஆக்குகின்றன" என்கிறார் யுஎன்இபியால் உருவாக்கப்பட்ட, ’காலநிலை மற்றும் சுத்தமான காற்றுக்கான செயலகத்தின்’ தலைவர் மார்டினா ஓட்டோ.

 

"பல நாடுகளில் தேவையான அளவுக்கு காற்றின் தர கண்காணிப்பு உள்கட்டமைப்பு இல்லை. இதை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் அதிக செலவு பிடிக்கிறது.” என்கிறார் அவர்

 

சுத்தமான காற்றுக்காக முதலீடு செய்வது மிகவும் முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்க அணுகுமுறையில் பெரிய மாற்றம் தேவை என்று அவர் நம்புகிறார்.

 

"கூடுதலாக, ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் செயல்திறன் மாறுபடலாம். மேலும் சில பிராந்தியங்களில் போதுமான சட்டங்கள் அல்லது அமலாக்க வழிமுறைகள் இல்லை,” என்றார் அவர்.

 

"அரசியல் ரீதியாக செயல்படுவதற்கான உறுதி மற்றும் நிதி ஆகியவையும் முக்கியமான தடைகள்," என்றார்.

 

காற்று மாசுபாடு எப்படி ஏற்படுகிறது?

 

காற்று மாசுபாடு என்பது திட துகள்கள், திரவ துளிகள் மற்றும் வாயுக்களின் சிக்கலான கலவையாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

 

இது PM அதாவது ’பர்டிகுலேட் மேட்டர்’ (துகள்கள் மாசுமாடு) என்று அளவிடப்படுகிறது. 2.5 மைக்ரோமீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்கள் (PM2.5), மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது. துகள்களின் நுண்ணளவு காரணமாக அவை ரத்த ஓட்டத்தில் நுழைகின்றன. இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளில் குவிந்துவிடுகின்றன.

 

சராசரி மனித முடி சுமார் 70 மைக்ரோமீட்டர்கள். அதை ஒப்பிடும்போது இந்த துகள்கள் மனித முடியின் அளவில் முப்பதில் ஒரு பங்கு ஆகும். அவை புகைக்கரி, மண் தூசி, சல்பேட்டுகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

 

வாகனங்களின் இயக்கம் மற்றும் வெப்பமாக்கலின் ஆபத்துகள்

 

புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மின்சாரத்தை உருவாக்குதல், போக்குவரத்து (டயர் மற்றும் பிரேக் தேய்மானம் உட்பட) மற்றும் வீட்டிலிருந்தான மாசுபாடு (பெரும்பாலும் சமையல் மற்றும் வெப்பமூட்டுதலில் இருந்து) போன்றவை, நுண்ணிய துகள்களின் முக்கிய ஆதாரங்கள்.

 

பாலைவனங்களுக்கு அருகில் உள்ள இடங்களில், காற்றால் பரவும் தூசியும், காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரமாக இருக்கலாம்.

 

காற்றால் பரவும் தூசியே தங்கள் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணம் என்று ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவும் கூறுகின்றன. வட அமெரிக்காவில் போக்குவரத்து அதற்கு காரணமாக உள்ளது.

 

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் காற்று மாசுபாட்டிற்கு தொழில்துறையே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் மாசுபாட்டின் முக்கிய காரணமாக வீட்டிலிருந்து வரும் மாசு உள்ளது.

 

இது நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
 

நமது உறுப்புகள் செயல்படும் விதத்தை இந்த நுண்ணிய துகள்கள் மோசமாக பாதிக்கின்றன.

 

ஆறு பொதுவான உடல் நலப்பிரச்னைகளில் ஏற்படும் இறப்புகளுக்கு காற்று மாசுபாடு எவ்வாறு பங்களித்தது என்பதை 2019-ஆம் ஆண்டின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

எடுத்துக்காட்டாக ஸ்ட்ரோக் காரணமாக ஏற்பட்ட இறப்புகளில் 17% நுண்ணிய துகள் வெளிப்புற காற்று மாசுபாட்டால் ஏற்பட்டவை என்று ஐக்கிய நாடுகளின் மதிப்பீடு தெரிவிக்கிறது.

 

PM2.5 நுண்துகள்கள் மாசுபாட்டு சூழலில் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் இருப்பது, உடல்நலப் பிரச்னைகள் தீவிரமடைதலில் வேறுபட்ட பாத்திரத்தை வகிப்பதாக கருதப்படுகிறது.

 

ஏற்கனவே இருக்கும் உடல்நல பிரச்னைகளை குறுகிய கால வெளிப்பாடு மோசமாக்குகிறது. அதே நேரம் இந்த சூழலில் நீண்ட காலம் இருப்பது, பொதுவாக நோயை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அது தீவிரமாகும் விகிதத்தை அதிகரிக்கிறது.

 

ஏதாவது முன்னேற்றம் உள்ளதா?

 

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை கரியமில உமிழ்வைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளன என்று யுஎன்இபி-இன் மார்டினா ஓட்டோ தெரிவிக்கிறார்.

 

லண்டனின் மிகக் குறைவான உமிழ்வு மண்டலத்தின் உதாரணத்தை அவர் தருகிறார். இது மத்திய லண்டனில் போக்குவரத்தின் அளவைக் குறைத்து, தலைநகரில் தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளை 50% குறைக்க வழிவகுத்தது.

 

அரசு நடவடிக்கையால் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைக்கப்பட்ட மேலும் இரண்டு நகரங்களுக்கு மெக்ஸிகோ சிட்டி மற்றும் பெய்ஜிங் எடுத்துக்காட்டாகும்.

 

"பிராந்திய மேம்பாடுகள் பெரும்பாலும் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் செயல்திறன் மிக்க தேசிய கொள்கைகளுடன் தொடர்புடையவை" என்கிறார் ஓட்டோ.

 

"குறிப்பாக, தெற்காசியா, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியா (சீனா உட்பட), ஓஷியானியா( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்)மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா போன்ற பகுதிகள் அனைத்தும் கடந்த இரண்டு தசாப்தங்களாக PM2.5 வெளிப்பாட்டைக் குறைத்துள்ளன."

 

2020 ஆம் ஆண்டில், மக்கள்தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடப்படும் PM2.5-ன் ஆண்டு சராசரி, 5 μg/m3 ஐ விடக்குறைவாக இருந்த ஒரே நாடாக ஃபின்லாந்து இருந்தது.

 

"பிரச்னை தீர்க்கப்படுவதற்கு இன்னும் முயற்சிகள் தேவையென்றாலும், தனி கவனத்துடன் கூடிய முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதை இது நிரூபிக்கிறது," என்று அவர் வலியுறுத்துகிறார்.

 

மறுபுறம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் PM2.5 நுண்துகள் வெளிப்பாடு அளவுகள், அதிக வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து அதிகமாக உள்ளது. கடந்த தசாப்தத்தில் இந்த நிலை ஏறக்குறைய ஒருபோலவே உள்ளது.

 

“உலக அளவில் மிக அதிக PM2.5 நுண்துகள்கள் வெளிப்பாடுகளைக் கொண்ட பத்து நாடுகளில் எட்டு ஆப்பிரிக்காவில் உள்ளன. மீதமுள்ள இரண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளன" என்கிறார் மார்டினா ஓட்டோ.

 

''காற்று தரக் கட்டுப்பாடு வலுவாக இல்லாதது, பலவீனமான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் போதிய நிதி இல்லாத காரணத்தால் இந்த பிராந்தியங்கள் காற்றின் தரத்தை மேம்படுத்தும் திசையில் சவால்களை சந்தித்து வருகின்றன.''

 

"புதைபடிவ எரிபொருட்கள் மீதான சார்பு அல்லது வீடுகளில் பாரம்பரிய எரிபொருட்களின் பயன்பாடு, பழைய வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வசதி இல்லாமை, போதுமான கழிவு மேலாண்மை இல்லாததால் கழிவுகளை திறந்தவெளியில் எரித்தல் ஆகியவற்றால் இந்த பிரச்னை மேலும் அதிகரிக்கிறது,” என்று மார்டினா ஓட்டோ குறிப்பிட்டார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு