வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (10:00 IST)

"இளவரசனுக்கு சமாதி கட்டவும் விடவில்லை" - நத்தம் காலனியில் சாதி வன்முறையின் ஆறாத வடுக்கள்

(தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண் பைக்கர்கள் பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கேட்டு காணொளி வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில், இந்த பயணம் குறித்து பிபிசி தமிழ் வெளியிடும் தொடர் கட்டுரைகளின் 3ஆம் பகுதி இது. தருமபுரி மாவட்டத்தில் மேற்கொண்ட பயணம் தொடர்புடையது.)
 
"இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்கறா…" இந்த தொடரை சிலர் கிண்டலாகவும், சிலர் சீரியஸாகவும் எழுதுவதை சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.
 
இது 2021ஆம் ஆண்டு. இப்பொழுதும் மக்கள் சாதி பார்க்கிறார்களா? சாதிப் பாகுபாடு இருக்கிறதா? சாதி ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறதா? சாதி அரசியல் இன்னும் தொடர்கிறதா?
 
இதனைத் தெரிந்து கொள்ள, கள நிலவரத்தை அறிய பிபிசி தமிழ் குழு முடிவு செய்தது. இதற்காக நாம் சென்ற மாவட்டம் தருமபுரி.
 
ஒக்கேனக்கல் அருவியால் பெயர் பெற்ற இந்தப் பகுதி, இன்னொரு விஷயத்திற்காகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. அதுதான் சாதி வன்முறை.
 
2012ல் நடந்த தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியில் நிகழ்ந்த வன்முறையை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்நாடு வரலாற்றில் மிகப் பெரிய சாதிய வன்முறைகளில் ஒன்று என்ற பெயரை பெற்றது இது என்று விவரிக்கிறார் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.
 
தலித் சமூகத்தை சேர்ந்த இளவரசன், வன்னியர் சமூகத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்ததில் தொடங்கியது இந்த சிக்கல்.
 
2012, நவம்பர் 8ஆம் தேதி நத்தம் காலனி, அண்ணா நகர் ஆகிய தலித் குடியிருப்புகள், வன்னியர்களில் ஒரு கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
 
நத்தம் காலனி தற்போது எப்படி இருக்கிறது?
அந்த நத்தம் காலனியின் நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள பிபிசி குழு அங்கு பயணித்தது.
 
காலை நாம் அங்கு செல்லும்போது சுமார் 7 மணி இருக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரும் தண்ணீரை பிடித்து வைத்து கொள்வதில் அப்பகுதி பெண்கள் மும்மரமாக இருந்தனர்.
 
முதலில் நம்மிடம் பேச அவர்கள் விரும்பவில்லை. பின்னர் அந்த ஊரில் இருக்கும் ஒரு பெரியவர் சொல்ல, அவர்கள் நம்மிடம் பேச ஒப்புக்கொண்டனர்.
 
"வன்முறைக்கு முன்பு வன்னியர்களுக்கும் எங்களுக்கும் நல்ல பழக்கம் இருந்தது. ஒன்றாக உணவு சாப்பிடுவோம். தாயாகப் பிள்ளையாகப் பழகுவோம். அவர்கள் நிலத்தில் களை எடுக்க, கீரை எடுக்கப் போவோம். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது" என்கிறார் நத்தம் காலனியை சேர்ந்த சாலம்மா.
 
"நாங்கள் அந்தப் பக்கம் போனாலே எங்களை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். நீ கீழ்ப்பட்ட சாதி, நீ ஏன் அங்க போற, நீ ஏன் இத பாக்கறனு... பேசறாங்க. அந்த கலவரத்தக்கு அப்பறம் உள்ளூர்ல எந்த வேலையும் எங்களுக்கு கிடைக்கல. சும்மாதான் இருக்கோம்" என்கிறார் அவர்.
 
60 வயதாகும் சாலம்மாவுக்கு 3 மகள்கள். இரு மகன்கள். உள்ளூரில் வேலை கிடைக்காமல், அவர்கள் இருவரும் பெங்களூருவில் செய்தித்தாள் போடும் வேலைக்கும், தார் சாலை போடும் வேலைக்கும் சென்றிருப்பதாக அவர் நம்மிடம் தெரிவித்தார்.
 
இதைத் தவிற அப்பகுதி மக்கள், வேறு சில விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
 
"முன்பெல்லாம், எங்களுக்கும் அவர்களுக்கும் வெளிப்படையான எந்த பிரச்னைகளும் இருக்காது. ஒன்றாக கூடி இருந்தோம். தற்போது எங்களை மொத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டனர்" என்கிறார் அதே பகுதியை சேர்ந்த சந்திரமதி.
 
நத்தம் காலனி, அண்ணா நகர் மக்கள் என்று சொன்னாலே ஒரு பாகுபாடு இருப்பதாகவும், இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு வங்கிக் கடன் கூட வழங்கப்படுவதில்லை என்றும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
"எங்க குலதெய்வம் கொடவாரி அம்மன் கோயில் வன்னியர்கள் வாழும் பகுதியில் இருக்கிறது. அங்கு கூட போக விடுவதில்லை அவர்கள். எங்கள் சாமியாவது எங்களுக்கு வேணும்" என்கிறார் சாலம்மா.
 
"தாயா பிள்ளையா பழகுறோம்" - வன்னியர் தரப்பு
நத்தம் காலனி தலித் சமூகத்தினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கேட்டுக் கொண்டு, அருகில் இருக்கும் செங்கல்மேடு என்ற ஊருக்குச் சென்றோம்.
 
இது வன்னியர்கள் வாழும் பகுதி. அங்கிருந்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தனர்.
 
"அவங்க சொல்றதெல்லாம் எதுவும் உண்மையில்லை. நாங்க இப்பவும் ஒன்னு மண்ணாதான் இருக்கோம். எங்க வீட்டுல ஒரு நல்லது கெட்டதுனா அவங்க வராங்க. அவங்க வீட்டுல எதாவது ஒன்னுணா நாங்க போறோம். எங்க நிலத்துல இப்பவும் அவங்க வந்து வேலை பாக்குறாங்க" என்கிறார் செங்கல்மேடு கிராமத்தை சேர்ந்த கணேசன்.
 
அங்கிருக்கும் பெண்களும் இதையேதான் சொல்கிறார்கள்.
 
தலித் சமூகத்தை சேர்ந்தவர்களின் குலதெய்வம் கோவில் விவகாரம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த கணேசன், "இளவரசன் இறந்து போனதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், சற்று கடுமையான நிலை நிலவியது. அதன் பிறகு அரசாங்கமே இருதரப்பையும் அழைத்து, இருவருக்கும் 5 மணி நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதுவும் இல்லை. இப்போது அங்கு யார் வேண்டுமானாலும் போகலாம் வரலாம்" என்று தெரிவித்தார்.
 
"இளவரசனுக்கு சமாதி எழுப்பவும் அனுமதிக்கவில்லை"
 
அப்படி என்றால் நத்தம் காலனியில் இளவரசனுக்கு சமாதி கட்ட ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி.
 
வன்முறை நிகழ்ந்த போது அந்தப் பகுதியில் குடியிருந்தவர்களில் இவரும் ஒருவர்.
 
நத்தம் காலனிக்கு மிக அருகில்தான் இளவரசனை புதைத்த இடம் இருக்கிறது. நம்மை அங்கு கூட்டிச் சென்றார் பழனிசாமி.
 
"முதலில் இளவரசனின் உடலை சுடுகாட்டில் புதைக்கலாம் என்றுதான் இருந்தோம். எனினும், அவரை யாரும் மறக்க கூடாது என்பதற்காக, இங்கேயே அவரை புதைத்து சமாதி அல்லது கல்லறை போன்ற ஓர் அமைப்பை கட்ட முடிவு செய்தோம். அவர் பெயரில் ஒரு நினைவுச் சின்னம் வைக்க இருந்தோம். ஆனால், அதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது" என்கிறார் பழனிசாமி.
 
இளவரசன் புதைக்கப்பட்ட இடம் ஒரு சிறு மணல் மேடு போல இருந்தது. மழை பெய்தால் அந்த மண் முழுக்க சரிந்து போவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
 
"இளவரசனை இந்த சமூகம் ஞாபகம் வைத்திருக்கக்கூடாது என்பதற்காகவே இது செய்யப்படுகிறது. அவரது பெயரை எழுதக்கூட எங்களை அனுமதிக்கவில்லை" என்று பழனிசாமி தெரிவித்தார்.
 
சாதி அரசியல்
 
"அரசியல் கட்சிகள் தங்களுடைய வாக்கு வங்கியை திரட்டிக் கொள்ள, தங்கள் சமூகத்தினரை திரட்ட வேண்டும். தங்கள் வாக்கு வங்கி எப்போதெல்லாம் குறைகிறதோ, அதனை மீண்டும் வலிமையாக்க ஒரே ஜாதியினரை ஒன்று திரட்டுவது அவசியமாகிறது" என்கிறார் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.
 
சாதி ரீதியிலான பிரிவுகள் இல்லை என்று பேசினாலும், களத்தில் சாதி பாகுபாடு என்ற விஷயம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தங்கள் வாக்கு வங்கிக்காக பா.ம.க. தலித்துகளுக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே, இது உண்மையா என்று அந்தக் கட்சித் தலைவர் ஜி.கே. மணியை சந்தித்துக் கேட்டோம்.
 
அதற்கு பதிலளித்த அவர், "பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்திலேயே, எங்கள் கட்சியின் தலைவர் ஒரு பிற்படுத்தப்பட்டவர். ஒரு தலித் கட்சியின் பொதுச் செயலாளர். பொருளாளர் ஒரு சிறுபான்மையினத்தவர். இப்படி கட்சி தொடங்கிய நேரத்திலேயே இதனை கட்சிக் கொள்கையாக வைத்திருந்தோம். இந்த இரு சமுதாயமும் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதே போல எல்லா சமூகத்தினரிடமும் பா.ம.க இணக்கமாக இருக்கும். அதனால் எங்கள் கட்சியில் அனைவருக்கும் பொறுப்புகள் பகிர்ந்து வழங்கப்படுகின்றன.
 
நத்தம் காலணி, அண்ணா நகர் என அனைத்து தலித் குடியிருப்புகளிலும் பா.ம.க சென்று வாக்கு சேகரிக்கும். அவர்கள் வாக்கு எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்" என்று தெரிவித்தார் மணி.
 
சாதிப் பிரிவினை குறித்து பேசிய கல்லூரி மாணவர்கள்
தமிழகத்தில் வேரூன்றி இருக்கும் சாதி அரசியல் குறித்து கல்லூரி மாணவர்கள், அதாவது அடுத்த தலைமுறையினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் முற்பட்டோம்.
 
இதற்காக இரு பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்களையும் அழைத்து பிபிசி தமிழ் கலந்துரையாடியது.
 
"எங்கள் வீட்டு பெரியவர்களிடம் சாதி இருக்கிறது. அவர்கள் இன்னமும் சாதி பார்க்கிறார்கள். சாதி இல்லை என்று மறுக்க மாட்டோம். ஆனால் நாங்கள் சாதி என்ற விஷயத்தை கல்லூரிக்குள் கொண்டு வருவதில்லை. என் நண்பன் என்ன சாதி என்று பார்த்து நாங்கள் பழகுவதில்லை" என்கிறார் வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர்.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தலித் மாணவர், "என் சாதியை சொல்லி இன்றும் என்னை அவமானப்படுத்துகிறார்கள். சாதி என்ற ஒன்று நிச்சயம் இருக்கிறது. நான் ஒருமுறை என் நண்பர் வீட்டிற்கு போகும்போது, அங்கு நான் சொம்பில் தண்ணீர் குடிக்க, என் பேரை சொல்லி நீ எப்படி இங்கு தண்ணீர் குடிக்கலாம் என்று கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு சாதி என்றால் என்னவென்று தெரிந்தது" என்று கூறுகிறார்.
 
அது மிகவும் தவறான விஷயம் என்று மற்றொரு மாணவர் குறுக்கிட்டார்.
 
மேலும், "என் தோழி மற்றும் நண்பர் இருவரும் காதலித்து வந்தார்கள். இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் இறுதியில் காவல் நிலையம் கூட்டிச் சென்று இருவரையும் பிரித்து வைத்துவிட்டார்கள். அவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. சாதி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போது தோன்றியது" என்றார் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவர்.