புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (17:59 IST)

ஒரு பனிப்பாறையின் மரணம் - அஞ்சலி செலுத்திய சுவிட்ஸர்லாந்து மக்கள்

சுவிட்ஸர்லாந்தில் உள்ள பனிப்பாறை ஒன்று காணாமல் போனதைக் குறிக்கும் விதமாக ஏராளமான மக்கள் அதற்கு அஞ்சலி செலுத்தினர்.
 
என்ன பனிப்பாறை காணாமல் போய்விட்டதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது காணாமல் போகவில்லை பருவநிலை மாற்றத்தின் காரணமாகக் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது.
 
பிசோல் பனிப்பாறை வடகிழக்கு சுவிட்ஸர்லாந்தின் க்ளாரஸ் ஆல்ப்ஸ் உள்ளது .இந்த பனிப்பாறையானது, 2006ம் ஆண்டு முதல் ஏறத்தாழ 80% காணாமல் போய்விட்டது. இதற்கு புவிவெப்பமயமாதல்தான் காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
 
பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நாவில் விவாதிக்க உலகத் தலைவர்களும், இளம் செயற்பாட்டாளர்களும் நியூயார்க்கில் கூடி இருக்கும் இந்த சூழலில், ஆல்பஸ் மலையில் ஏறி மக்கள் அந்தப் பனிப்பாறைக்காக அஞ்சலி செலுத்தினர்.
2050 ஆம் ஆண்டுக்குள் சுவிட்ஸர்லாந்தில் உள்ள பாதிக்கும் அதிகமான பனிப்பாறைகள் இல்லாமல் போகும் என்கிறார்கள் வல்லுநர்கள். 8850 அடி உயரத்தில் அமைந்துள்ள அந்த மலையில் கறுப்பு உடை அணிந்து சூழலியலாளர்கள் ஏறி அஞ்சலி செலுத்தினர்.
 
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது பருவநிலை பாதுகாப்பிற்கான சுவிஸ் மன்றம். சுவிஸ் தனது கரியமில வெளியேற்றத்தை 2050 ஆம் ஆண்டுக்குள் சுழியமாகக் குறைக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
இவ்வாறான நிகழ்வு நடப்பது இது முதல்முறை அல்ல. 2014 ஆம் ஆண்டு, ஐஸ்லாந்தில் 700 வயது பனிப்பாறை இறந்துவிட்டதாகக் கூறி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.