செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (08:24 IST)

துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை பயணம்

நீங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்திருந்தாலோ அல்லது நல்ல நினைவாற்றல் கொண்டிருந்தாலோ, 2006ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் இந்திய அணியின் நடன நிகழ்ச்சி உங்கள் நினைவுக்கு வரலாம். அரங்கத்தில் நடுநாயகமாக ஐஸ்வர்யா ராய் நடனமாட அவரை சுற்றி பல நடனக் கலைஞர்கள் தங்கள் திறமையை காட்டிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கூச்ச சுபாவமுள்ள ஒல்லியான இளைஞன். அன்று பலரில் ஒருவராக நடனாடிய மெலிந்த உடல்வாகு கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் பின்னர் தொலைக்காட்சிகளின் சூப்பர் ஸ்டாராகவும், இந்தி படங்களின் ஹீரோவாகவும் பிரலமானார்.

திறமைகளால் அனைவரின் மனதையும் வெற்றிக் கொண்ட சுஷாந்த், வாழ்க்கைப்போரில் தோல்வியடைந்து தற்கொலை செய்துக்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, திறமைக்கு அங்கீகாரம் பெற்று, வெற்றிப்படியில் நாயகனாக இருந்தாலும், வாழ்வில் இருந்து தானாகவே விடைபெற்ற கலைஞர்களின் பட்டியலில் மற்றுமொரு பெயர் சேர்ந்துவிட்டது.


தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமாகி, திரைப்படங்களில் காலடி எடுத்துவைத்து அதில் முத்திரையும் பதித்த ஒரு சில நடிகர்களில் சுஷாந்தும் ஒருவர்.

1986ஆம் ஆண்டு பாட்னாவில் பிறந்த சுஷாந்த், டெல்லி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தார். அவரது மனமோ நடனத்தின் மீதும், நடிப்பின் மீதும் அதீத ஆர்வம் கொண்டிருந்தது.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை
சுமார் 10-11 ஆண்டுகளுக்கு முன்பு சுஷாந்த் சிங் ராஜ்புத் முதல்முறையாக சின்னத் திரையில் தோன்றினார். 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற நெடுந்தொடரில் நடித்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'பவித்ர ரிஷ்தா' சின்னத்திரை தொடரில் மும்பை சாவ்லில் வசிக்கும் மானவ் தேஷ்முக் என்ற இளைஞனின் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சின்னத்திரைத் தொடரின் மூலம் சுஷாந்த் அனைவரின் மனதையும் கவர்ந்தார். இளம் பெண்களின் கனவு நாயகனாக உயர்த்தியது.

கடந்த 10 ஆண்டுகளில் நான் விரும்பிப் பார்த்த இரண்டு தொலைகாட்சித் தொடர்களில் ஒன்று பவித்ர ரிஷ்தா. சுஷாந்த் சிங் மற்றும் அர்ச்சனா லோகண்டேவின் நடிப்பும் அவர்களின் ஜோடிப் பொருத்தமும் அனைவருக்கும் பிடித்த ஒன்று. சவால்களை எதிர்கொள்வது சுஷாந்தின் சிறந்த திறமையாகும்.

நடிப்பை நம்பி, பொறியியல் படிப்பை அந்தரத்தில் விட்டுவிட்டு மும்பைக்குச் சென்று நாதிரா பப்பரின் நாடகக் குழுவில் சேர்ந்தார். சுஷாந்தின் இரண்டாவது தொலைக்காட்சித் தொடர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபோதே, பவித்ர ரிஷ்தா தொடரில் கதாநாயகனாக உச்சத்தில் இருந்த 2011இல் அதிலிருந்து விலகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.


அதன்பிறகு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக, அவருக்கு எந்த குறிப்பிட்ட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு இல்லாமல் இருப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஆனால், 2013இல் 'காய் போச்சே' என்ற இந்தி திரைப்படத்தில் தோன்றினார். குஜராத் கலவரத்தை கதைக்களமாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இஷாந்த் என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் அருமையாக நடித்திருந்தார்.

எந்தவொரு புதிய கலைஞரும் இவ்வளவு சிறப்பாக இந்த கதாபாத்திரத்தை செய்திருக்க முடியாது என்று அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த திரைப்படம் சுஷாந்தின் பிற சிறப்பு பன்முகத்தன்மைகளையும் வெளிக்கொண்டுவந்தது. பல பரிசோதனை முயற்சிகளில் பலமுறை சுஷாந்த் வெற்றிபெற்றார் என்றால் சில முறை தோல்வியையும் ருசித்தார்.

வெறும் ஆறு வருட திரைப்பட வாழ்க்கையில், சுஷாந்த் வெள்ளித்திரையில் மகேந்திர சிங் தோனியாகவும் உருவெடுத்தார். எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் அமோக வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றார். ஸ்டைஸ், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்ட முறை என்று தனது பாணியை சுஷாந்த் அருமையாக கிரகித்து நடித்திருப்பதாக தோனியே பாராட்டி பெருமைப்படுத்தினார். அதிலும் குறிப்பாக தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கையாண்ட விதம் அபாரமாக இருந்தது என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

திரைப்படங்களுக்கு அப்பால், நிஜ வாழ்க்கையிலும் சுஷாந்த் ஒரு கதாநாயகன் என்பதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தார். பல முக்கியமான சமூக பிரச்சனைகள் குறித்த நிலைப்பாடுகளை எடுத்தார். சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக, ராஜ்புத் கர்ணி சேனா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியபோது, தனது ட்விட்டர் பக்கத்தில், சுஷாந்த் என்ற தன்னுடைய பெயரில் இருந்து 'சிங் ராஜ்புத்' என்ற குடும்பப் பெயரை நீக்கிவிட்டு, சுஷாந்த் என்ற பெயரை மட்டும் வைத்தார். அதற்காக தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலளித்த சுஷாந்த், "முட்டாள்களே, நான் எனது குடும்பப்பெயரை மாற்றவில்லை. நீங்கள் வீரத்தைக் காட்டினால், நான் உங்களை விட 10 மடங்கு ராஜ்புத்திரன் என்பதை காட்டும் வீரம் எனக்கு இருக்கிறது. நான் கோழைத்தனத்திற்கு எதிரானவன்" என்று பகிரங்கமாக பதிலளித்தார்.

நடிப்புக்கு அப்பாற்பட்ட அவரது தனிப்பட்ட பொழுதுபோக்குகளும் வித்தியாசமானது. வானியல் துறையில் மிகவும் விருப்பம் கொண்ட சுஷாந்த், கொரோனா முடக்க நிலையின்போது இன்ஸ்டாகிராமில் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகம் தொடர்பான பதிவுகளை பதிவிட்டார்.

புத்திஜீவி நடிகர் என்று ரசிகர்கள் அவரை என்றென்றும் நினைவில் கொள்வார்கள்.

சாந்தா மாமா திரைப்படத்தில் சுஷாந்த் விண்வெளி வீரராக நடிக்கவிருந்தார். அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் நாசா விண்வெளி மையத்திற்கு சென்று பயிற்சி எடுக்கவிருந்தார்.

'சோன்சிடியா' என்ற அவரது கடைசி திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்தேன். கடந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக அறியப்பட்ட அந்தத் திரைப்படத்தில் லாகன் என்ற கொள்ளையனாக நடித்திருந்தார். மிகவும் தாராளமான, மனசாட்சியுடன் செயல்படும் கொள்ளையன் அவன்.

"வக்கீல், நான் கும்பலிலிருந்து தப்பி ஓடிவிடுவேன், ஆனால், என்னிடமிருந்தே நான் எப்படி தப்பி ஓடமுடியும்?" என்பதுபோன்ற வசனங்களை தனது சகாக்களுடன் பேசும்போது, நம்மை அறியாமலேயே மனம் அவரை விரும்பத் தொடங்குவதை தவிர்க்க முடியாது.

ஒவ்வொரு படத்திலும் சுஷாந்த் சிங் சிறப்பாக பணியாற்றினார் என்றோ, அவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றவை என்றோ சொல்லமுடியாது. ராப்தா மற்றும் கேதார்நாத் போன்ற சாதாரணமான படைப்புகளுக்காக அவர் விமர்சிக்கப்பட்டார். அவரது கடைசி திரைப்படம் சிச்சோரே பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் தன்மீது அவருக்கு அதிக நம்பிக்கை இருந்தது.

பிபிசிக்கு அளித்த பேட்டியில், "எனக்கு திரைப்படங்களில் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால், தொலைக்காட்சிக்கு சென்றுவிடுவேன். தொலைகாட்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் நாடக மேடைக்கு சென்றுவிடுவேன்" என்று கூறினார். நாடகங்களில் நான் 250 ரூபாய்க்கு நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறேன். நான் நடிப்பை நேசிப்பதால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே, நான் தோல்வியைக் கண்டு பயப்படவில்லை" என்று கூறினார்.

தன்னம்பிக்கை மிகுந்த ஒரு இளைஞன், தோல்விக்கு அஞ்சாதவன், வெற்றி அவரை அன்புடன் அரவணைத்துக் கொண்டது. இந்தப் அரும்பேறு அனைவருக்கும் வாய்ப்பதல்ல. வாழ்க்கையை வெறுக்கும் அளவிற்கு அவருக்கு மனதில் என்ன அழுத்தம் இருந்தது என்று தெரியவில்லை என்று காவல்துறையினர் ஆச்சரியப்படுகின்றனர். விசாரணை நடைபெறும், காரணங்களும் தெரியவரலாம். ஆனால், ஒரு தன்னம்பிக்கைக் கொண்ட இளைஞனை உலகம் இழந்துவிட்டது .


'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்ற சுஷாந்த் சிங்கின் முதல் தொலைக்காட்சித் தொடரின் தொடக்கத்திலேயே அவர் கொல்லப்பட்டுவிடுவார். ஆனால் அந்த சிறிய பாத்திரத்திலும் அசத்தலாக நடித்து பெயர் பெற்றார். அந்தத் தொடரில் பேயாக மீண்டும் களம் இறக்கப்பட்டு மீண்டும் அதேத் தொடரில் நடித்தார். ஆனால், அனைவரின் விருப்பத்திற்காக, கதாசிரியரின் கற்பனையால் இறந்த பிறகும், அவர் மீண்டும் தொடரில் தோன்றினார். நிதர்சன வாழ்க்கையில் சுஷாந்த் ஒருபோதும் திரும்ப மாட்டார் என்பது கசப்பான உண்மை.

சோன்சிடியா திரைப்படத்தில், 'இறப்பதற்கு பயப்படுகிறாயா?' என்று மனோஜ் வாஜ்பாய் சுஷாந்திடம் கேட்கும்போது, லாகன் கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சொன்ன பதில் வசனம் நினைவுக்கு வருகிறது. "ஒரு ஜென்மமே முடியப்போகிறது தாதா, இப்போது இறப்பதற்கு என்ன பயம்?" இந்த திரைப்பட வசனத்தை சுஷாந்த் ஏன் உண்மையாக்கினார்?