1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (16:37 IST)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு: ''எங்கள் பர்ஸ் காலி'' வேதனையில் மக்கள்

தமிழகத்தில் சென்னை,கோவை,மதுரை ஆகிய நகரங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு என்பதால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

முழு ஊரடங்கை காரணமாக கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மக்கள் பலர் நெடுந்தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் செல்வதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.

சென்னை நகரத்தில் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்துள்ளதால், இன்று (ஏப்ரல் 25) ஒரு நாள் மட்டும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மதியம் மூன்று மணிவரை இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மருந்து கடைகள் தவிர பிற கடைகள் இயங்காது என்பதால், மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளில் பொருட்களை வாங்கிச்செல்வதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை திருவான்மியூர் காய்கறி மார்க்கெட்டில் பைகளுடன் பல மணி நேரம் மக்கள் நீண்ட வரிசையில் நின்றும், கூட்டமாக மார்க்கெட் உள்பகுதியில் நின்றும் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

பல கடைகளில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொண்டுவந்த முழுசரக்கும் காலியாகிவிட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர். திருவான்மியூர் சந்தையில் மக்கள் குவிந்து நிற்பதை பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கவந்த தனியார் நிறுவன ஊழியர் கண்ணன் பேசும்போது, ''தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இதுபோன்ற மக்கள் திரளை பார்த்துள்ளேன். ஆனால் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த கடைகளும் இருக்காது என்பதால் விலையும் மிகவும் அதிகம். ஒரு கிலோ தக்காளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.20 என விற்கப்படுகிறது. சாலையில் உள்ள கடைகளில் ரூ.30 என விற்கப்படுகிறது. மளிகை பொருட்களை சில்லறை கடைகளுக்கு விற்பதற்கு மட்டும்தான் வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். பொது மக்களுக்கு வழங்க நெடுநேரம் காத்திருக்க வைக்கிறார்கள் என்பதால் நான் மூன்று மணி நேரம் செலவிட நேர்ந்தது,''என்கிறார்.

''நான்கு நாட்களுக்கு எந்த கடையும் இருக்காது என முடிவுசெய்தால், அரசாங்கம் எங்கள் பகுதிகளுக்கு வந்து பொருட்களை விற்கவேண்டும். புதுப் புது விதிகளை கொண்டுவரும் நேரத்தில் எங்களிடம் பணமும் இல்லை என்பதை அரசியல்வாதிகள் உணரவில்லை,'' என கொதித்தெழுகிறார் வடசென்னைவாசி சம்பத்.

தி.நகர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்றனர்.

விலைவாசி உயர்வு குறித்த புகார்களை அளிக்கலாம் என அரசாங்கம் தெரிவிப்பது ஒரு சடங்காக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள் விற்பனை செய்யும் கடைகளும் அதிக விலை அச்சத்தை ஊட்டுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாதாரண மக்களும் வாங்கும் பழமாக வாழைப்பழங்கள் இருக்கும். ஆனால் அதுவே தற்போது எட்டாக்கனியாகிவிட்டது என்கிறார் சுலோச்சனா. 'பூவன் பழம், கற்பூரவள்ளி என எல்லா பழமும் கிலோ ரூ.70 என விற்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக நான் வேலைக்கு போகவில்லை. இதுநாள்வரை இருந்த சேமிப்பு முழுமையாக கரைகிறது,''என வருத்தத்தோடு பேசினார் சுலோச்சனா.

தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலைசெய்யும் சுலோச்சனா அதிக சிரமத்தோடு இந்த ஊரடங்கு நாட்களை கடந்துவருவதாக தெரிவித்தார்.