1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (14:22 IST)

சிறுவனுக்கு லத்தி அடி - தொடரும் மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள்

கோவையில் கடந்த இரு மாதங்களில் நடந்த இரு வேறு சம்பவங்களில் பள்ளி மாணவர்கள் மீது லத்தியை பயன்படுத்தி காவல்துறையினர் தாக்கும் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
சமீபத்திய சம்பவத்தில் 9ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவனை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கிய விவகாரத்தில் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒண்டிப்புதூர் பகுதியில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துர்காராஜ், சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவனை லத்தியால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், "நண்பர்கள் வீட்டிற்கு விளையாடச் சென்ற எனது மகனை, காவலர் ஒருவர் கடுமையாக லத்தியால் தாக்கியுள்ளார். இதனால், அவனது கை மற்றும் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. எந்த தப்பும் செய்யாத சிறுவனை லத்தியால் ஏன் அடிக்க வேண்டும். இச்சம்பவத்தால், எனது மகன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்" என்றனர்.
 
இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் கேட்டபோது, "தாக்கப்பட்ட சிறுவனை, அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்துப் பேசினோம். அவரும், அவரது பெற்றோரும் நடந்தவை குறித்து எங்களிடம் பேசத் தயங்கினர். இருந்தும், அவருக்கான பாதுகாப்பும், உதவியும் வழங்க தயாராகவுள்ளோம் என தெரிவித்துள்ளோம்" என கூறினார்.
 
காவலர் தாக்கியது குறித்து சிறுவனின் பெற்றோர் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனாலும், அந்த சம்பவம் குறித்து தெரிய வந்தவுடன் மாநகர காவல் ஆணையர், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சிறுவனை தாக்கிய காவலர், சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் இருந்து மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.