ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (15:34 IST)

தனுஷ் நடிக்கும் The Gray Man ஹாலிவுட் படத்தின் கதை என்ன?

'அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் அமெரிக்கா' படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பெரும் பொருட் செலவில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கிறது.
 
The Gray Man எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில், தனுஷ் மட்டுமே ஒரே இந்திய நடிகராக இருப்பார். தனுஷ் 2018ல் வெளிவந்த The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானவர். The Gray Man அவரது இரண்டாவது ஹாலிவுட் திரைப்படமாக இருக்கும்.
 
2009ஆம் ஆண்டில் அமெரிக்க நாவலாசிரியரான மார்க் க்ரானி எழுதி வெளிவந்த The Gray Man நாவலே, இப்போது அதே பெயரில் படமாகவுள்ளது. கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் இந்தப் படம், நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருக்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
 
கோர்ட் ஜென்ட்ரி என்ற முன்னாள் சிஐஏ உளவாளியின் சாகசம்தான் இந்த நாவல். ஃப்ரான்சைச் சேர்ந்த மிகப் பெரிய நிறுவனத்தின் பிடியில் உள்ள ஒருவரைக் காப்பாற்ற ஐரோப்பாவிற்குச் செல்கிறான் ஜென்ட்ரி.
 
ஜென்ட்ரியைக் கொலை செய்தால்தான், நைஜீரியாவில் ஒரு மிகப் பெரிய எண்ணெய் ஒப்பந்தம் அந்த ஃபிரெஞ்சு நிறுவனத்திற்குக் கிடைக்கும். ஆகவே அவனைத் துரத்துகிறான் லாயிட் என்பவன். இந்தப் படத்தில் ஜென்ட்ரி பாத்திரத்தில் ரையான் கோஸ்லிங் நடிக்கவிருக்கிறார்.
 
2016லேயே இந்த நாவலை கிரிஸ்டோஃபர் மெக்குவாரியை வைத்து இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லை. 2002ஆம் ஆண்டில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், தமிழ், இந்தி, ஆங்கிலம் என 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.