1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (15:10 IST)

இலங்கை புர்கா தடை விவகாரம் - அரசு முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இலங்கை முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரம் தொடர்பில் அண்மையில் அதிகளவில் பேசப்பட்டது. எனினும், சர்வதேச ரீதியில் ஓரிரு தினங்கள் அதிகளவில் பேசப்பட்ட இந்த விடயம், திடீரென மௌனமாகியது.
 

இலங்கை முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடந்த 13ம் தேதி களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
 
இதையடுத்து, புர்கா அணிவதை தடை செய்யும் விவகாரம், சர்வதேச ரீதியில் அதிகளவில் பேசப்பட்டது.
 
ஏற்கெனவே, கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை (உடல்களை) அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சுமார் ஒரு  வருடமாக மறுப்பு தெரிவித்து வந்தது.
 
இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கைகள், அழுத்தங்களுக்கு மத்தியில், ஜனாஸாக்களை அடக்கம் செய்ய தற்போது அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த ஜனாஸா விவகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரான காலத்தில், தற்போது புர்கா தடைக்கான யோசனை முன்வைக்கப்பட்டு, நாட்டில் சர்ச்சையை  ஏற்படுத்தியிருக்கிறது.
 
இலங்கையில் புர்காவிற்கு தடை ஏற்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அறிவித்திருந்த நிலையில், மீண்டும்  எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.
 
புர்கா தடை ஏற்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்தை அடுத்து, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தனது எதிர்ப்பை  வெளிப்படுத்தியிருந்தார்.
 
இவ்வாறான நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் பின்னரே, ஜனாஸா அடக்கத்திற்கான அனுமதியை இலங்கை வழங்கியதாகவும், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் எதிர்ப்புக்கு பின்னர் புர்கா தடைக்கான பேச்சு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய சமூகத்தினர் கருத்து  வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
 
இந்த விடயம் தொடர்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் ரஸ்மின், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
புர்காவிற்கு தடை விதிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்ததை அடுத்து, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்ததாக ரஸ்மின் குறிப்பிடுகின்றார்.
 
புர்கா அணிவது தமது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என கூறும் ரஸ்மின், புர்காவிற்கு இலங்கை அரசாங்கம் தடை விதிப்பதை ஒரு இஸ்லாமிய  சமூகமாக தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மார்க்கத்தில் முகத்திரை அணிவது தடை செய்யப்பட்ட ஒன்று எனவும் அவர்  கூறுகிறார்.
 
முகத்திரை அணிவது என்பது நபிகள் நாயகத்தின் மனைவிகளுக்கு மாத்திரம் உள்ள சட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த விடயத்தை தாம் விழிப்புணர்வின் ஊடாக மக்களிடையே தெளிவூட்டுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
 
எனினும், அரசாங்கம் இவ்வாறான சட்டங்களை கொண்டு வருவதை தாம் ஆதரிக்க முயற்சிக்கும் போது, நாளை மேலும் பல்வேறு விடயங்களுக்கு தடை ஏற்படுத்த  வாய்ப்புள்ளதாகவும் ரஸ்மின் கூறுகிறார்.
 
இதேவேளை புர்கா தடையானது, அரசாங்கம் இனவாத ரீதியில் எடுத்த ஒரு தீர்மானம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  முஜுபூர் ரகுமான், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
இந்த ஆடையின் ஊடாக பாதுகாப்பு பிரச்னைகள் தோன்றினால், வேறு விதத்தில் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்மானத்தை எட்ட வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.
 
இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக எட்டப்பட்ட முடிவுகள் அல்ல எனக் கூறிய அவர், மார்க்கம் ரீதியிலான உரிமைகளை பாதிக்கக்கூடிய முடிவாகவே இது இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும், அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது, அந்த பிரச்னைகளை திசை திருப்புவதற்கு முஸ்லிம்கள் தொடர்பிலான பல விடயங்களை முன்கொணர்வதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அரபு நாடுகளிடமிருந்து ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான  முயற்சிகளையே அரசாங்கம் எடுத்து வருவதாக முஜுபூர் ரகுமான் குறிப்பிடுகின்றார்.
 
கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளித்தமையானதும், ஜெனீவாவில் அரபு நாடுகளின் ஆதரவை  பெற்றுக்கொள்வதற்காக என அவர் கூறுகின்றார்.
 
அரசாங்கத்தின் பதில்
புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல்  நடத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
 
பிபிசி தமிழுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
எதிர்வரும் நாட்களில் இந்த அமைச்சரவை பத்திரம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.
 
அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இந்த அமைச்சரவை பத்திரம் உள்வாங்கப்பட்டு, விரைவில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில், புர்கா தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரை இடம்பெற்றுள்ளதாக சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.
 
இந்த பரிந்துரைகளை முன்வைத்தவர்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.
 
புர்கா தடை செய்யப்பட வேண்டும் என முதலில் தான் பரிந்துரை செய்யவில்லையென கூறிய அவர், தனக்கு முன்னர் பலர் இதனை கூறியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தெரிவுக்குழு மாத்திரமன்றி, ஜனாதிபதி ஆணைக்குழுவும் இதே பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
 
மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்திற்கு பின்னரே, ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் கருத்தை, சரத் வீரசேகர நிராகரித்திருந்தார்.
 
ஜனாஸா அடக்கம் செய்யும் விவகாரமானது, அரசியல் தீர்மானம் கிடையாது எனவும், அது சுகாதார தரப்பினரின் தீர்மானம் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.