1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2025 (13:50 IST)

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்

US Snow Storm

அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மோசமான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

 

 

ஏழு அமெரிக்க மாகாணங்கள் அவசரநிலைகளை அறிவித்தன. அவை மேரிலாந்து, விர்ஜீனியா, மேற்கு விர்ஜீனியா, கான்சஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சா ஆகும்

 

வட துருவத்தைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை மாற்றம் ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

2,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 9,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன.

 

Poweroutage.us எனும் இணையதளத்தின்படி, பனிப்புயலின் பாதையில் உள்ள மாகாணங்களில் வாழும் கிட்டதட்ட 190,000 மக்களுக்கு, செவ்வாய்கிழமை காலை மின்சார சேவை துண்டிக்கப்பட்டது.

 

தேசிய வானிலை சேவை (NWS) தகவலின்படி, செவ்வாய்க்கிழமையும் அமெரிக்காவின் பெரும்பாலான வடகிழக்கு பகுதிகளில் பனிப்பொழிவு தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

பனிப்பொழிவு குறைந்த பின்னரும், குளிர்ந்த ஆர்க்டிக் காற்று காரணமாக இன்னும் பல வாரங்களுக்கு நாட்டின் ஒரு பகுதி முழுவதும் பனிக்கட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவிக்க, திங்களன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாஷிங்டனில் சந்தித்தபோது, ​​சுமார் 5-9 அங்குல (13-23 செ.மீ) அளவிலான பனிப்பொழிவு ஏற்பட்டது. அருகிலுள்ள மேரிலாந்து மற்றும் வர்ஜீனியாவின் சில பகுதிகளில் ஒரு அடி வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

 

வாஷிங்டன் நினைவுச்சின்னத்தின் முன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் ஒரு பூங்காவில் பனிப்பந்து விளையாட்டிற்காக ஒன்று கூடினர். 15 ஆண்டுகளாக நடந்துவரும் பாரம்பரிய விழாவாக இது கருதப்படுகின்றது.

 

"மகிழ்வாக விளையாடுகிறோம்" என்று உள்ளூரில் வசிக்கும் ஒருவர் ஒருவர் பிபிசியிடம் கூறினார். மேலும் "இதற்கு முன் பனிப்பந்து விளையாட்டில் பங்கேற்றதில்லை"என்றும் அவர் கூறினார்.

 

அமெரிக்காவின் முன்னாள் ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரரான கிளேர் ஏகன், அமெரிக்கத் தலைநகரின் மையப் பாதையான நேஷனல் மாலில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 

நகரத்திற்குச் சென்ற பிறகு, "மீண்டும் பனிச்சறுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்" என்று தான் நினைத்ததாக அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் அவர் கூறினார்.

 

வாஷிங்டன் டிசியின் வானிலை அவசரநிலை செவ்வாய் கிழமை அதிகாலை வரை அறிவிக்கப்பட்டது.

 

பனிப்புயல் காரணமாக, குளிர்கால விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை பள்ளிக்குத் திரும்ப வேண்டிய பல குழந்தைகள் அதற்குப் பதிலாக மற்றுமொரு விடுமுறை நாளை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

 

மேரிலாந்தில் இருந்து கான்சஸ்வரை உள்ள பல மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கடும் பனி மற்றும் பனி மூட்டம் காரணமாக மூடப்பட்டன.

 

அமெரிக்காவின் பிற பகுதிகளில், பனிப்புயல் சாலைகளில் ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது.

 

மிசோரியில், ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 365 பேர் விபத்துக்களில் சிக்க, பனிப்புயல் காரணமாக அமைந்துள்ளது. இதன் விளைவாக அதிகமான மக்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டதாக மாநில நெடுஞ்சாலை ரோந்து தெரிவித்துள்ளது.

 

புயலால் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் ஒன்றான கான்சஸில், புயலின் போது ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் இறந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

டெக்சாஸின் ஹூஸ்டனில், திங்கள்கிழமை காலை பேருந்து நிறுத்தத்தின் முன் குளிரால் ஒருவர் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

வர்ஜீனியாவில், நள்ளிரவு முதல் திங்கள் காலை வரை 300 கார் விபத்துக்கள் பதிவாகியுள்ளன, மாகாணத்தின் பெரும்பகுதிகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு உள்ளூர் மக்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

 

உள்ளூர் ஊடக செய்தியின்படி, குறைந்தது ஒரு வாகன ஓட்டி இறந்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

 

கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன்சாஸ் நகரம் கடும் பனியை எதிர் கொண்டுள்ளதாக வானிலை செயலியான MyRadar இன் மூத்த வானிலை ஆய்வாளர் மேத்யூ கப்புசி பிபிசியிடம் தெரிவித்தார்.

 

ஓஹியோ ஆற்றுக்கு அருகிலுள்ள சில பகுதிகள், குளிர்ந்த வானிலையால் "சறுக்கு வளையங்களாக" மாறியது என அவர் மேலும் கூறினார்.

 

"கலப்பைகள் சிக்கிக் கொள்கின்றன. காவல்துறை சிக்கிக் கொள்கிறது. எல்லோரும் சிக்கிக் கொள்கிறார்கள், வீட்டிலேயே இருங்கள்" என்று அவர் கூறினார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.