சமீபத்தில் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதை ரஷ்யாதான் சுட்டு வீழ்த்தியதாக அஜர்பைஜான் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்பயர் 190 விமானம் ரஷ்யாவின் க்ரோஸ்னி என்ற இடத்திற்கு சென்றபோது மோசமான வானிலை காரணமாக 3 இடங்களில் திருப்பி விடப்பட்டு கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் விமான நிலையத்திற்கு திசை மாற்றிவிடப்பட்டது. விமான நிலையத்திற்கு அருகே சென்றபோது விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் ஐந்து விமான பணியாளர்கள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 28 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது வெளியே வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாதான் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக பேசியுள்ள அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் “எங்கள் நாட்டு விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது. ஆனால் வேண்டுமென்றே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நாங்கள் கூறவில்லை” என தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்யா இன்னமும் தாங்கள் இதை செய்யவில்லை என்றே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K