செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (09:00 IST)

வீட்டுப்பாடம் முடிக்காததால் கைது செய்யப்பட்ட பள்ளி மாணவி!

அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் வீட்டுப்பாடம் செய்யாததால் 15 வயது மாணவி ஒருவர் குற்றத்தில் ஈடுபடும் குழந்தைகளுக்கான தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது போராட்டங்களைத் தூண்டியுள்ளது.

என்ன நடந்தது?

இந்த மாணவி மீது தாக்குதல் மற்றும் திருட்டு வழக்கு ஒன்று கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

அவருக்கான நன்னடத்தை கால விதிகளில் ஒன்றாக வீட்டுப் பாடங்களை சரியாக முடிக்க வேண்டும் என்று ஏப்ரல் மாதம் சிறார் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அந்த விதிகளை அவர் மீறியதால் அவருக்கு மே மாதம் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாகச் செய்தி வெளியிட்ட ப்ரோபப்ளிகா இணையதளம், அந்த மாணவிக்கு 'ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்' எனும் உளவியல் குறைபாடு இருப்பதாகவும், அதன் காரணமாக அவர் நடத்தைகளில் பிரச்சனை உள்ளது என்றும் தெரிவிக்கிறது.

அருகில் ஆசிரியர்கள் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல் அந்த மாணவி சிரமப்பட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இணையம் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஆப்ரிக்க இனத்தை சேர்ந்த அந்த பதின்ம வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார் ஒரு நீதிபதி.

இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் 'கிரேஸ்' என அறியப்படும் அந்த சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்த மாணவியின் வழக்கை விசாரித்த ஓக்லாந்து குடும்ப நீதிமன்றம், அந்த மாணவி வீட்டுப்பாடத்தை முடிக்காமல் நன்னடத்தை விதிகளை மீறி இருக்கிறார் என்றும், அவர் மீதுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளை வைத்து அவர் இந்த சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து வெளிப்படையாக எந்த கருத்தையும் நீதிபதி மேரி எல்லன் ப்ரெமென் தெரிவிக்கவில்லை.

மாணவிக்கு ஆதரவாகப் போராட்டம்

இந்த நிலையில் அந்த மாணவிக்கு ஆதரவாகப் பள்ளி முன்பும், நீதிமன்றம் முன்பும் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய சமூக அறிவியல் ஆசிரியர் கியோஃப், "இது அநீதி. அந்த நீதிபதிக்குக் கல்வி குறித்து எதுவும் தெரியவில்லை," என்றார்.

இந்த போராட்டத்தில் Black Lives Matter என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.

மிச்சிகன் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு மறு ஆய்வு செய்யப்படும் என்று வியாழனன்று தெரிவித்துள்ளது.