ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் – ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து !
தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து 9 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது, தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளோடு இணக்கக் கூடாது ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ ஜனவரி 22 முதல் தொடர்ந்து 9 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த 9 நாட்களும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலானப் பள்ளிகள் இயங்கவில்லை. 9 நாட்களுக்குப் பிறகு அதையடுத்து மாணவர்களின் தேர்வுக் காரணமாக ஆசிரியர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.
இந்தப் போரட்டத்தை முன்னின்று நடத்திய சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களை அரசு கைது செய்தது. மேலும்1,111 பேரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் கோரிக்கைகள் எழுந்தன. மேலும் போராட்டத்தால் மாணவர்களின் கல்விப் பாதிக்கப்படுகிறது என்று ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டிய அரசு, அத்தனை ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ததால் மாணவர்களின் கல்விப் பாதிக்காதா என்ற கேள்வியும் எழுந்தது.
இதையடுத்து இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் அனைவரின் சஸ்பெண்ட் உத்தரவும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.