புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (15:32 IST)

பொருளாதார சிக்கலை தீர்க்க குறைவாக டீ குடிக்கச் சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்

Tea - Pakistan
பாகிஸ்தானின் மோசமான பொருளாதார சூழ்நிலையை சீர்படுத்த அந்நாட்டு மக்கள் வழக்கமாக உட்கொள்ளும் தேநீரை விடக் குறைவான அளவே அதை அருந்த வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


பாகிஸ்தான் மக்கள் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொண்டால் அந்நாட்டு அரசுக்கு உண்டாகும் இறக்குமதிச் செலவு குறையும் என்று மூத்த அமைச்சர் ஆசன் இக்பால் கூறியுள்ளார். இவர் பாகிஸ்தானின் திட்டம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களுக்கான அமைச்சராக உள்ளார்.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்பொழுது மிகவும் குறைவாக உள்ளது.

தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்யும் அளவிலேயே இறக்குமதி செய்ய முடியும் என்பதால் பாகிஸ்தான் தற்போது அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான அவசரத் தேவையில் உள்ளது.

உலகிலேயே அதிகமான அளவு தேயிலைத் தூளை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது.

Minister of Pakistan

கடந்த ஆண்டு மட்டும் 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள டீத்தூளை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.

''நாம் கடன் வாங்கித்தான் டீத்தூளை இறக்குமதி செய்கிறோம் என்பதால் நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவில் ஒன்று அல்லது இரண்டு கப்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்,'' என அமைச்சர் இக்பால் கூறியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

தொழில் நிறுவனங்களும் தங்களது கடைகளை இரவு 08:30 மணிக்கே மூடிவிட்டு மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய பிரதமருக்கு சோதனை

அரசின் கைவசம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் வேகமாகத் தீர்ந்து வருவதால் இறக்குமதிச் செலவை கட்டுப்படுத்தவும், தற்போது இருக்கும் வெளிநாட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அரசு உள்ளது.

பாகிஸ்தான் அமைச்சரின் இந்த கோரிக்கை சமூக ஊடகங்களிலும் மிகவும் வேகமாகப் பரவிவருகிறது.

டீ குடிப்பதை குறைத்துக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள முடியுமா என்று பலரும் தங்களது சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 1,600 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

ஆனால், ஜூன் மாதம் முதல் வாரத்தின் தரவுகளின்படி பாகிஸ்தான் அரசிடம் ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கும் குறைவான வெளிநாட்டுப் பணமே அரசின் கைவசம் உள்ளது.

வெளிநாட்டு பணத்தை அதிகமாக செலவு செய்யாமல் இருப்பதற்காக, அவசியத் தேவைகளுக்கு பயன்படாத ஆடம்பர பொருட்களின் இறக்குமதிக்கு கடந்த மாதம் கராச்சியில் இருக்கும் அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தனர்.

ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷாபாஸ் ஷெரீஃப் அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய சோதனையாக உள்ளது என்றார்.

இம்ரான் கான் தலைமையிலான அரசு பொருளாதாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றும் மீண்டும் பழைய நிலைக்கே பொருளாதாரத்தைக் கொண்டு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுக்க இருந்த 600 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பெறும் நோக்கில் கடந்த வாரம் பாகிஸ்தான் அமைச்சரவை 4,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பட்ஜெட்டை வகுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அரசுக்கு வழங்குவதாக இருந்த தொகை 2019ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் எவ்வாறு அந்த பணத்தை திரும்ப செலுத்தும் என்று கேள்விகள் எழுந்த பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்டது.