1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj

மலேசியாவில் புதிய வைரஸ் திரள்: "'சிவகங்கை கிளஸ்டர்" குழுவுடன் ஒத்துப்போகிறதா?

'சிவகங்கா வைரஸ் திரள்' (Cluster) போலவே மற்றொரு வைரஸ் திரள் கண்டறியப்பட்டது மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விரு வைரஸ் திரள்களின் மூலப்பிறப்பிடம் ஒன்றாக இருக்கலாம் என மலேசிய சுகாதார அமைச்சு கருதுகிறது.

 
தமிழகத்தின் சிவகங்கை பகுதியில் இருந்து கடந்த ஜூலை மாதம் மலேசியா சென்ற நபர் மூலம் அங்கு பலருக்கு வைரஸ் தொற்று பரவியது. 'சிவகங்கா கிருமித் திரளில்' உள்ளவர்கள் கொரோனா வைரஸின் திரிபு என்று குறிப்பிடப்படும் D614G பிறழ்வால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 
கொரோனா வைரஸின் இந்தத் திரிபு 'சூப்பர் ஸ்ப்ரெட்டர்' வகையைச் சார்ந்ததாகும். இந்த திரிபு அதன் மூல வைரஸை விட 10 மடங்கு வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டது என மலேசிய சுகாதார அமைச்சு எச்சரித்திருந்தது. இந்நிலையில் மலேசியாவின் தாவார் என்ற பகுதியில் புதிதாக ஒரு கிருமித் திரள் கண்டறியப்பட்டுள்ளது. இதை 'தாவார் திரள்' என்று குறிப்பிடுகின்றனர். இதுவரை 73 பேர் இந்தக் கிருமித் திரளில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 21 குழந்தைகளும் அடங்குவர்.

 
இந்நிலையில் இவர்களில் சிலரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் சிவகங்கா வைரஸ் திரளில் இடம்பெற்றிருந்தவர்களைப் போலவே தாவார் வைரஸ் திரளிலும் சிலர் D614G எனும் கொரோனா வைரஸ் திரிபு பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

 
எனவே இவ்விரு வைரஸ் திரள்களின் மூலப்பிறப்பிடம் ஒன்றாக இருக்கலாம் என மலேசிய சுகாதார அமைச்சு சந்தேகிக்கிறது.

தாவார் வைரஸ் திரள்: 21 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றியுள்ளது

தற்போதுவரை இரு வைரஸ் திரள்களுக்கும் இடையேயான தொற்றுத் தொடர்பைக் கண்டறிய முடியவில்லை. எனவே தாவார் வைரஸ் திரளில் உள்ள எந்த நபருக்கு சிவகங்கா திரளுடன் தொடர்பிருந்தது என்பதை விசாரித்துக் கண்டறிய வேண்டியுள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

"சிவகங்கா, தாவார் ஆகிய இரண்டு வைரஸ் திரள்களில் இருப்பவர்களுக்கும் ஒரே மாதிரியான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. இரு குழுவினருமே கொரோனா வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வுக்கூட பரிசோதனை வழி உறுதியாகி உள்ளது. தாவர் திரளைச் சேர்ந்த நால்வர் மற்றும் சிவகங்கா திரளைச் சேர்ந்த மூவரின் வைரஸ் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

"அதில் ஏழு மாதிரிகளுமே ஒரே வைரஸ் வகையைச் சார்ந்தவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் இரு வைரஸ் திரள்களுக்கும் ஒரே மூலப்பிறப்பிடம் இருக்கும் எனக் கருதுகிறோம். எனினும் அதைவிட முக்கியமானது டி6164ஜி வைரஸ் திரிபு மிக வேகமாக பரவும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

"சிவகங்கா வைரஸ் திரள் மூலம் கடந்த இரு வாரங்களாக யாருக்கும் தொற்று பரவவில்லை. அதற்கு சுகாதார அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளே காரணம்," என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

தாவார் வைரஸ் திரளில் இடம்பெற்றுள்ள நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 4,500 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் திரளில் 21 குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர்.

தாவார் வைரஸ் திரள் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதிதான் முதலில் கண்டறியப்பட்டது. அடுத்த இரு வாரங்களில் மேலும் 72 கிருமித் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

டிசம்பர் 31 வரை மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

இதற்கிடையே மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் இந்த ஆணை நடைமுறையில் உள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த ஆணையை நீட்டிப்பதாகப் பிரதமர் மொகிதின் யாசின் இன்றிரவு அறிவித்தார்.

கொவிட்-19 தொற்று இன்னும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 'சிவகங்கா திரள்' போன்ற புதிய தொற்றுத்திரள்கள் தொடர்ந்து உருவாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.