ஏழைகளின் வாழ்க்கையை, அவர்களின் அனைத்து சிக்கல்களையும் மற்றும் செழுமைகளையும் புரிந்து கொள்ளக் கடந்த 20 ஆண்டுகளாக உலகின் மிகவும் பிரபலமான பொருளாதார ஜோடியான அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவி எஸ்தர் டஃபலோவும் முயன்று வந்துள்ளனர்.
1961 ஆம் ஆண்டு பிறந்த அபிஜித் பானர்ஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 1988 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் பானர்ஜி.
வறுமை ஒழிப்பு தளத்தில் தொடர்ந்து பணியாற்றிய அபிஜித் பேனர்ஜியும், எஸ்தர் டஃபலோவும் ஏழை பொருளாதாரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளனர்.
ரகுராம் ராஜன், கீதா கோபிநாத், மிஹிர் எஸ் சர்மா ஆகியோருடன் இணைந்து "பொருளாதாரத்திற்கான இப்போதைய தேவை என்ன?" எனும் கட்டுரை தொகுப்பைத் தொகுத்துள்ளார்.
வறுமை குறித்த புரிதல் இன்மை
வறுமை குறித்த போதிய புரிதல் இல்லாதது, வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை எவ்வாறு பாதிப்படையச் செய்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும் அபிஜித் பானர்ஜியும், எஸ்தர் டஃபலோவும் முயன்றுள்ளனர்.
பொருளாதார வல்லுநர் மைக்கேல் க்ரெமெருடன், அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவி எஸ்தர் டஃபலோவும் 2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்வதாகத் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
உலக அளவில் வறுமை ஒழிப்புக்குப் பங்காற்றிய "சோதனை அணுகுமுறைக்காக" இந்த நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர்களாக ஆபிஜித் பானர்ஜியும். எஸ்தர் டஃபலோவும் உள்ளனர்.
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண் எஸ்தர் டஃபலோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜியும், பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பிறந்த டஃபலோவும் முற்றிலும் வித்தியாசமான இடங்களில் வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு வயதில் அன்னை தெரசா பற்றி எஸ்தர் டஃபலோ வாசித்த புத்தகம் ஒன்று, 10 சதுர அடி இடத்தில் மிகவும் நெருக்கமாக மக்கள் வாழ்ந்த கொல்கத்தா (அப்போதைய கல்கத்தா) பற்றி விவரித்தது.
24 வயதானபோது, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டதாரி மாணவியாக இருந்த டஃபலோ, கொல்கத்தாவில் பயணம் மேற்கொண்டபோது மரங்களையும், வெற்று நடைபாதைகளையும் பார்த்தார். அந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருந்த துன்பங்களை அவரால் பார்க்க முடியவில்லை.
ஆனால், கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டின் பின்னால் சிறிய குடிசைகளில் ஏழைகள் வாழ்ந்து வந்ததை அபிஜித் ஆறு வயதிலேயே அறிந்து வைத்திருந்தார்.
"நீண்ட நாட்களாக வறுமை இருந்து வரும் நிலையில் அதன் பிடிகளைக் குறைக்க வேண்டும் என்கிற ஆவல் எங்களுக்குள் இருந்து வந்தது. ஏழைகள் சோம்பேறிகளாக அல்லது ஆர்வ மிக்கவர்களாக, நல்லவர்களாக அல்லது திருடர்களாக, கோபப்படுவோராக அல்லது செயலற்றவர்களாக, உதவி அளிக்கப்படாதவராக அல்லது தன்னிறைவு அடைந்தோராக சமூக விதிகளிலும், இலக்கியத்திலும் விவரிக்கப்படுகின்றனர்" என்று அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டஃபலோ எழுதினர்.
வறுமை குறித்துப் புரிதல் இல்லாமல் இருப்பது. ஏழையாக இருப்பவர்களைத் தவறாகப் புரிந்து கொள்வது. இவைதான் சரியான திட்டங்கள் ஏற்படுத்தப்படாமல் இருப்பதற்குக் காரணமென வெவ்வேறு வார்த்தைகளில் தொடர்ந்து இந்த இணையர் பல்வேறு தளங்களில் தொடர்ந்து எழுதுகின்றனர்.
எழுதுவதோடு மட்டுமல்ல, இவர்கள் இது குறித்த விரிவான ஆய்வையும் மேற்கொண்டுள்ளனர்.
சந்தை எந்த அளவுக்கு ஏழைகளுக்கு உதவி இருக்கிறது என்பதை அறியவும், வறுமையைப் புரிந்து கொள்ளவும் 2003 ஆம் ஆண்டு அப்துல் லத்தீப் ஜமீல் ஆய்வு மையத்தைத் தொடங்கினர்.
அபிஜித் பானர்ஜிக்கும், எஸ்தர் டஃபலோக்கும் 2015ஆம் ஆண்டுதான் திருமணம் ஆனது. ஆனால், அதற்கு முன்பே இவர்கள் தொடர்ந்து வறுமை ஒழிப்பில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் மேற்கொண்ட கள ஆய்வு ஏழைகள் குறித்தும், வறுமை குறித்தும் புரிந்து கொள்ள உதவுகிறது.
பல்வேறு நாடுகளில் இதற்காக 80 ஆய்வுகளை மேற்கொண்டதாகக் கூறுகிறார்கள்.
அவர்கள் ஏழைகள் என்ன நுகர்கிறார்கள்? அவர்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்கள் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதை ஆய்வு செய்கிறார்கள்.
குறிப்பாக அவர்கள் உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்ததில் ஏழைகள் குறித்துப் புரிந்து கொள்வதில் புதிய வெளிச்சம் பிறக்கிறது.
அவர்கள், "பணம் மட்டும் ஏழைகளுக்கு அதிகம் கொடுப்பதால் அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைத்துவிடப் போவதில்லை. இந்தியாவில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகமாக வருமானம் வரும் போது, ஏழைகள் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு வேறு பிரச்சனைகளும் உள்ளன. அவர்களுக்கு வேறு அழுத்தங்களும் உள்ளன" என்று கூறுகின்றனர்.
மந்திர சக்தியைக் கொண்டு ஏழைகளின் வாழ்வை ஒரு நாளில் முன்னேற்றிவிட முடியாது. பல்வேறு விஷயங்கள் உள்ளன, தகவலைச் சரியாக அவர்களுக்குப் பரிமாறுவது, புதிய கண்டுபிடிப்புகளை அவர்களிடம் எடுத்துச் செல்வது என அனைத்தையும் ஒன்றிணைத்துதான் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த முடியுமென எழுதுகிறார்கள்.
பணமதிப்பிழப்பு
மோதி அரசு பணமதிப்பிழப்பு கொண்டு வந்த போது அதனைக் கடுமையாகச் சாடியவர் அப்ஜித்.
அதனைக் குழப்பமான நடவடிக்கை என வர்ணித்தார் அவர்.
"பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி முறை போன்றவை பணவீக்கத்தை மேலும் அதிகரித்துள்ளது" என்றார்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு பேசிய பானர்ஜி, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை தள்ளாட்டத்தில் உள்ளது எனவும் நிலையான வளர்ச்சி என்பதற்கான உறுதி தற்போது முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த நியாய் திட்டத்தின் ஆலோசகராக அபிஜித் இருந்தார்.
தமிழ்நாடு தொடர்பு
தமிழகத்திற்கு அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்ளோ ஆற்றிய சேவை குறித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர், "இந்தியாவில் பிறந்த சர்வதேச பொருளாதார மேதையான அபிஜித் பானர்ஜி பொருளாதார ஆராய்ச்சிகளுக்காகவும் பேராசிரியராகவும் திறம்பட பணியாற்றி வருபவர். அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள J-PAL நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ உட்பட உலகப் புகழ் பெற்ற பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளைப் பெற்று தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது." இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.