எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு
மத்திய அரசிற்கு கீழ் இயங்கும் ஜிம்பர் மருத்துவமனை மற்றும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கையும் இனி நீட் நுழைவுத் தேர்வு வைத்தே நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுவரை ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அவர்களுக்கென தனி நுழைவுத்தேர்வு வைத்தே மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தன. இனி அடுத்த கல்வி ஆண்டில், அதாவது 2020ல் இருந்து நீட் நுழைவுத்தேர்வு வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
எய்ம்ஸ் ஜிம்பர் தவிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கும், தேசிய மருத்துவ ஆணைய சட்டப்படி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கலந்தாய்வு வைக்கப்படும்.
தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து தமிழகத்திலும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் வழியாகவே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஆனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனை சேர்க்கைக்கு மட்டும் தனி நுழைவு நடத்தப்பட்டது. தற்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பால், அதில் சேர நினைக்கும் மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும்.