1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (18:43 IST)

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் வெற்றி உலகின் மீது என்ன தாக்கம் செலுத்தும்?

ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது பலவகையில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 77 வயதில் அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார்.
 
இதன்மூலம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மூத்த வயதில் அதிபர் பதவி ஏற்பவர் ஆகிறார் ஜோ பைடன்.
 
அமெரிக்காவின் துணை அதிபர் பதவியில் இதுவரை பெண்கள் யாரும் இருந்ததில்லை. அந்த வகையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பதும் இதுவே முதல் முறை என்பதால், இதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகிறது.
 
ஆப்ரிக்க - அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மற்றும் ஆசிய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் துணை அதிபர் பதவிக்கு வருவதும் இதுவே முதல் முறை.
 
 
ஜோ பைடனின் ஆதரவாளர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் ஜோ பைடனின் ஆதரவாளர்கள் ஊர்வலங்கள் நடத்தி வருகிறார்கள்.
 
சமூக ஊடகங்களிலும் பலர் ஜோ பைடன் வெற்றி எப்படி அமெரிக்காவின் வருங்காலத்தையும் உலகின் வருங்காலத்தை மாற்றப் போகிறது என்றும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
 
டிரம்ப் ஆட்சி - கடினமான காலகட்டம்
 
கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சி பலருக்கும் மிகவும் கடினமான ஒரு காலகட்டம் என்றே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
 
டொனால்ட் டிரம்ப் உள்நாட்டில் இருப்பவர்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருந்தார்.
 
ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் குடிவரவு கொள்கை, வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களைத் தடுக்கும் முயற்சிகள் ஆகியவை காரணமாக மட்டுமல்லாமல் சிறுபான்மையின மக்கள் மீது டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துகளால் பல்வேறு தரப்பினரும் அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார்கள்.
 
ஜோ பைடனுக்கு கிடைத்து இருக்கக்கூடிய இந்த வெற்றி அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் உலகத்தையே இணைக்கக்கூடிய ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது.
 
ஏனென்றால் அமெரிக்காவே ஒரு பிளவுபட்ட நிலையில் இருந்தது. அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பு அமெரிக்கா கட்சி ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிந்து இருந்தது.
 
இதுவரை நடந்த எந்தத் தேர்தலிலும் கண்டிராத அளவுக்கு வேறுபாடுகளும் வெறுப்புகளும் உமிழப்பட்டன.
 
சமூக வலைத்தளங்களிலும் பல தவறான தகவல்கள் பகிரப்பட்டன.
 
இப்பொழுது ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றி வேறுபட்டு இருந்தவர்களை இணைக்கும்.
 
உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவை உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளுடனும் இணைக்கும் வெற்றியாக இந்த வெற்றி இருக்கும்.
 
ஏனென்றால் தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டிருந்தார் டிரம்ப்.
 
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், இரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவற்றில் இருந்து டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவை விலக்கியது.
 
உலகில் அமைதியை கொண்டு வருவதற்கான, மற்றும் புதிய விடியலுக்கான ஓர் ஆட்சியாக ஜனநாயக கட்சியின் ஆட்சி இருக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள்.