1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (13:03 IST)

லேப்டாப்பில் எப்போதும் சார்ஜ் போட்டுக் கொண்டே வேலை செய்யலாமா?

மடிக்கணினி பயன்பாட்டைப் பொருத்தவரை, அதனுடைய பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது எப்படி அல்லது குறைந்த பட்சம் விரைவில் சார்ஜ் இழப்பைத் தடுப்பது எப்படி என்பது தான் பொதுவாக எழும் கேள்வி

காலப்போக்கில் பொதுவாக எல்லா பேட்டரிகளும் செயல் திறனை இழக்கும் என்றாலும், நாம் அதற்குக் கொடுக்கும் அழுத்தம், அதன் நீண்ட ஆயுளையோ அதிக நேரம் சார்ஜைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனையோ பாதிக்குமா என்று பல பயனாளர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அப்படியானால், நாம் பேட்டரிகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்

அதாவது, எப்போதுமே நூறு சதம் சார்ஜில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமா அல்லது தேவைக்கேற்ப சார்ஜ் செய்தால் போதுமா?

பி பி சி முண்டோ, பல நிபுணர்களிடம் பேசிய போது, லித்தியம் அயான் அல்லது லித்தியம் பாலிமர் என்று லித்தியம் கொண்டு உருவாக்கப்படும் பேட்டரிகளைப் பயன்படுத்தும் முறை பற்றி பரிந்துரைத்தனர்.

பேட்டரியின் ஆயுட்காலம்

ஒவ்வொரு தலைமுறையிலும் பேட்டரி தொழில்நுட்பம் மேம்பட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, நூறு முறை சார்ஜ் செய்யப்பட்டதும் மடிக்கணினி பேட்டரிகள் திறனிழக்கத் தொடங்கின என்று அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் லெனோவோவின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் ஆஷ்லே ரால்ஃப் பி பி சி முண்டோவிடம் தெரிவித்தார்.

புதிய மடிக்கணினி பேட்டரிகள் பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. இதற்குள் சுமார் 500 முதல் ஆயிரம் முறை சார்ஜ் செய்யப்படுகின்றன.

நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வாளர் கென்ட் க்ரிஃப்ஃபித், பி பி சி வர்ல்ட்-க்கு அளித்த பேட்டியில், "பேட்டரிகள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரவேண்டும் என்றும் ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும் போதும் அதிக நேரம் சார்ஜ் தங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறீர்கள்" என்றார்.

இந்தச் சமன்பாட்டை எப்படி எட்டுவது?

லெனோவோவைச் சேர்ந்த ரால்ஃப், பி பி சி முண்டோவிடம், ஒரு மடிக்கணினியை எப்போதும் ப்ளக் இன் செய்து வைத்து 100% சார்ஜில் வைப்பது பாதுகாப்பதும் சாதாரணமானது கூட என்று தெரிவிக்கிறார்.

நீங்கள் உங்கள் மடிக்கணினியை எப்போதும் ப்ளக் இன் செய்வீர்களா?

லெனோவோ மற்றும் சில நிறுவனங்களின் மடிக்கணினிகள் தேவைக்கு அதிகமாக சார்ஜ் ஆகாமலும் அதிக சூடாகி விடாமலும் காக்கும் சென்ஸார்களை உள்ளடக்கியுள்ளன என்று அவர் விளக்குகிறார்.

இருந்தாலும் எப்போதுமே 100% -ல் வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தைச் சிறிது குறைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

லெனோவாவின் மூலோபாய தொழில்நுட்ப இயக்குநரும் முதன்மை பொறியியலாளருமான அவரது சகா பில் ஜேக்ஸ், "அண்மை ஆண்டுகளில் பின்பற்றப்படும் அதிக ஆற்றல் அடர்த்தி வேதியியல் மூலம், பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், குறிப்பாக அதிக வெப்பநிலையில் வைக்கப்பட்டிருந்தால், அவை மிக வேகமாகச் சிதைந்துவிடும் என்பதைக் கண்டறிந்துள்ளோம்," பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

சில நிபுணர்கள் 80% வரை இருந்தால் போதுமானது என்று பரிந்துரைக்கின்றனர்

காரணம், "உங்கள் பேட்டரி இருக்கக்கூடிய மிக உயர்ந்த நிலை 100% , ஏனெனில் மின்னழுத்தம் அப்போது தான் மிக அதிகமாக இருக்கும்" என்று நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் கென்ட் கிரிஃபித் விளக்குகிறார்.


உற்பத்தி நிறுவனமனமான ஹெச்பி, பிபிசி முண்டோவிடம் இதே கருத்தைத் தான் கூறுகிறது. "எல்லா நேரங்களிலும் மின்னோட்டத்துடன் மடிக்கணினிகள் இணைக்கப்படுவதை ஹெச்பி பரிந்துரைக்கவில்லை."

"இன்றைய பெரும்பாலான பேட்டரிகள் 100% ஐ அடைந்தவுடன் சார்ஜ் ஆவதைத் தவிர்க்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன", ஆனால் இந்த தொழில்நுட்பம் பேட்டரியின் மீது செலுத்தப்படும் அதிக அழுத்தம் காரணமாக ஏற்படும் விரைவான சிதைவைத் தடுப்பதில்லை" என்று ஹெச்பி விளக்குகிறது.

அதனால், நூறு சதத்துக்கும் குறைவாகவே பேட்டரி சார்ஜை வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தை அதிகப்படுத்தும் என்று க்ரிஃப்ஃபித் கூறுகிறார்.

இந்த நிபுணர்களின் பரிந்துரை என்னவென்றால், மடிக்கணினி முழுமையாக சார்ஜ் செய்யப்படும் நேரத்தை மட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதை 100% வரை சார்ஜ் செய்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை ப்ளக்கில் செருகும்போதும் 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வது உசிதம் என்று பரிந்துரைக்கின்றனர்.

"தொழில்நுட்ப ரீதியாக, பேட்டரிகள் 50% சார்ஜில் தான் திறனதிகம் கொண்டுள்ளன. எனவே அவற்றை 20 முதல் 80% வரை வைத்திருப்பது சிறந்தது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்," என்று ரோல்ஃப் கூறுகிறார்.

சுமைகளை 80% ஆகக் கட்டுப்படுத்துவது "அதிகபட்ச நன்மையை அளிக்கிறது, அதிகபட்ச சுமை புள்ளியை 90 அல்லது 95% வரை வைத்திருப்பதில் இன்னும் குறிப்பிடத்தக்க நன்மை இருக்கிறது" என்று ஜேக்ஸ் கூறுகிறார்.

மைக்ரோசாப்ட் தனது வலைத்தளத்தில் அதன் சர்ஃபேஸ் மடிக்கணினிகளின் விஷயத்தில் (பிற பிராண்டுகளுக்கு அல்ல) "அதிக சார்ஜில் வைக்கப்படும் பேட்டரிகள் திறனை விரைவாக இழக்கும்" என்று எச்சரிக்கிறது.

"உங்கள் சர்ஃபேஸ் மடிக்கணினியை நீண்ட காலத்திற்கு மின்சக்தியுடன் இணைத்து வைப்பதைத் தவிர்ப்பதன் மூலம் இந்த விரைவான சேதத்தைத் தடுக்க முடியும். அப்படி மடிக்கணினியைத் தொடர்ந்து ப்ளக் இன் செய்வதாக இருந்தால், பேட்டரி சார்ஜ் வரம்பு பயன்முறையைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்" என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட், லெனோவோ மற்றும் ஹெச்பி போன்ற பல பிராண்டுகள் அவற்றின் உள்ளமைவுகளில் அதிகபட்ச சுமைகளை மட்டுப்படுத்தும் வசதியை வழங்குகின்றன.

உதாரணமாக, ஹெச் பி-யில், "மேக்சிமைஸ் மை பேட்டரி ஹெல்த்" என்ற மோட்- ல் இது 80% சார்ஜ்-க்கு மட்டுப்படுத்தப்படுகிறது.

பொதுவாக, "பேட்டரி நீண்ட காலம் நீடிக்க விரும்பினால், ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும் போதும், சற்று குறைவான சார்ஜுடன் (100% க்கு பதிலாக 80%) நிறுத்தலாம். ஆனால் பேட்டரி அதிக சார்ஜ் சுழற்சிகளை எடுக்கக்கூடும்" என்று கிரிஃபித் கூறுகிறார்.

அதாவது, பேட்டரி சார்ஜ் செய்த பிறகு எவ்வளவு நேரம் சக்தி வழங்குகிறது என்பதற்கும் அதன் வாழ்நாளில் எத்தனை சார்ஜ் சுழற்சிகளை அது செய்கிறது என்பதற்கும் இடையில் ஒரு சமநிலை எட்டப்பட வேண்டும்.

உங்கள் மடிக்கணினியை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?

ஆனால் இந்த பரிந்துரைகள் மடிக்கணினியை 100% அடையும் ஒவ்வொரு முறையும் உடனடியாக துண்டிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

"எல்லா மடிக்கணினிகளிலும் பேட்டரிகளைப் பாதுகாப்பதற்கும் அதிக சார்ஜ் ஆவதைத் தவிர்க்கவும் கட்டுப்பாட்டு சர்க்யூட்கள் உள்ளன. ஆனால் 80% சார்ஜுடன் நிறுத்தும் போது, பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க முடியும்" என்கிறார் லெனோவோவின் ரோல்ஃப்.
நீங்கள் மின் இணைப்பைப் பெற முடியாத நேரங்களில் 100% சார்ஜ் செய்து எடுத்துக்கொள்வது நல்லது.

ஆனால் அதே நேரத்தில், "இந்தக் காலத்தில், பேட்டரிகள் பொதுவாகவே நீண்ட காலம் நீடிக்கும் விதத்தில் தான் வருகின்றன. அதனால் அநேகமாக இது குறித்துப் பெரிதும் கவலைப்படத் தேவையில்லை" என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

"இன்று மடிக்கணினியின் ஆயுளை விட நீண்ட காலம் நீடிக்கும் அளவுக்கு பேட்டரிகள் திறன் மிக்கவையாகவே இருக்கின்றன" என்று அவர் கூறுகிறார்.

நீங்கள் மடிக்கணினியை எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்பதைப் பொருத்து முடிவு செய்யவேண்டும் என்பதே ரோல்ஃபின் இறுதி பரிந்துரை. அதாவது, நீங்கள் ஒரு மின் இணைப்பை எப்போது வேண்டுமானாலும் பெற முடியும் சூழலில் இருக்கிறீர்களா அல்லது மின் இணைப்பைப் பெற முடியாத சூழலில் பணியாற்றப்போகிறீர்களா? மின் இணைப்பு பெற முடியாத நிலையில் 100% சார்ஜ் செய்வது நல்லது.

"நீங்கள் பெரும்பாலும் உங்கள் இருப்பிடத்தில் தான் இருக்கிறீர்கள் என்றால், சற்று குறைத்து சார்ஜ் செய்யலாம். அதிக நேரம் பயணத்தில் இருந்தால், 100% சார்ஜ் செய்து விடலாம். கவலைப்படத் தேவையில்லை.