திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (19:36 IST)

இந்தியன் 2: சேனாபதி மீண்டும் மக்களைக் கவர்ந்தாரா? ரசிகர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இன்று காலை 9 மணிக்கு சிறப்புத் திரையிடலுடன் வெளியானது கமல் ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார்.



இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. பிறகு அதன் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு 2017இல் வெளியாக, மக்கள் மத்தியில் இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

கமல் ஹாசனின் ரசிகர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்து, இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளனர். சிலர் இந்தியன் படத்தின் திரைக்கதையை `இந்தியன் 2’ ஈடுசெய்யவில்லை என்கிறார்கள். சிலரோ இந்தியன் 3 படத்திற்கான “ட்ரெய்லர் ஷோ,” இது என்கிறார்கள். அனிருத்தின் இசை சிறப்பாக இருப்பதாகச் சிலர் கூற, சிலரோ ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையை ‘மிஸ்’ செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

'இந்தியன் தாத்தா' 28 ஆண்டுகள் கழித்து வந்துள்ளார். அவர் மக்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தாரா? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இணையான இசையை அனிருத் வழங்கியுள்ளாரா? முதல் காட்சி முடித்து வெளியே வந்த ரசிகர்கள் பிபிசியிடம் கூறியது என்ன?

இந்தியன் 2 - கலவையான அனுபவம்

தனது நண்பர்களுடன் கர்நாடகாவில் இருந்து இந்தப் படத்தைப் பார்க்க சென்னை வந்திருந்த பிரேம் குமார் கமல் ஹாசனின் நடிப்பு பிரமாண்டமாக இருப்பதாகக் கூறினார். 70 வயதான தனது தாயுடன் படம் பார்க்க வந்திருந்த ஷீலா தேவி, கமல் ஹாசன் - ஷங்கரின் கூட்டணியில் உருவான படத்தைக் கட்டாயம் திரையில் பார்க்க வேண்டும் என்று வந்ததாகத் தெரிவித்தார்.

“ஷங்கரின் அனைத்து படங்களும் சிறப்பாக இருக்கும். அதே நம்பிக்கையுடன்தான் வந்தோம். அந்த நம்பிக்கை வீணாகவில்லை,” என்று ஷீலா தேவி கூறினார்.

இந்தியன் 2 படத்தை சென்னையில் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனிருத் என்ற ரசிகர், "இந்தியன் முதல் பாகத்தின் திரைக்கதைக்குக் கொஞ்சம்கூட அருகே வரவில்லை" என்று வருத்தம் தெரிவித்தார்.

“மோசமான திரைக்கதை. இரண்டாம் பாதியில் படம் மிக மெதுவாக நகர்கிறது. திரைக்கதையைக் கொஞ்சம் மேம்படுத்தியிருந்தால் இதுபோன்ற ஓர் அனுபவத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்று மேற்கோள் காட்டினார் அவர். மேலும், வீட்டுக்குச் சென்ற உடனே இந்தியன் படத்தின் முதல் பாகத்தைப் பார்த்தால்தான் இந்தப் படத்தில் இருந்து மீள முடியும் என்றும் அனிருத் கூறினார்.

இதர நடிகர்களின் பங்களிப்பு பற்றிப் பேசிய ஃபரூக், சித்தார்த்தின் நடிப்பு பிரமிக்க வைப்பதாகக் குறிப்பிட்டார்.

“இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிவகார்த்திகேயனை அணுகியதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் அவர் இப்படி நடித்திருப்பாரா என்று தெரியவில்லை. சித்தார்த் நடிப்பு மட்டுமின்றி பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் போன்றோரும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர்,” என்று குறிப்பிட்டார் ஃபாரூக்.

இந்தியன் 2 மூலம் ஷங்கர் பேசும் சமூக செய்தி

கல்லூரி மாணவரான நிரஞ்சன் அவர் எதையெல்லாம் எதிர்பார்த்து வந்தாரோ அது அனைத்தும் இந்தியன் 2இல் இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக அனிருத்தின் இசை சிறப்பாக இருப்பதாகவும், படத்தில் அவரின் பணி சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
படத்தின் முதல் பாதி மிகவும் வேகமாக நகர்வதாகவும் இரண்டாம் பாதி தொய்வாக இருப்பதாகவும் குறிப்பிட்ட ரசிகர்கள், படத்தின் ஆரம்பத்தில் வரும் “ஓப்பனிங்,” பாடலைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.




இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு, தமிழ் நடிகர் விவேக் போன்றோருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அவர்களை நினைவு கூறும் வகையிலும் ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படக்குழுவினர் படத்தில் இணைத்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு விவேக்கை திரையில் காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய பிரேம்குமார், விவேக்கின் நகைச்சுவைத் திறனை படத்தில் மிஸ் செய்ததாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் அவரின் இழப்பை ஈடுசெய்யும் வகையில் திரையில் உதவவில்லை என்றுதான் கூற வேண்டும் என்கிறார் பிரேம்குமார்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சென்னை சேர்ந்த அபிஷேக், விவேக் வரும் காட்சிகள் படத்தோடு பொருந்திப் போகவில்லை எனத் தனது விமர்சனத்தை முன்வைத்தார்.

மற்ற ஷங்கர் படங்களைப் போன்றே போன்றே இதிலும் சமூக கருத்து இருப்பதாகக் குறிப்பிடும் ரசிகர்கள், இன்றைய ரசிகர்களுக்குச் சென்று சேரும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

“இன்றைய இளம் தலைமுறையினருக்கு சரியாக ஊழல் குறித்த கருத்துகள் சேரும்படி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே இந்தியன் படம் பார்த்த என்னைப் போன்ற நபர்களுக்கு இந்தப் படத்தில் ஏதோ ஒன்று குறைவதாக உள்ளது,” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் ப்ரியா.

இந்தியன் 3 - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

“இந்தியன் மற்றும் இந்தியன் 2 படங்களுக்கு இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு சில இடங்களில் முதல் படத்தோடு இதைத் தொடர்புப்படுத்திப் பார்க்க முடிந்தது. ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க இந்தியன் 3 படத்துக்கான டிரெய்லர்தான்,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பூஜா.

“இந்தியன் ஒரு தனித்துவமான படம், இந்தியன் 2வும் தனித்துவமான படம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. திரைத்துறையில் அது சாத்தியம் இல்லாததும்கூட” என்று கூறிய பூஜா, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் இந்தப் படத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.

“இந்தியன் படத்தின்போது கமல் ஹாசனின் கெட்-அப் படம் முழுமைக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லை. ஒரு சில இடங்களில் அந்த மேக்-அப் அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது. மேக்-அப் சரியாகப் பொருந்தவில்லை. படக்குழுவினர் இதைக் கொஞ்சம் கவனித்துச் சரிப்படுத்தியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும்,” என்றும் குறிப்பிட்டார் ஃபரூக்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனீஷா கொய்ராலா நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியானது இந்தியன் திரைப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்க, ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ஜென்டில்மென், காதலன் திரைப்படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக ஷங்கர் இயக்கிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்தியன் என்ற பெயரில் வெளியான இந்தப் படம், தெலுங்கில் பாரதியீடு என்றும் இந்தியில் இந்துஸ்தானி என்றும் வெளியானது. அன்றைய நாளில் ரூ.50 கோடி வரை வசூல் செய்ததாஇந்தியன் திரைப்படம் தெரிய வருகிறது.