புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (23:15 IST)

இந்தியா - சீனா எல்லை மோதல்: இந்திய படையினரை தாக்க சீனர்கள் பயன்படுத்திய ஆயுதம் இதுதானா?

லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்தியப் படையினரைத் தாக்குவதற்கு சீனப் படையினர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களின் படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.

இந்நிலையில் இந்த தாக்குதலில் சீனர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் படங்கள் என்று கூறி, இந்திய சீன எல்லையில் பணியாற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு படத்தை பிபிசிக்கு அனுப்பியிருந்தார். அந்தப் படம்தான் இங்கே பகிரப்படுகிறது.

இரும்புக் கம்பியில் ஆணி பொருத்திய ஆயுதங்களைக் காட்டும் இந்தப் படத்தை இந்தியாவைச் சேர்ந்த ராணுவ விவகார வல்லுநர் அஜய் சுக்லா டிவிட்டரில் முதல் முதலில் பகிர்ந்திருந்தார். இந்தப் படத்தில் இருக்கும் ஆயுதங்களை சம்பவ இடத்தில் இருந்து இந்திய சிப்பாய்கள் கைப்பற்றியதாகவும், இவற்றைக் கொண்டே ரோந்து சென்ற இந்தியப் படையினரை சீனப் படையினர் தாக்கியதாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இது காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கவேண்டும். இது பொறுக்கினத்தனம், சிப்பாய்த்தனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

1996ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, சர்ச்சைக்குரிய பகுதியில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காக இரு தரப்பிலும் ஆயுதம் ஏதும் எடுத்துச்செல்லக்கூடாது.

ஆனால், குறிப்பிட்ட சம்பவ நேரத்தில் ரோந்து சென்ற இந்தியப் படையினரிடம் ஆயுதம் இருந்ததாகவும், பழைய ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது நீண்டகால நடைமுறை என்பதால் அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் எல்லையில் உள்ள படையினர் எப்போதும் ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆணிகள் பொருத்திய இரும்புக் கம்பிகளைக் காட்டும் இந்தப் படம், இந்தியாவில், டிவிட்டரிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்படுகிறது. ஆனால், இந்திய ராணுவமோ, சீன ராணுவமோ இந்தப் படம் குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.

எட்டுவதற்கு கடினமான பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் கடும் பனிச் சூழலில் இந்தக் கைகலப்பு நடந்ததாகவும் இந்த மோதலில் பல சிப்பாய்கள் கல்வான் ஆற்றில் விழுந்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.