செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (23:45 IST)

இம்ரான் கான் விவகாரம்: பாகிஸ்தான் ஆபத்தான நிலையில் இருக்கிறதா?

"இம்ரான் கான் தற்போது நாட்டின் மிகவும் பிரபலமான தலைவர் என்பது உண்மைதான், அவரது கட்சி மக்களுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது, ஆனால் இது அவரைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக ஆக்கமுடியுமா? நாடு அவருக்கு முன்னால் குனிந்து, மண்டியிட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகலாமா வேண்டாமா என்பதை நீங்களே உங்கள் விருப்பத்தின்படி முடிவு செய்யுங்கள் என்று கூறமுடியுமா?
 
இம்ரான் கான் மீடியா கேமராக்கள் முன் போலீஸ் முன் ஆஜராகியிருந்தால், அவரது ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட அதே போலீசார்தான் அவரது பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றிருப்பார்கள்." என்று விளக்குகிறார் அவர்.
 
அராஜகம் மற்றும் உள்நாட்டுப் போர்
 
காவல் துறை தனது ஆதரவாளர்களைத் தாக்கியதாக பிடிஐ கட்சி கூறுகிறது, ஆனால் பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் இம்ரான் கான் அராஜகத்தைப் பரப்பி நாட்டை உள்நாட்டுப் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார்.
 
இஸ்லாமாபாத்தில், தகவல் துறை அமைச்சர் மரியம் கூறுகையில், "போலீசாரிடம் துப்பாக்கிகள் இல்லை, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் குழுவால் அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர்," என்றார்.
 
லாகூரில் உள்ள இம்ரான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த மோதலில் 65 போலீசார் காயமடைந்ததாக அவர் கூறினார். இப்போது இது நீதித்துறையின் சோதனை என்றும் மரியம் அவுரங்கசீப் கூறினார்.
 
இம்ரான் கான் கைதுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பல்வேறு வழக்குகளில் அவருக்கு நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற உத்தரவை போலீசார் பின்பற்றி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
"கடந்த கால விதிமீறல்களுக்காக நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்திருந்தால், இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. இன்று நீதிமன்றங்கள் இம்ரான் கானின் வாரண்டுகளை ரத்து செய்தாலோ அல்லது தாமதப்படுத்தினாலோ, நீதிமன்றங்கள் ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இதேபோன்ற தளர்வை வழங்க வேண்டும்.”
 
மறுபுறம், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், “ஜமான் பூங்காவில் போலீசார் மிகவும் பொறுமையுடன் நிலைமையைக் கட்டுப்படுத்தி, உயிர்ச் சேதம் ஏற்படாது காத்தனர். இல்லையெனில் இம்ரான் கானை கைது செய்வது காவல்துறைக்கு மிகவும் கடினமாக இருந்திருக்காது. இம்ரான் கான் தனது அரசியல் லாபத்துக்காக உயிர்களைப் பறிக்கவும் தயாராகிவிட்டார்” என்று கூறினார்.
 
ஜமான் பூங்கா தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தன. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் காவல்துறையின் நடவடிக்கையை விமர்சித்து வீடியோக்கள் மற்றும் படங்களைப் பகிர்ந்து வந்தனர்.
 
அதிபர் ஆரிஃப் அல்வி தனது ட்விட்டர் பதிவில், இந்தச் சூழலால் மிகுந்த வருத்தம் அடைவதாகத் தெரிவித்தார். அவர் லாகூரில் உள்ள நிலைமையை பழிவாங்கும் அரசியல் என்று குறிப்பிட்டார்.
 
அரசாங்கத்தின் முன்னுரிமைகள் என்னவென்பதை இது காட்டுவதாகவும், இந்த நேரத்தில் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், இம்ரான் கானின் பாதுகாப்பு, கௌரவம் குறித்துக் கவலை தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையை நீதித்துறைக்குச் சவாலான நிலை என்று விவரித்தார்.
 
சில பிரபலங்களும் இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகை அதிகா ஓதோ இன்ஸ்டாகிராமில் இம்ரான் கானின் நலனுக்காக பிரார்த்திப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
 
"இம்ரான் கான் நம் நாட்டின் அடிமை சங்கிலியை உடைக்க முயன்றதால் இப்படி நடத்தப்படுகிறார். யாரையும் இப்படி நடத்தக் கூடாது."
 
பாகிஸ்தானில் அனைத்து தரப்பு மக்களும் இம்ரான் கானுக்கு ஆதரவாகக் களமிறங்குவதைப் பார்க்கும்போது நம்பமுடியவில்லை என்று அட்னான் சித்திக் ட்விட்டரில் எழுதியுள்ளார்.
 
இருப்பினும், பிடிஐயின் எதிர்க்கட்சிகள் பிடிஐ ஆதரவாளர்களை விமர்சித்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீப் சிறைக்கு அனுப்பப்பட்ட நேரத்தை அவர்களுக்கு நினைவூட்டுகின்றன. அப்போது இம்ரான் கான் அரசு நீதி கிடைத்து விட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் காரணம்
இரண்டு வெவ்வேறு வழக்குகளில் இம்ரான் கானுக்கு எதிராக இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளன. நீதிமன்ற விசாரணையின் போது அவர் ஆஜராகாததால் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தோஷாகானா வழக்கில், பிப்ரவரி 28 ஆம் தேதி இம்ரான் கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்தன, ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கைதாவதை தவிர்த்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்படும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது கட்டாயமாகும்.
 
இரண்டாவது வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேரணியின் போது பெண் நீதிபதியை மிரட்டியது தொடர்பானது. எனினும், இந்த வழக்கில் அவரது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் மார்ச் 16ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
தோஷாகானா வழக்கில், போலீசார் இம்ரான் கானைப் பலமுறை கைது செய்ய முயன்றனர், ஆனால் ஒவ்வொரு முறையும் இம்ரான் கான் வீட்டில் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
 
இம்ரான் கான் நவம்பர் 2022 முதல் லாகூரில் வசித்து வருகிறார். அந்த நேரத்தில் அவர் வஜிராபாத்தில் நடந்த பேரணியில் தாக்கப்பட்டார். இம்ரான் கான் காயங்களில் இருந்து இன்னும் மீண்டு வருவதாகவும், காலில் பிளாஸ்டர் போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
இம்ரான் கான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அதன்பிறகு அவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பு கூறுகிறது.