டோக்யோ ஒலிம்பி ஹாக்கி போட்டிகளில் வெல்லும்போதெல்லாம் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் இருந்து வாழ்த்துப் பறக்கிறது. தொலைபேசியில் வீரர்களை அழைத்துப் பேசுகிறார். சில நேரங்களில் காணொளி வடிவில் வாழ்த்துச் சொல்கிறார். ஏன் இந்த அக்கறை, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கும், இந்திய ஹாக்கி அணிக்கும் என்ன தொடர்பு?
இந்திய ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் துணைக் கேப்டன்கள் ஒடிஷாவை சேர்ந்தவர்கள். ஆனால் நவீன் பட்நாயக்கின் அக்கறைக்கு இது மட்டுமே காரணமல்ல. கடந்த சில ஆண்டுகளாக ஹாக்கியை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை ஒடிஷா மேற்கொண்டு வருகிறது.
மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய ஹாக்கி அணிகளுக்கும் ஒடிஷா அரசுதான் ஸ்பான்சர். 2018-ஆம் ஆண்டில் ஹாக்கி அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப்பை சஹாரா நிறுவனம் நிறுத்திக் கொண்ட பிறகு, ஒடிஷா மாநில அரசு களமிறங்கியது.
தேசிய ஆண்கள் அணி, பெண்கள் அணி, ஜூனியர் அணி, சீனியர் அணி என் அனைத்து ஹாக்கி அணிகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு நிதியுதவி அளிக்கும் பணியைத் தொடங்கியது. தேசிய அணிக்காக ரூ.150 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்தது.
ஒரு தேசிய அணிக்காக மாநில அரசு ஒன்று நிதியுதவி அளித்திருப்பது இதுவே முதல்முறையாகும். நாட்டுக்கு ஒடிஷா அளிக்கும் கொடை இது என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அப்போது கூறினார்.
பள்ளியில் படிக்கும்போது ஹாக்கி அணியில் கோல் கீப்பராக ஆடியவர் நவீன் பட்நாயக். அதனால் அடிப்படையிலேயே அவர் தலைமையிலான அரசு ஹாக்கிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் சுமார் 20 விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2 ஹாக்கிக்காகவே பிரத்யேகமாக இயங்குகின்றன. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் ஹாக்கி புதிய திறமைகளை அடையாளும் காணும் வகையிலான மையம் செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இருந்து கிளை மையங்கள் மூலம் பலர் பயிற்றுவிக்கப்பட்டு, அங்கிருந்து திறமையானவர்கள் இங்கு வரவழைக்கப்படுகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாகவே சர்வதேச ஹாக்கி போட்டிகளை ஒடிஷா அரசு நடத்தி வருகிறது. 2018-ஆம் ஆண்டில் ஹாக்கி உலகக் கோப்பை நடத்துவதற்கான ஸ்பான்சர் ஓடிஷா அரசுதான். போட்டிகள் முழுக்க ஓடிஷாவிலேயே நடந்தன.
"ஓடிஷா ஹாக்கி ஆண்கள் உலகக் கோப்பை" என்ற பெயரிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன. 2023-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளையும் ஒடிஷா அரசே நடத்த இருக்கிறது.
இந்த இரு உலகக் கோப்பை போட்டிகளிலும், போட்டி நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்திய அணிக்கு பங்கேற்கும் தகுதி வழங்கப்பட்டது.
அடுத்த உலகக் கோப்பை போட்டிக்காக 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் ரூர்கேலாவில் சர்வதேச ஹாக்கி மைதானம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.356.38 கோடிசெலவில் கட்டப்படும் இந்த மைதானத்துக்கு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கட்டி முடிக்கப்படும்போது இதுவே இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமாக இருக்கும்.
ஒடிஷா அரசு ஹாக்கியை தேர்வு செய்து மேம்படுத்த முயற்சி செய்வதற்கு மற்றொரு பிரத்யேகமான காரணமும் உண்டு. "மாநிலத்தின் பழங்குடி குழந்தைகள் ஹாக்கி மட்டையைப் பிடித்துதான் நடைபழகுகிறார்கள்" என்று நவீன் பட்நாயக் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டுடன் மக்களுக்கு பிணைப்பு இருக்கிறது.
இப்போது ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் வரலாறு படைத்திருக்கின்றன. ஆண்கள் அணி அரையிறுதிப் போட்டியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை வென்றது.
இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கத்தை பெற்று பழைய பெருமையை மீட்டிருக்கிறது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெல்லும் 12 ஆவது பதக்கம் இது. இவற்றில் எட்டு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் ஆகியவை அடங்கும். அந்த வகையில் ஒலிம்பிக் வரலாற்றில் மிகச் சிறந்த ஹாக்கி அணி என்ற பெருமையை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 1928 முதல் 1956 வரை இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
ஆனால் அந்தப் பெருமையெல்லாம் 1980-ஆம் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் வரைதான். பிறகு படிப்படியாக திறமையும் புகழும் மங்கத் தொடங்கியன. பலமுறை இழந்த பெருமையை மீட்பதற்கு இந்திய அணி முயற்சி செய்திருக்கிறது. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.
அதிகபட்ச சோதனையாக 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. லண்டன் ஒலிம்பிக்கில் 12-ஆவது இடம் ரியோ ஒலிம்பிக்கில் 8-ஆவது இடம் என சமீப காலமாக பதக்கத்துக்கு அருகே கூட இந்திய அணி செல்லவில்லை.
இப்போது ஹாக்கியில் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் சாதனை படைத்திருப்பதால், ஒடிஷாவின் பெயர் முன்னிலைக்கு வந்திருக்கிறது.