வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (17:34 IST)

ஹாங்காங்: பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே சர்ச்சை ஏன்?

பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே ராஜீய சர்ச்சையாக ஹாங்காங் இருந்து வருகிறது.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கு அதனை காலனியாக வைத்திருந்த பிரிட்டன் ஆதரவளித்து வருகிறது.

"ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்" என்ற கொள்கையின் மூலம், சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள மக்களை விட ஹாங்காங் மக்களுக்கு வேறுபட்ட உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர வேண்டும் என்று பிரிட்டன் கூறகிறது.

ஆனால், இதற்கு மறுமொழியாக, சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் பிரிட்டன் தலையிடுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

என்ன நடக்கிறது?

குற்றவாளிகளை சீனாவிடமும், மக்கௌவிமும் ஒப்படைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பெருங்கூட்டமாக ஒன்றாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த மசோதா சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வரும் கேரி லெமால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட வரைவாகும். சீனாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மக்களை சீனாவிடம் ஒப்படைப்பதை இது எளிதாக்கிவிடும்.

இந்த மசோதா ஹாங்காங்கின் சுயாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கிறது என்றும், சுயாதீனமான சட்ட அமைப்பை புறக்கணிக்கிறது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாதிடுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை சீனா பயன்படுத்தலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
மக்கள் பெருந்திரளாக போராடியதை தொடர்ந்து, இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் கைவிடப்படவில்லை.

போராட்டக்காரர்களின் வன்முறையை கண்டித்த பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட், அவர்களை ஒடுக்க சீனா வன்முறையை பயன்படுத்துமானால், அது கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார்.

ஹாங்காகின் உயரிய சுயாட்சிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

ஹண்ட் தெரிவித்த கருத்துக்களால் பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான சீன தூதர் லியு சியாவ்மிங் கூறியுள்ளார். பிரிட்டன் இரட்டை வேடத்தோடு செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்,


ஹாங்காங்கில் பிரிட்டனுக்கு என்ன பங்கு?

சீனாவோடு நடத்திய போரை தொடர்ந்து 156 ஆண்டுகளாக ஹாங்காங் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

1898ம் ஆண்டு ஹாங்காங்கை பிரிட்டன் விரிவடைய செய்தது. ஆனால், இந்த புதிய எல்லையை கொண்ட ஹாங்காங் 99 ஆண்டுகளுக்கு குத்தகையாக பிரிட்டனிடம் வழங்கப்பட்டது.

1984ம் ஆண்டு சீனாவோடு கூட்டு பிரகடனத்தில் அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்சர் கையெழுத்திட்டார்.

1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்படும் என்று இரு நாடுகளும் பல்வேறு நிபந்தனைகளோடு ஒப்புக்கொண்டன. இந்த நிபந்தனைகளில், ஹாங்காங்கிற்கு உயரிய சுயாட்சி உரிமை மற்றும் சீன பெருநிலப் பகுதியில் வழங்கப்படாத குறிப்பிட்ட உரிமைகளை பராமரிப்பது போன்றவை அடங்குகின்றன.

சீனாவின் கம்யூனிஸ்ட் மாதிரிக்கு வித்தியாசமாக இருக்கின்ற ஹாங்காங்கின் முதலாளித்துவ அமைப்பு தொடரும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் அதாவது 2047ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் சொற்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென ஹண்ட் தெரிவித்துள்ளார்,

பிரிட்டனை சேர்ந்த மூன்று லட்சம் பேர் ஹாங்காங்கில் வாழ்வதால், பிரிட்டனும் இதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

பொதுவாக, ஜனநாயகத்திற்கு பிரிட்டன் அரசு ஆதரவளிக்கவே விரும்புகிறது.


பிரிட்டனின் கருத்துக்கு சீனா கூறுவதென்ன?

பிரிட்டனும், சீனாவும் செய்து கொண்ட கூட்டு பிரகடனம் இன்னும் செல்லுபடியாகுமா? என்பது பற்றி விவாதம் தொடர்கிறது. இதுவொரு வரலாற்று ஆவணம் மட்டுமே என்கிறது சீனா.

1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தால் ஹாங்காங் ஆளப்பட்டு வருவதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடிப்படை சட்டம் என்று அறியப்படும் இது, இந்த பகுதியின் ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்" என்பதை குறிக்கிறது.

இருப்பினும், இந்த கூட்டு பிரகடனம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்கிறது பிரிட்டன். இது பற்றி பல ஆண்டுகளாக சீனாவும், பிரிட்டனும் முரணாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

சீனாவுக்கு ஏற்படும் கடுமையான விளைவுகள் என்ன?

சீனாவுக்கு ஏற்படும் கடுமையான விளைவுகள் பற்றி தெளிவாக தெரியவில்லை. இதுதான் இந்த பிரச்சனையில் முக்கியமானது.

எல்லாவித தெரிவுகளும் முன்னுள்ளதாகவும், சீன தூதர்களை வெளியேற்றுவது, அல்லது தடைகளை விதிப்பது போன்ற சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை என்று ஹண்ட் தெரிவித்துள்ளார்.

ஆனால், மிகவும் கடுமையான பதில் நடவடிக்கை சீனா மீது இருக்காது என்றே தோன்றுகிறது. சீனாவோடு பொருளாதார உறவுகளை வளர்த்து கொள்வதற்காக கடந்த மாதம்தான் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரிட்டன் கையெழுத்திட்டுள்ளது.