திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (23:42 IST)

பாகிஸ்தான் வரலாறு: ராணுவ ஜெனரல் பதவி வகித்தவர்கள்

Minister of Pakistan
பாகிஸ்தானில் ராணுவ ஜெனரல் நியமனத்தின் முக்கியத்துவத்தை, கடந்த ஓராண்டாக இந்த விவகாரம் தொடர்பாக நடந்து வரும் விவாதம் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் மூலம் அறியலாம்.
 
தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வாவின் பதவி நியமனம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் அறிக்கைகள் தவிர, பாகிஸ்தானின் வரலாற்றைப் பார்த்தால், ராணுவத் தளபதிகளின் நியமனங்கள் மற்றும் பதவிக்காலம் பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளன.
 
பாகிஸ்தான் ராணுவத்தின் முதல் 'உள்ளூர்' தலைமைத் தளபதியான, பாகிஸ்தானில் முதல் ராணுவ ஆட்சியை கொண்டுவந்த ஃபீல்ட் மார்ஷல் அயூப் கான் முதல் ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா வரை என ஏறக்குறைய எல்லா ராணுவ தளபதிகளும் ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
 
அரசுடனும் பிரதமர்களுடனும் உள்ள கருத்து வேறுபாடுகள் அல்லது நேரடி ஆதரவாக இருந்தாலும், ராணுவ ஜெனரல் பதவி வகிப்பவரின் பெயர் ராணுவ விவகாரங்களுடன் கூடவே அரசியல் மற்றும் அரசுடன் தொடர்புடையதாக உள்ளது.
 
பாகிஸ்தானின் வரலாற்றின் சில சுவாரஸ்யமான உண்மைகள் இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன.
 
இதில், அயூப்கானை ராணுவ தளபதியாக்கிய 'நிகழ்வு' முதல் ஜெனரல் ஆகாமலேயே ராணுவ தளபதியாக மாறியவர் வரையிலான அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
 
ராணுவ ஜெனரலான அயூப் கான்
 
பாகிஸ்தானின் ராணுவ வரலாற்றில், ஜெனரல் ஜியா-உல்-ஹக்கின் விமானம் விபத்துக்குள்ளானது பொதுவாக அனைவருக்கும் நினைவிருக்கிறது. ஆனால் பஹாவல்பூரில் நடந்த இந்த விபத்துக்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. இது வரலாற்றின் பக்கங்களில் எங்கோ தொலைந்து போனது.
 
1950 டிசம்பர் 12 ஆம் தேதி லாகூரிலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானம் அதன் இலக்கிலிருந்து (கராச்சி) 65 மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 26 பேரில் யாருமே உயிர் பிழைக்கவில்லை.
 
இருப்பினும், இந்த 26 பேரில் இரு நபர்களின் மரணம் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றை மாற்றியது.
 
அவர்கள் மேஜர் ஜெனரல் முகமது இஃப்திகார் கான் மற்றும் பிரிகேடியர் ஷேர்கான். மேஜர் ஜெனரல் இஃப்திகார், சேவையின் அடிப்படையில் அயூப் கானுக்கு ஒரு வருடம் இளையவர். ஆனால் அவருக்கு முன்னதாகவே பதவி உயர்வு கிடைத்தது மற்றும் லாகூரில் பிரிவின் கட்டளை வழங்கப்பட்டது.
 
மேஜர் ஜெனரல் இஃப்திகார் பாகிஸ்தானின் முதல் உள்ளூர் தளபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்றும் எனவே அவர் இம்பீரியல் பாதுகாப்பு பயிற்சிக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்பட இருந்தார் என்றும் பல எழுத்தாளர்கள் தெரிவித்துளனர்.
 
அவருடன் விபத்தில் இறந்த பிரிகேடியர் ஷேர்கான், காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்த முதல் போரில் முக்கிய பங்கு வகித்தவர். ராணுவத்தின் சிறந்த அதிகாரிகளில் ஒருவராக அவர் கருதப்பட்டார்.
 
ஜெனரல் இஃப்திகார் ஒரு நல்ல அதிகாரி என்றும், பிரிட்டன் அவரை ஆதரித்தது என்பது ஒரு பொதுவான கருத்து என்றும் அயூப் கான் தனது 'ஃப்ரெண்ட்ஸ் நாட் மாஸ்டர்ஸ்' புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
அவர் எப்படி தளபதியாக ஆகியிருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவருக்கு சிரமங்கள் இருந்திருக்கும் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இஃப்திகார் மிக விரைவாக கோபப்படுவார் என்றும் ஆயூப் கான் எழுதியுள்ளார்.
 
பிரதமர் லியாகத் அலி கான், மேஜர் ஜெனரல் இஃப்திகாருக்கு தளபதி பதவியை அறிவித்த நாளில், தான் அவருடன் இருந்ததாக,பின்னர் மேஜர் ஜெனரலாக ஆன ஷேர் அலி கான் பட்டோடி தெரிவித்ததாக, ஷுஜா நவாஸ் தனது 'க்ராஸ் ஸ்வோர்ட்ஸ்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
இந்த முடிவிற்குப் பிறகு, அயூப் கான் தளபதியாக பதவியேற்க இருந்த இஃப்திகாரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார் என்றும் மேஜர் ஜெனரல் ஷேர் அலி கான் பட்டோடி குறிப்பிடுகிறார்.
 
ஜெனரல் இஃப்திகார் ஒரு அமைதியான ஆனால் மிகவும் புத்திசாலியான நபர். அவர் இந்த முடிவிற்குப் பிறகு மகிழ்ச்சியாக இல்லாமல் வருத்தமாக இருந்தார் என்றும் ஷேர் அலி கான் தெரிவிக்கிறார்.
 
இருப்பினும் விமான விபத்தில் இஃப்திகார் இறந்த பிறகு அயூப் கான் தளபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் இறுதியில் நாட்டின் அதிபராக ஆனார். அவரது பதவிக்காலத்தில் ஏழு பிரதமர்கள் மாற்றப்பட்டனர்.
 
தளபதியை பதவி விலக வற்புறுத்திய ராணுவ அதிகாரிகள்
பாகிஸ்தானின் ராணுவ மற்றும் அரசியல் வரலாற்றில் யாஹ்யா கான் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்துள்ளார். கிழக்கு பாகிஸ்தானின் பிரிவினைக்கும், 1971 போரில் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டதற்கும் அவர்தான் பொறுப்பு என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் 1971 டிசம்பர் 16 ஆம் தேதி டாக்காவில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்த பிறகும், யாஹ்யா கான் நாட்டின் அதிபராகவும், ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்து இருந்தார்.
 
டிசம்பர் 17ஆம் தேதி யாஹ்யா கான் புதிய அரசியலமைப்பை கொண்டு வரத் தயாராகிறார் என்ற செய்தி பரவியபோது ராணுவ அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதாக, ஷுஜா நவாஸ் தனது 'க்ராஸ் ஸ்வோர்ட்ஸ்’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
குஜ்ரன்வாலாவில் இருந்த பிரிகேடியர் ஃபரூக் பக்த் அலியும் இந்த அதிகாரிகளில் அடங்குவார். ”நான் எனது ராஜினாமா கடிதத்தை டிசம்பர் 17 ஆம் தேதி எழுதிவிட்டேன். ஆனால் யஹ்யா கானுக்கு ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை என்பதை டிசம்பர் 18 ஆம் தேதி அறிந்தபோது, நாங்கள் ஆச்சரியப்பட்டோம்,”என்று 'Conduct in Becoming' என்ற புத்தகத்தில் ஃபரூக் பக்த் அலி எழுதியுள்ளார்.
 
”மேலும் பல அதிகாரிகளும் என்னை தொடர்புகொண்டனர். 'யாஹ்யா கான் ராஜிநாமா செய்து, சிவிலியன் அரசியல்வாதிகளிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று GHQ இல் உள்ள உயர் அதிகாரிகளுக்கு செய்தி அனுப்ப எனது பிரிவின் தளபதியை வற்புறுத்த முயன்றேன்,”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அடுத்த நாள், அதாவது டிசம்பர் 19 அன்று, பிரிகேடியர் எஃப்.பி. அலி இரண்டு அதிகாரிகளை GHQ க்கு அனுப்பினார். தோல்விக்கு காரணமான யாஹ்யா கானும் அவரது நெருங்கிய ஜெனரலும் இரவு 8 மணிக்குள் ராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற செய்தி அவர்கள் மூலம் அனுப்பப்பட்டது.
 
உண்மையில் இது ராணுவத்திற்குள் நடந்த ஒரு வகையான புரட்சி..
 
இந்தச் செய்திக்குப் பிறகு, ராணுவ உயர் அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது என்றும், யஹ்யா கானின் நெருங்கிய உதவியாளரான மேஜர் ஜெனரல் மிட்டா, இஸ்லாமாபாத் நோக்கி வரும் ராணுவத் தொடரணியை நிறுத்துமாறு எஸ்எஸ்ஜியை(special sevices group) தொடர்பு கொண்டதாகவும் ஷுஜா நவாஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
மேஜர் ஜெனரல் மிட்டா, பிரிகேடியர் எஃப்.பி. அலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, யஹ்யா கானுக்குப் பதிலாக ஜெனரல் அப்துல் ஹமீத் கான் தலைமைத் தளபதியாக ஏற்றுக்கொள்ளப்படுவாரா என்று கேட்டதாகவும், அதற்கு அவர் எதிர்மறையாக பதிலளித்ததாகவும் ஷுஜா நவாஸ் எழுதுகிறார்.
 
அடுத்த நாள் யஹ்யா கானுக்கு மாற்றாக தான் இருக்க முடியுமா என்பதை அறிய GHQ-ல் இருந்த அதிகாரிகளை ஜெனரல் ஹமீத், ஒன்று கூட்டினார். ஆனால் ராணுவ அதிகாரிகள் தற்போதைய தலைமையின் மீது முழு அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர். அவரும் பதவி விலகவேண்டும் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தினர் என்று ஷுஜா நவாஸ் குறிப்பிடுகிறார்.
 
யாஹ்யா கான் நிலைமையை உணர்ந்தபோது அவரும் பல அதிகாரிகளை அணுகினார். ஆனால் ராணுவ தலைவர் ஜெனரல் குல் ஹசன் மற்றும் விமானப்படைத் தலைவரும் அவரை ராஜினாமா செய்ய ஒப்புக்கொள்ள வைத்தனர். இதனால் பாகிஸ்தான் ராணுவத்தின் ஐந்தாவது தளபதியும், நாட்டின் மூன்றாவது அதிபருமான அவரின் நாற்காலி பறிபோனது.
 
ராணுவத்தின் இளைய அதிகாரிகள் உயர் தலைமையை ராஜினாமா செய்ய வற்புறுத்தியது ஒருவேளை இதுவே முதல் முறை என்று ஷுஜா நவாஸ் எழுதுகிறார்.
 
இந்தியாவுடனான போரின் போது,சுல்ஃபிகர் அலி புட்டோ, ஜெனரல் குல் ஹசன் கான் மற்றும் விமானப்படைத் தலைவர் ரஹீம் கான் மூவரையும் தான் சீனாவுக்கு அனுப்பியபோது அங்கு அவர்கள் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக லாகூர் உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையின் போது யாஹ்யா கான் குறிப்பிட்டதாக, ஷுஜா நவாஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
இந்த முழு கதையிலும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, புட்டோவின் சிவில் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதற்காக பிரிகேடியர் FB அலி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ராணுவ விசாரணை நடத்திய குழுவிற்கு ஜெனரல் ஜியா-உல்-ஹக் தலைமை தாங்கினார். அவர் பின்னாளில் ராணவ தளபதியாக ஆனார்.
 
சில ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிகேடியர் FB அலி, கோட் லக்பத் சிறையில் தனிமைச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். அவரிடமிருந்து நூறு அடி தொலைவில் இருந்த மற்றொரு அறையில், சுல்ஃபிகர் அலி பூட்டோ கொலைக்குற்றத்திற்காக அடைக்கப்பட்டிருந்தார்..
 
பாகிஸ்தான்
பட மூலாதாரம்,OXFORD PAKISTAN
ஒரு லெப்டினன்ட் ஜெனரல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டபோது
சுல்ஃபிகர் அலி புட்டோ அசாதாரண சூழ்நிலையில் பாகிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றினார். நாடு இரண்டாகப் பிரிந்தது. ராணுவம் பொதுமக்களின் கோபத்தை எதிர்கொண்டது. அத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தானின் ராணவ சட்ட நிர்வாகி என்ற பெருமையை பெற்ற முதல் சிவிலியனாக சுல்ஃபிகர் அலி புட்டோ ஆனார்.
 
இந்த அசாதாரண சூழ்நிலைகளில், அவர் அசாதாரண முடிவுகளை எடுத்தார். அதில் ஒன்று பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக ஒரு லெப்டினன்ட் ஜெனரலை ராணுவ தளபதியாக நியமனம் செய்வது.
 
அவர்தான் குல் ஹசன் கான். புட்டோ அதிகாரத்தை ஏற்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
 
குல் ஹசன் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கடைசி தளபதியாக இருந்தார். ஏனென்றால் இந்தப்பதவி Chief of army staff என்று மறுபெயரிடப்பட்டது.
 
எனினும், லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் இருந்த அவர் ஏன் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்தப் பதவி எனக்கு வழங்கப்பட்டபோது, லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்துடனேயே என்னை தலைமைத் தளபதியாக நியமிக்குமாறு சுல்ஃபிகர் அலி புட்டோவிடம் நிபந்தனை விதித்தேன் என்று குல் ஹசன் கான் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
 
இருப்பினும் சுல்பிகர் அலி பூட்டோ ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ’குல் ஹசன் கானை தற்காலிகமாக தளபதி பதவிக்கு’ உயர்த்தியுள்ளேன். அதாவது அவர் நான்கு நட்சத்திர தளபதியாக ஆக்கப்படுவார் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், இந்த நேரத்தில் இதுபோன்ற விஷயங்களை நாடு பொறுத்துக் கொள்ளாது என்று கூறியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
பாகிஸ்தான் விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் ரஹீம் கான் (வலது) மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் கடைசி தளபதியான ஜெனரல் குல் ஹசன் கான் (இடது)
 
நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள் என்று பின்னர் பூட்டோவிடம் கேட்டபோது, உங்களுக்கு அரசியல் புரியாது என்று பதிலளித்தார் என்றும் குல் ஹசன் எழுதியுள்ளார்.
 
ஒருவேளை இங்கிருந்துதான் புட்டோவிற்கும் அவரால் நியமிக்கப்பட்ட முதல் ராணுவ தளபதிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம்.
 
ராணுவ விவகாரங்களில் தலையீடு கூடாது என்பது எனது இரண்டாவது நிபந்தனை என்று குல் ஹசன் கான் எழுதுகிறார். புட்டோ அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அதை நீண்ட காலம் கடைபிடிக்கவில்லை. ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு குழுவில் புட்டோ இருக்க விரும்பினார். ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
 
கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரித்தபோது ஒரு நாள் சுல்பிகர் அலி புட்டோ, குல் ஹசன் கானையும், விமானப்படைத் தலைவர் ரஹீம் கானையும் அதிபர் மாளிகைக்கு வரவழைத்து, அவர்களை இந்தப்பதவிகளில் இருந்து நீக்குவதாகவும், ராஜிநாமாவில் கையெழுத்திடும்படியும் கூறினார்.
 
இதன்மூலம் அவர் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்துடன் ராணுவத் தளபதி ஆன முதல் அதிகாரி மட்டுமல்லாமல், பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சிவில் ஆட்சியாளரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் ராணுவ தளபதியாகவும் ஆனார்.
 
குல் ஹசன் கான், பாகிஸ்தான் ராணுவத்தில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய தளபதியாகவும் ஆனார். அவருடைய பதவிக்காலம் இரண்டரை மாதங்கள் மட்டுமே நீடித்தது.
 
 
குல் ஹசனுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தை சிறிதுகாலம் வழிநடத்திய ஜெனரல் ஆசிப் நவாஸ் ஜன்ஜுவா, ராணுவ தளபதியாக ஒரு வருடம் ஐந்து மாதங்கள் மட்டுமே இருந்தார். 1993ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி தளபதி பதவியில் இருந்தபோதே அவர் மாரடைப்பால் காலமானார்.
 
நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை இருந்தது. நேரடி ராணுவத் தலையீடு பற்றிய வதந்திகள் உச்சத்தில் இருந்தன. நவாஸ் ஷெரீப் பிரதமராகவும், குலாம் இஸாக் கான் அதிபராகவும் இருந்தனர்.
 
குலாம் இஸாக் கான் லெப்டினன்ட் ஜெனரல் ஃபரூக் கானை ராணுவத் தளபதியாக்க விரும்புவதாகவும், ஆனால் நவாஸ் ஷெரீப் அதற்கு ஆதரவாக இருக்கவில்லை என்றும் ஜெனரல் ஆசிப் நவாஸின் சகோதரர் ஷுஜா நவாஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
குவெட்டா படைக்கு லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் வஹீத் கக்கர் தலைமை தாங்கினார். பிரையன் கிளாஃப்லி தனது 'பாகிஸ்தான் ஆர்மி: எ ஹிஸ்டரி ஆஃப் வார் அண்ட் இன்ஸரெக்ஷன் என்ற புத்தகத்தில், ”அப்துல் வஹீத் கக்கர் இது தனது கடைசி பதவி என்று கருதியதாகவும், ஓய்வு பெற்று வீட்டிற்கு செல்ல தயாராகி வந்ததாகவும்,” எழுதியுள்ளார்.
 
அதிபர் குலாம் இஸாக் கானுக்கும், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, ராணுவ தலைமை பதவி அவர் பக்கம் வந்தது.
 
ராணுவ ஆட்சியை விதிக்க ஜெனரல் அப்துல் வஹீத் கக்கர் மீது நிறைய அழுத்தம் இருந்ததாகவும், ஆனால் அவர் நாட்டின் அரசியல் பதற்றத்திற்கு அரசியல் தீர்வைக் காண விரும்பியதாகவும் ஷூஜா நவாஸ் தனது ‘க்ராஸ் ஸ்வோர்ட்ஸ்’புத்தகத்தில் எழுதுகிறார்.
 
அந்த நேரத்தில் அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தைக் கலைக்க நாட்டின் அதிபருக்கு உரிமை இருந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெனாசிர் புட்டோவின் முதல் பிரதம மந்திரி பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்க குலாம் இஸாக் கான் இதை ஏற்கனவே பயன்படுத்திவிட்டார். 1993ல் நவாஸ் ஷெரீப்பின் அரசுக்கு எதிராக அவர் இந்த உரிமையை இரண்டாவது முறையாகப் பயன்படுத்தியபோது, உச்ச நீதிமன்றம் அதை சட்டவிரோதமானது என்று அறிவித்தது. நவாஸ் ஷெரீப்பின் அரசு பிழைத்தது.
 
நீதிமன்றத்தின் இந்த முடிவிற்குப் பிறகு நவாஸ் ஷெரீப், பஞ்சாபில் மக்கள் கட்சி அரசை கவிழ்க்க ரேஞ்சர்களின் உதவியை நாட முயன்றார். ஆனால் ராணுவ தளபதி ஜெனரல் அப்துல் வஹீத் அவரது வழியைத் தடுத்தார் என்று ஷுஜா நவாஸ் எழுதுகிறார்.
 
நாட்டில் அதிகரித்து வந்த பதற்றங்களின் பின்னணியில் புதிய தேர்தலை நடத்தும்பொருட்டு, பதவி விலகுமாறு அதிபர் குலாம் இஷாக் கான் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, ஜெனரல் அப்துல் வஹீத் கக்கர் சம்மதிக்க வைத்தார். இதன் விளைவாக பெனாசிர் புட்டோவின் இரண்டாவது அரசு உருவானது என்று ஷுஜா நவாஸ் குறிப்பிடுகிறார். .
 
அவரை அரசியலில் தலையிட வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவர் தலையிடவில்லை என்று ஜெனரல் வஹீத் கக்கரைப் பற்றி பெனாசிர் பூட்டோ கூறினார்.
 
ஒரு பிரதமரால் பதவி நீட்டிப்புக்கு முன்மொழியப்பட்டு, அதை மறுத்துவிட்ட ஒரே ராணுவத் தலைவர் அப்துல் வஹீத் கக்கர்.
 
மூன்றாண்டுகளை முடித்துவிட்டு பதவி விலகிய முதல் ராணுவ தளபதி இவர்தான்.
 
அஸ்லம் பெய்க் ராணுவத் தளபதி ஆவதற்குக் காரணமான விபத்து
1988 ஆகஸ்ட் 17 ஆம் தேதி பாகிஸ்தானின் துணை ராணவ தலைவர் ஜெனரல் அஸ்லம் பெய்க் விமானம் மூலமாக விபத்துநடந்த இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
 
அஸ்லம் பெய்க் தனது சுயசரிதையான 'கம்பல்ஷன்ஸ் ஆஃப் இக்திதாரில்', ”எங்களுக்கு முன்னால் புகை தெரிந்தது.
 
அடுத்த கணமே எங்கள் விமானம் அதன் அருகே சென்றது. ஒரு ஹெலிகாப்டரும் அங்கு தரையிறங்கியது, ஹெலிகாப்டரின் பைலட்டைத் தொடர்பு கொண்டபோது, 'பாகிஸ்தானின் C130 விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், யாரையும் காணவில்லை என்றும் அவர் கூறினார். அத்தகைய சூழ்நிலையில், நான் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. நான் விபத்து நடந்த இடத்தை அடைந்திருந்தாலும், என்னால் எதுவும் செய்ய முடிந்திருக்காது. எனவே நேராக ராவல்பிண்டிக்கு செல்லும்படி பைலட்டை கேட்டுக் கொண்டேன்,”என்று எழுதியுள்ளார்.
 
பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா-உல்-ஹக் மற்றும் பலர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தனர்.
 
'ஜிஹெச்க்யூவைத் தொடர்பு கொண்டபோது, அங்கு நிலைமை அமைதியாக இருந்தது. ஃபார்மேஷன்களுக்கு தீவிர உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டது. அடுத்த உத்தரவுக்காக காத்திருக்குமாறும் கூறப்பட்டது, விமானத்தில் என்னுடன் அமர்ந்திருந்த அதிகாரிகள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் சிந்தனையில் ஆழ்ந்தேன். அதிகாரத்தை என் கையில் எடுத்துக்கொள்வதா அல்லது உரிமையுள்ளவரிடம் அதை ஒப்படைப்பதா என்பதை நான் தீர்மானிக்க வேண்டியிருந்தது,”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
விமான விபத்தில் ஜியா-உல்-ஹக் காலமானதை அடுத்து ஜெனரல் அஸ்லம் பெய்க், ராணுவத்தலைவர் ஆனார்.
 
ஜெனரல் ஜியாவின் மரணம் மற்றும் அஸ்லம் பெய்க் ராணுவத் தளபதியாக ஆன மூன்று மணி நேரத்திற்குள் அரசியலமைப்பு மீட்டெடுக்கப்பட்டது. 90 நாட்களில் முடிவடைய வேண்டிய அதிகார பரிமாற்ற செயல்முறை தொடங்கியது.
 
ராணுவ ஆட்சியை விதிக்க ஜெனரல் அஸ்லம் பெய்க் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அவர் வாக்குறுதியளித்தபடி தேர்தலை நடத்தினார். ஆனால் இந்தத் தேர்தல்களின் போது பாகிஸ்தான் மக்கள் கட்சியை எதிர்த்து சர்ச்சைக்குரிய அரசியல் முன்னணியான ஐஜேஐ அமைக்கப்பட்டது குறித்தும் நவாஸ் ஷெரீப் ஆட்சிக்கு வந்தது குறித்தும் அதிகம் எழுதப்பட்டுள்ளது.
 
1999 ஆம் ஆண்டு இறுதியில், அக்டோபர் 12 ஆம் தேதி, நவாஸ் ஷெரீப் திடீரென அப்போதைய ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜியாவுதீனை பிரதமர் இல்லத்திற்கு அழைத்து, அவரை ராணுவத் தலைவராக ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 
அப்போதைய ராணுவத்தலைவர் ஜெனரல் முஷாரப்ஃபின் விருப்பத்திற்கு மாறாக நவாஸ் ஷெரீப், அவரை ஐஎஸ்ஐ தலைவராக நியமித்தார். மேலும் அவர் நவாஸ் ஷெரீப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்று நம்பப்பட்டது.
 
இருப்பினும், ஐஎஸ்ஐ தலைவர் பதவிக்கு நேர்காணல் செய்யப்பட்டபோதுதான் நவாஸ் ஷெரீப்பை தான்முதல் முறையாக சந்தித்ததாக ஜெனரல் ஜியாவுதீன் தெரிவிக்கிறார்.
 
ஆனால் அக்டோபர் 12 ஆம் தேதி அவர் திடீரென ராணவத்தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிரான ராணுவத்தின் நடவடிக்கை காரணமாக ஜனநாயகத்தின் கதவுகள் மூடப்பட்டன.
 
அந்த நேரத்தில் இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்துகொண்டிருந்த அப்போதைய ராணுவத் தலைவரான ஜெனரல் முஷாரஃப் பாகிஸ்தானில் தரையிறங்கி, ஆட்சியை கைப்பற்றினார்.
 
ஜெனரல் முஷாரப்ஃபுக்கு முன்னதாக ராணுவத் தளபதி பதவியில் இருந்த ஜெனரல் ஜஹாங்கீர் கராமத்தும் நவாஸ்
 
ஷெரீப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பதவி விலகிவிட்டார்.