1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (23:14 IST)

"அரசியல் சாசன தினமா, கட்டப்பஞ்சாயத்து தினமா?": சா்ச்சையாகும் யுஜிசி சுற்றறிக்கை விவகாரம்

இந்திய அரசியலமைப்பு தினத்தன்று பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சர்ச்சைக்குரிய தலைப்புகளில் கருத்தரங்கங்களை நடத்த வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சாசன தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா புதிய அரசியலமைப்பை ஏற்றுகொண்ட தினமே அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படுகிறது.
 
இந்த ஆண்டும் இதுபோல கொண்டாட வேண்டுமென இந்திய அரசின் கேபினட் செயலர் ராஜீவ் கௌபா அனைத்துத் துறை செயலர்களுக்கும் இந்த நவம்பர் 7ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.
 
இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறையின் செயலர் குடே ஸ்ரீநிவாஸ், இன்னொரு கடிதத்தை செயலர்களுக்கு அனுப்பினார்.  
 
அந்த கடிதத்தில், அரசியல் சாசன தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட வேண்டுமென்றும் இது தொடர்பாக வரலாற்று ஆய்வுக்கான இந்திய கவுன்சில் உருவாக்கிய ஒரு கருத்துரு அந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த அடிப்படையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜினீஷ் ஜெயின் ஒரு சுற்றறிக்கையை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
 
அதில், இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று குறிப்பிட்டிருப்பதோடு இந்தியாவுக்கு ஜனநாயகப் பாரம்பரியம் இருந்திருக்கிறது என்பதற்கு வேத காலத்திலிருந்து ஆதாரம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆகவே இந்த வருட அரசியலமைப்பு தினத்தை "இந்தியா: ஜனநாயகத்தின் தாய்" என்ற தலைப்பில் கருத்தரங்குகளை நடத்துவதன் மூலம் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
அதன்படி, ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் காலைக் கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும், அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படைக் கடமைகள் என்னவென்று வாசிக்க வேண்டும், ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் அடிப்படைக் கடமைகள் குறித்த ஒரு விரிவுரையை ஏற்பாடு செய்ய வேண்டும், அடிப்படைக் கடமைகளை கல்வி நிலையத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சுற்றறிக்கையில் என்ன உள்ளது?
 
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே, யுஜிசியின் கடிதத்தில் இந்தியா ஜனநாயகத்தின் தாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
 
இந்தியன் கவுன்சில் ஃபார் ஹிஸ்டாரிகல் ரிசர்ச் இந்த தினத்திற்காக உருவாக்கிய கருத்துருதான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
 
அந்தக் கட்டுரை, Bharat: Loktantraki Ki Janani என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
 
"இந்தியாவில் வேத காலம் முதற்கொண்டு ஜனபாதம், ராஜ்யபாதம் என இரண்டு வகையான அரசுகள் இருந்துவருகின்றன. கிராம மட்டத்திலும் மத்திய மட்டத்திலும் அரசுகளை உருவாக்குவதில் இந்தியாவுக்கு என ஒரு அனுபவம் இருக்கிறது.
 
1. மத்திய அரசியல் அமைப்பும் கிராம சமூகமும் தனித்தனியாக இருந்தன. இதனால், கிராம சமூகங்கள் சுயாட்சி செய்பவையாக இருந்தன. பஞ்சாயத்து, காப் பஞ்சாயத்து போன்ற சுயாட்சி அமைப்புகளையும் அவை உருவாக்கின.
 
இதன் காரணமாக, அரசுகள் மாறுவதால் குறிப்பாக இந்து கலாச்சாரத்திற்கு விரோதமான ஆக்கிரமிப்பாளர்களின் வருகையால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருந்தனர்.
 
வேற்று இனத்தைச் சேர்ந்தவர்கள், கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களின் ஆக்கிரமிப்பைத் தாண்டியும் இந்துக் கலாச்சாரம் நீடித்திருந்தது இப்படித்தான்.
 
இந்தியாவில் பல காலமாக ஜனநாயகம் பரிணமித்துவந்திருக்கிறது. பாரதத்தின் லோகதந்திரிக பாரம்பரியத்தை தொல்லியல், இலக்கிய, நாணய ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மக்களின் சுய ஆட்சி என்பது வேத காலத்தில் இருந்து இருக்கிறது.
 
க்ரீஸிலும் ரோமிலும் இருந்த அரசியல் தத்துவங்களுக்கு மாறானது பாரதீய அரச தத்துவம். இந்தியாவில் எப்போதும் உள்ளுணர்விற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. க்ரீஸில் இருந்ததைப் போல இங்கே அரச பரம்பரை இல்லை. ரோமானிய சாம்ராஜ்யத்தில் இருந்ததைப் போல மையப்படுத்தப்பட்ட அதிகாரம் இந்து அரசில் இல்லை.
 
இந்தியர்கள் வேத காலத்திலிருந்தே லோகதந்திரிக பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள்" என நீண்டுகொண்டே போகிறது இந்த கருத்துரு.
 
இதற்குப் பிறகு சர்ச்சைக்குரிய வகையில் பல துணைத் தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ரிக் வேதமும் பாரத லோகதந்திரிக பாரம்பரியமும், சபாவும் சமிதியும்: பாரத லோகதந்திரிய பாரம்பரியத்தை ஆராய்தல், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் பாரத லோகதந்திரமும், கல்வெட்டு ஆதாரங்களும் லோகந்திரிக பாரம்பரியமும், காப் பஞ்சாயத்துகளும் லோகதந்திரிக பாரம்பரியமும் என 15 உப தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
இந்தத் தலைப்புகள்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன.
 
"அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? இது கான்ஸ்டிடியூசன் நாளா? கட்டப் பஞ்சாயத்து நாளா? ஜனநாயகத்திற்கான நாளினை சனாதனத்தின் நாளாக மாற்ற  கருத்துத்தாள் வழங்கியுள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் மீதும்,  யு.ஜி.சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைத் தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியிருக்கிறார்.
 
"முன்னுதாரன மன்னர்" - "கிராம பாரம்பரிய பஞ்சாயத்து" என்ற உள்ளடக்கத்தில் கல்லூரிகளில் உரைகள் நிகழ்த்த யு.ஜி.சி உத்தரவு.
 
"உலகில் உள்ள எல்லா மகத்தான நூல்களுமே மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியைக் குறிப்பிட்டுத்தான் துவங்குகின்றன. ஆனால், இந்திய அரசியல் சாசனம் மட்டும்தான். இந்திய மக்களாகிய நாங்கள் எங்களுக்கு நாங்களே வழங்கிக்கொண்ட சாசனம்' என்று கூறி அது துவங்குகிறது.
 
அவ்வளவு மகத்தான சாசனம் அது. மன்னராட்சி, கட்டப்பஞ்சாயத்து, நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை மறுத்து உருவானதுதான் நம்முடைய அரசியல் சாசனம். அந்த அரசியல் சாசனத்தின் உள்ளடக்கத்தைச் சிதைப்பதற்காகவே கட்டப்பஞ்சாயத்தின் பெருமை, மன்னராட்சியின் பெருமையைப் பற்றி கருத்தரங்கு நடத்தச் சொல்கிறார்கள். இந்தியாவில் எல்லா மட்டங்களிலும் தங்களுக்கான மனநிலையை வடிவமைப்பதுதான் இதன் நோக்கம். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்"  என்கிறார் சு. வெங்கடேசன்.
 
பல்கலைக்கழக மானியக் குழு இதுபோன்ற ஒரு கடிதத்தை அனுப்பியிருப்பதால், இந்தக் கருத்தரங்குகளை நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறதா? "அப்படி எந்தக் கட்டாயமும் கிடையாது. பல்கலைக்கழக மானியக் குழு, பல்கலைக்கழகங்களுக்கு மானியம் அளிப்பதோடு சரி. வேறு எதிலும் தலையிட முடியாது. இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென கடிதம் அனுப்பலாம். ஆனால், அதைக் கேட்டு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏதும் கிடையாது" என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான டாக்டர் கலாநிதி.
 
இந்திய அரசியல் சாசனம்
 
இதனை ஒரு ஆலோசனையாகச் சொல்லியிருந்தால் கூட கல்வி நிலையங்கள் இதனைப் பரிசீலிக்கலாம். ஆனால், அதனுடன் அனுப்பியிருக்கும் கருத்துரு, ஆர்எஸ்எஸ்சின் செயல்திட்டத்தை பிரதிபலிக்கிறது. இதை எப்படி கல்லூரி மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார் டாக்டர் கலாநிதி.
 
"கருத்தரங்குகளை நடத்துகிறார்களா, இல்லையா என்பதெல்லாம் இதில் விஷயமே கிடையாது. வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலை வைத்து இப்படி ஒரு கருத்துருவை அனுப்பச் செய்ய முடியும்போது, எதிர்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்"  என்கிறார் வெங்கடேசன்.
 
போராட்டத்துக்கு தயாராகும் அமைப்புகள்
 
இதற்கிடையே, அந்தச் சுற்றறிக்கையைப் புறக்கணிக்கும்படி பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் சொல்லப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தச் சொல்வதைக் கண்டித்து, திராவிடர் கழகம் தமிழ்நாட்டின் ஒன்பது நகரங்களில் வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.