'பாசிசம்' பெர்ஃப்யூம் - சமூக வலைதளங்களில் புயலை கிளப்பிய இஸ்ரேலிய விளம்பரம்
வாக்காளர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக வெளியிடப்பட்ட கட்சி விளம்பரம்
இஸ்ரேலில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வலது சாரி சட்ட அமைச்சர் ஒருவர் நடித்த புதிய விளம்பரம் அந்நாட்டில் சமூக வலைதள பயனர்களிடையே முக்கிய விவாத பொருளாகியிருக்கிறது.
அந்த விளம்பரத்தில் 'அதிக விலை' கொண்டது போல தோற்றமளிக்கும் ஒரு நறுமண திரவியத்தை சட்ட அமைச்சர் அயெலெட் ஷாகித் உடலில் ஸ்ப்ரே அடித்துக் கொள்கிறார். அந்த நறுமண திரவிய புட்டிக்கு 'ஃபாசிசம்' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
ஷாகெத் இது ஒரு சேட்டைத்தனமான விளம்பரம் என்கிறார் ஆனால் இது ஃபாசிசத்தை வலியுறுத்தும் விதமான விளம்பரமாக இருக்கிறது என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
தேர்தலை ஒட்டி சமூக வலைதளத்தில் இக்கட்சியில் பிரசாரம் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்தப் பார்க்கின்றனர்.
வாக்குப்பதிவுக்கு முந்தைய இரு வாரங்களுக்கு தொலைக்காட்சியில் பிரசார விளம்பரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பல்வேறு கட்சியினரும் சமூக வலைதளங்களில் தங்களது பிரசார காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
கருப்பு வெள்ளையில் தோன்றும் அந்த பிரசார காணொளியில் ஷாகித் ஒரு நறுமண திரவிய பிராண்ட் மாடலாக நடித்துள்ளார். ஒரு வசதியான வீட்டில் நடந்து வரும் அவருக்கு பின்னணியில் மெல்லிதாக பியானோ இசை ஒலிக்கிறது.
ஹீப்ரூ மொழியில் ஒரு பெண் முணுமுணுக்கிறார். நீதித்துறை சீர்திருத்தம், அதிகாரங்களை பிரித்தல், உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்துதல் போன்ற சொற்றொடர்களை அவர் முணுமுணுக்கிறார்.
பின்னர் ''ஃபாசிசம்'' என எழுதப்பட்டிருக்கும் நறுமண திரவியத்தை அடித்துக்கொள்ளும் ஷாகெத் '' எனக்கு, இது மக்களாட்சி போல வாசனை வருகிறது'' என அந்த விளம்பரத்தில் கூறுகிறார்.
அவரது தீவிர தேசியவாத அரசியலை சற்று கேலி செய்யும் விதமாக 'பரிகாச' விளம்பரம் அமைந்துள்ளது.
இதுவொரு பரிகாச விளம்பரம் எனத் தெரியாதவர்களுக்கு குறிப்பாக இஸ்ரேலுக்கு வெளியே இருப்பவர்களுக்கு இது பாசிச விளம்பரமாகவே அமையும் என்கின்றனர் விமர்சகர்கள். சமீபத்தில் இவரும், கல்வி அமைச்சரும் ஒரு புதிய கட்சியை துவங்கியுள்ளனர்.